டெட்ரா அயோடோநிக்கலேட்டு (Tetraiodonickelate) என்பது நான்கு அயோடைடு அயனிகள் [NiI4]2− ஒரு நான்முகியில் அமைக்கப்பட்டுள்ள நிக்கலின் ஓர் அணைவு அயனியாகும். [NiI4]2− கரைசல் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.[1] இந்த நிறம் சுமார் 530 நானோமீட்டருக்கும் 450 நானோமீட்டருக்கும் குறைவான அளவில் நிகழும் உறிஞ்சுதலால் ஏற்படுகிறது. அதிகபட்ச ஒளி பரிமாற்றம் சுமார் 620 நானோமீட்ட ர் ஆகும். இதுவும் சிவப்பு நிறமாக இருக்கும். அகச்சிவப்புக்கு அருகிலுள்ள பரந்த பலவீனமான உறிஞ்சுதல் 740 நானோமீட்டரில் காணப்படுகிறது.[1] இச்சேர்மத்தின் காந்தத் தருணம் ஒழுங்கற்ற முறையில் குறைவாக உள்ளது.[2]
நீர் அல்லது மெத்தனாலில் உள்ள இலித்தியம் அயோடைடு மற்றும் நிக்கல் அயோடைடு ஆகியவற்றின் கலவை [NiI4]2− அயனிகளை வளையஎக்சேன் -அமீன் கலவையாக பிரிக்கிறது. இக்கரைசல் இரத்த சிவப்பாக இருக்கும். [3]
ஏற்கனவே 1909 ஆம் ஆண்டில் அசிட்டோனில் கரைக்கப்பட்ட நிக்கல் அயோடைடு மற்றும் சோடியம் அயோடைடு கலவையானது சிவப்பு நிறத்தைக் கொண்டிருப்பதை காம்பி கவனித்திருந்தார். இந்த சிவப்பு நிறம் டெட்ரா அயோடோநிக்கலேட்டு இருப்பதால் ஏற்பட்டதாகும்.[1]
[(C6H5)3CH3As]2NiI4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட பிசு-டிரைபீனைல்மெத்திலார்சோனியம் டெட்ரா அயோடோநிக்கலேட்டு உப்பு சிவப்பு நிறத்தில் உள்ளது.[1] டிரைபீனைல்மெத்திலார்சோனியம் அயோடைடு சேர்மத்தையும் சூடான எத்தனாலில் கரைக்கப்பட்ட நிக்கல் அயோடைடையும் சேற்த்து வினைபுரியச் செய்வதால் இதை தயாரிக்கலாம். வீழ்படிவாக கிடைக்கும் சிவப்பு செதில்களை ஆல்ககால் குளிர்வதற்கு முன் வடிகட்ட வேண்டும், இல்லையெனில் விளைபொருள் சிதைந்துவிடும்.[1]
பிசு(டெட்ராயெத்திலமோனியம்) டெட்ரா அயோடோநிக்கலேட்டின் மூலக்கூறு எடை 826.8135 ஆகும். இதன் சிஏஎசு எண் 13927-28-1.[4]
1,2,6-டிரைமெத்தில்-பைராசினியம்-டெட்ரா அயோடோநிக்கலேட்டு சேர்மத்தின் சிஏஎசு எண் 88227-96-7 ஆகும்.