![]() கோத்தா பெலுட் டூசுன் மக்கள் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
![]() (சபா) | 1,100,283 |
மொழி(கள்) | |
டூசுன் மொழி, சபா மலாய் மொழி, ஆங்கிலம் | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம் (பெரும்பான்மை), இசுலாம், மோமோலியனிசம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மூருட் மக்கள், இடான், லுன் பாவாங், ஆஸ்திரோனீசிய மக்கள் |
டூசுன் மக்கள் (மலாய்: Kaum Dusun அல்லது Bangsa Dusunik; ஆங்கிலம்: Dusun; சீனம்: 杜顺) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியா, வடக்கு போர்னியோ, சபா மாநிலத்தில் வாழும் பூர்வீகப் பழங்குடி மக்களாகும். இவர்கள் சபாவில் மிகப்பெரிய இனக்குழுவினராக உள்ளனர்.
டூசுன் இனத்தவர், 2004-ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பால் (UNESCO); போர்னியோவில் ஒரு பாரம்பரியப் பழங்குடி சமூகத்தவராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.[1]
டூசுன் இனத்தவரைப் போல் சமூகத் தொடர்புகள் இல்லாத பிற இனக் குழுவினர்களும் புரூணை மற்றும் இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (West Kalimantan), மத்திய கலிமந்தான் (Central Kalimantan) பகுதிகளில் காணப் படுகின்றனர்.
புரூணை நாட்டைச் சேர்ந்த டூசுன்களை (Bruneian Dusuns) அசலான டூசுன்கள் (Sang Jati Dusun) என்று அழைக்கிறார்கள். இவர்களும் சபாவின் டூசுன் இன மக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய டூசுனிய குடும்பக் குழுவைச் (Dusunic Family Group) சேர்ந்தவர்கள் தான்.
புரூணை நாட்டைச் சேர்ந்த டூசுன்கள், பொதுவாகவே வடக்கு சரவாக் மற்றும் தென்மேற்கு சபாவின் பிசாயா (Bisaya) மக்களுடன் பொதுவான தோற்றம், மொழி மற்றும் அடையாளத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்தோனேசியாவில், பாரித்தோ ஆற்றுப் பகுதிகளில் (Barito River System) முழுவதும் காணக்கூடிய பாரித்தோ டூசுன் இனக் குழுக்கள்; டூசுன் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. பாரித்தோ டூசுன்கள், உண்மையில் டானும் டயாக்கு (Danum Dayak) இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
டூசுன் மக்களின் சொற்களஞ்சியத்தில் 'டூசுன்' என்ற சொல் இல்லை. இன்றைய சபாவில் உள்ள உள்நாட்டு விவசாயிகளின் இனக் குழுக்களைக் குறிக்க புரூணை சுல்தானால் 'டூசுன்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2]
மலாய் மொழியில் 'டூசுன்' என்றால் 'தோட்டம்' என்று பொருள். வடக்கு போர்னியோவின் மேற்குக் கடற்கரையின் பெரும்பகுதி புரூணை சுல்தானின் செல்வாக்கின் கீழ் இருந்த போது, டூசுன் மக்களிடம் 'டூயிஸ்' (Duis) எனப்படும் வரி வசூலிக்கப்பட்டது. இதற்கு 'நதி வரி' (River Tax) என்றும் பெயர் உண்டு. அப்போது இருந்து டூசுன் எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று அறியப்படுகிறது.
1881-ஆம் ஆண்டு, பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (British North Borneo Company) நிறுவப்பட்ட பின்னர், போர்னியோவில் இருந்த 12 முக்கிய பழங்குடியினரையும் மற்றும் 33 துணை பழங்குடியினரையும் மொழியியல் ரீதியாக 'டூசுன்' என அந்த நிறுவனம் வகைப்படுத்தியது.
2018-ஆம் ஆண்டு மலேசியா சபா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மனித மரபியல் ஆய்வுக் குழுவால் மரபணு வகை தரவு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் இருந்து, வடக்கு போர்னியோவில் உள்ள டூசுன் மக்கள்; சோன்சோகன் (Sonsogon), ருங்குஸ் (Rungus), லிங்கபாவ் (Lingkabau), மூருட் (Murut) இனக்குழுவினர்; தைவான் பூர்வீகவாசிகளான அமி மற்றும் அடயல் (Taiwan Natives of Ami and Atayal) குழுவினருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்று கண்டு அறியப்பட்டது.
அத்துடன் போர்னியோ டூசுன் மக்கள்; ஆஸ்ட்ரோ-மெலனேசியர் (Austro-Melanesian) அல்லாத பிலிப்பீன்சு நாட்டின் விசயன் மக்கள் (Visayan), தகலாகு மக்கள் (Tagalog), இலோகானோ மக்கள் (Ilocan), மினனுபு (Minanubu) பிலிப்பினோ மக்களுடன் தொடர்பு உடையவர்கள் என்றும் கண்டு அறியப்பட்டு உள்ளது.[3]