டேனிஷ் கோட்டை Fort Dansborg | |
---|---|
பகுதி: தமிழ்நாடு | |
தரங்கம்பாடி, தமிழ்நாடு, இந்தியா | |
தரங்கம்பாடியிலுள்ள டேனிஷ் கோட்டை | |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | தமிழக தொல்லியல் துறை |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1620 |
கட்டியவர் | டேனிஷ் |
டேனிஷ் கோட்டை என அழைக்கப்படும் டேனியக் கோட்டை (Fort Dansborg உள்ளூரில் Danish Fort) என்பது தமிழகத்தின், தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு பொ.ஊ. 1620 இல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டேனிஷ்காரர்களின் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845 ஆண்டில் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது, அதன் பிறகு இந்த ஊரும் இக்கோட்டையும் தம் சிறப்பை இழந்தன. இந்தியா விடுதலையான 1947 க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978வரை பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இந்த டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும், டேனிஷ் காசுகள், டேனிஷ் தமிழ் பத்திரங்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டை அண்மைக் காலத்தில், இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2001 இல் டேனிஷ் மன்னர் குடும்பத்தின் உதவியுடன் மாநில தொல்லியல்துறை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது. அடுத்து 2011இல் தமிழக சுற்றுலாத் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இக்கோட்டை முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.
சோழமண்டலக் கடற்கரை என்பது பன்னாட்டு வணிகப் பகுதியாக பொ.ஊ.மு. 3ஆவது நூற்றாண்டிலிருந்து விளங்கியது. ஐரோப்பிய காலனிய அரசுகளான பிரித்தானியர், பிரஞ்சியர், டச்சு, போர்த்துகீசியர் போன்றோரால் பொ.ஊ. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் போது இந்தியாவுடன் வணிகம் செய்ய கடல்சார் வர்த்தக நிறுவனங்கள் நிறுவப்பட்டன. டேனிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1616 இல் நிறுவப்பட்டு, அட்மிரல் ஓவ்கிட் (பொ.ஊ. 1594-1660) என்பவர் அனுப்பப்பட்டார்.[1][2] ஓவ்கிட் தஞ்சாவூர் ஆட்சியாளரான இரகுநாத நாயக்கருடன் (1600–1634) 1620 ஆம் ஆண்டில் போர்த்துகீசியரின் எதிர்ப்பு இருந்தபோதிலும் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி மொத்தம் 8 கி.மீ (5.0 மைல்) க்கு 4 கி.மீ (2.5 மைல்) பரப்பளவு இடத்தை ஆண்டு வாடகை ரூ 3111 என்ற ஒப்புதலுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியின் அண்டைக் கிராமங்களில் இருந்து வரி வசூலிப்பதில் டேனிஸ் அனுமதி பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒரு தங்க இலையில் போடப்பட்டது. இந்தக் கையெழுத்துப் பிரதி கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரச காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.[2][3][4][5][6][7][8][9]
டேனிஷ் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டை இதுவே ஆகும். முதல் கோட்டை யாது என்றால் அது ஷேக்ஸ்பியருக்கு ஹேம்லட் எழுத உத்வேகம் அளித்த க்ரோன்போர்க் கோட்டையாகும்.[10][11][12] இக்கோட்டை உள்ளூர் தொழிலாளர்கள் உதவியுடன் டேனிஷ் பாணியில் ஓவ்கிட்டால் கட்டப்பட்டது. கோட்டையை ஒட்டிய தரைத்தளம் கிடங்காகவும், படையினரின் ஒய்வறையாகவும் பயன்படுத்தப்பட்டது. அடுத்த தளம் ஆளுநர் மற்றும் மத குருக்கள் போன்றோர் வசிக்குமிடமாக இருந்தது.[13] டேனிஷ் கோட்டை 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டேனிஷ்காரா்களின் மையமாக இருந்தது. முதலில் இப்பகுதி ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. கோட்டை கட்டியபிறகு இங்கிருந்து பருத்தி, ஜவுளி போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முதன்மை வாணிகத் துறைமுகமாக ஆனது. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்நகரத்தின் வர்த்தகரீதியான முக்கியத்துவம் குறைந்து, வங்காளத்தின் சிறீராம்பூர் ஜவுளி உற்பத்தி மையமாக ஆனது. என்றாலும் தரங்கம்பாடியிலேயே காலனியின் தலைமையகம் இருந்து வந்தது. 1845இல் இந்த நகரமும், கோட்டையும் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. இதன்பிறகு தரங்கம்பாடியும் அதன் கோட்டையும் தன் வணிக முக்கியத்துவத்தை இழந்தன.[14][15][16][17][2][18][19][20]
டேனிஷ் கோட்டை தரங்கம்பாடியின் தென்பகுதியில் அமைந்துள்ளது. மாநில தலைநகரான சென்னையில் இருந்து 283 கிமீ (176 மைல்) தொலைவில் உள்ளது. இக்கோட்டை டேனிஷ் பாணியில், பெரிய அரங்குகள், கட்டமைப்புகள், உயர் கூரைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.[18] கடற்கரையை ஒட்டிய கோட்டையின் நீளம் 60 மீ (200 அடி) மற்றும் அகலம் சுமார் 11 மீ (36 அடி). கோட்டை சரிவக வடிவிலும் இடது சிறகில் மூன்று அறைகளுடன் உள்ளது இது ஆளுநர் இல்லமாகும். இடது மூலையில் திறந்த நெருப்பிடம் மற்றும் புகைபோக்கியுடன் சமையலறையும் உள்ளது. கோட்டையின் மையத்தில் தேவாலய அறை உள்ளது இது தற்போது அருங்காட்சியகமாக செயல்படுகிறது. வலப்பக்க மூலையில் உள்ள அறை வணிக இயக்குநரின் வசிப்பிடமாக இருந்தது. தற்காலத்திலு இது கிடங்காக உள்ளது. கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டவை. கோட்டையின் முதன்மை வாயில் வடக்கு நோக்கி உள்ளது. கிழக்கிலும் ஒரு வாயில் கூடுதலாக உள்ளது.[21][22][23][24] கோட்டையின் இரண்டாவது மாடியில் பாதுகாவலர் அறைகளின் தொகுதிகள் உள்ளன.[25] மாடிப் படிக்கட்டுகள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.[26] கோட்டையின் மைய பகுதியில் நான்கு ஒட்டகத் திமில் வடிவ குவிமாடங்கள் உள்ளன. மண்டபத்தின் மையத் தூண்தான் குவிமாடங்களின் முழு எடையையும் தாங்குகிறது.[23]
கோட்டையும் அதன் குறிப்பிடத்தக்க கட்டிடங்களின் தொகுப்பும் 1620-ல் கட்டப்பட்டவை. இந்தப் பகுதியின் சில குறிப்பிடத்தக்க கட்டடங்கள் என்றால் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாசிலாமணிநாதர் கோயில், 1701இல் கட்டப்பட்ட சீயோன் தேவாலயம், 1718 இல் கட்டப்பட்ட புதிய ஜெருசலேம் தேவாலயம், 1792 இல் கட்டப்பட்ட நகர நுழைவாயில், 1784 இல் கட்டப்பட்ட ஆளுநர் பங்களா, 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கல்லறைகள் உள்ளன. கோட்டையில் உள்ளே உள்ள குடியிருப்புகளின் வாயில் மற்றும் முக்கிய தெருக்களுடன் மரக் கதவுகள் கொண்ட ஒரு சிறிய ஐரோப்பிய நகரம் போன்ற தோற்றத்தில் உள்ளது, அதாவது, இராச வீதிபோல உள்ளது.[21][22][23][27] இந்த இராச வீதியின் குறிப்பிடத்தக்க கட்டிடங்கள் சில அவை கேட் ஹவுஸ், முகில்ட்ரூப் மாளிகை, போர்ட் மாஸ்டர் பங்களா, ரிகிலிங் மாளிகை போன்றவை ஆகும்.[27] இங்கு கடல் நோக்கி கோட்டையின் சுவர்கள் இருந்ததால், இங்கிருந்த உப்புக்காற்றுச் சூழல் கோட்டையை அரித்தது, ஆதலால் அவ்வப்போது சுவர்களை வலுவூட்டவேண்டி இருந்ததால், இராணுவப் படைகள் நடத்திய தாக்குதலைத் தாங்க முடியவில்லை, ஆனால் சூறையாடும் குதிரைப்படை தாக்குதல்களில் இருந்து குடிமக்களுக்கு ஒரு பாதுகாப்பு அளித்தது.[1] கோட்டைச் சுவர்கள் கருங்கல் கொண்டு கட்டப்பட்டன.[28]
2001 இல் தமிழக தொல்லியல் துறை மற்றும் டேனிஷ் அரச குடும்பத்தின் உதவியுடன் தரங்கம்பாடி சங்கம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் கோட்டையின் தென் இறுதியில் உள்ள பகுதி அதன் பழமைத் தன்மை மாறாமல் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. அதன் அசல் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டது போன்ற செங்கல், கருங்கல் போன்ற பொருள்களைக் கொண்டு சீரமைப்புப் பணிகளை உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் டேனிஷ் தொண்டர்கள், டேனிஷ் மற்றும் இந்திய நிபுணர்களின் பங்களிப்புடன், பணிகள் 2005 இல் முடிக்கப்பட்டன.[16][29] 2001 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் வேதியியலாளர்களால் மன்னர் இரகுநாத நாயக்கரின் உருவப்படம், தரங்கம்பாடி தளத்தின் வரைபடம், மட்பாண்டங்கள், டேனிஷ் மன்னரான நான்காம் கிரிடின் உருவப்படம் போன்றவை மறுபடியும் அமைக்கப்பட்டன.[23] மேலும் வெளிப்புற ஓளியைப் பயன்படுத்தி ஒரே சீரான பச்சைநிற ஒளி அளிக்கும், உலோக ஹாலைடு விளக்குகள், அமைக்கப்பட்டன. பழமை மாறாமல் மீட்டெடுக்கப்பட்ட கோட்டை நாகை மாவட்ட ஆட்சியரால் 2002 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது[17][23]
கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி கோட்டை மற்றும் மாசிலாமணிநாதர் கோயில் போன்றவற்றைப் பாதுகாக்க கரையோரங்களில் கற்கள் போடும் வகையில் தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. இந்தத் திட்டம் 2005 இந்திய பெருங்கடல் ஆழிப்பேரலைக்குமுன் முன் திட்டமிடப்பட்டிருந்தது, பின்னர் திட்டம் 2007 ல் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தீட்டப்பட்ட காலமான ஆழிப்பேரலைக்கு முந்தைய காலகட்டத்தில் பிராந்தியத்தின் மீன்பிடிதொழிலுக்கு இடஞ்சலாக இருக்கும் என்று கருதி உள்ளூர் கிராமவாசிகளின் மத்தியில் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் ஆழிப்பேரலைக்குப்பின், உள்ளூரில் இருந்த எதிர்ப்பு விலகியபோது, திட்டமிடப்பட்ட கடற்கரை பகுதிகளைவிட கூடுதல் பகுதிகளில் திட்டம் நீட்டிக்கப்பட்டது.[30]
2011 ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையின் சார்பில் "தரங்கம்பாடி வளர்ச்சி திட்டம்" என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. திட்ட மதிப்பீட்டு ரூ 3730800 (அமெரிக்க $ 55,000) மேலும் கோட்டையையும் அதை சுற்றிய பகுதிகள் சிறிது சிறிதாகப் மறு உருவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டன. திட்டத்தின் முதல் கட்டமாகவும் அதன் ஒரு பகுதியாகவும், பாதைகளில் கற்பாளங்கள் பாவப்பட்டு, கோட்டையைச் சுற்றிய பாதைகளில் வார்ப்பிரும்பிலான அலங்கார தெரு விளக்குகள் நிறுவப்பட்டன. இந்தப் பாதைகளில் கற்பாளங்கள் மொத்தம் சுமார் 350 மீ (1,150 அடி) நீளத்திற்கு பாவப்பட்டது. மேலும் பொற்கொல்லர் தெருவில் 100 மீ (330 அடி) நீளத்திற்கு கற்கள் பாவப்பட்டன. முதல் கட்ட பணிகள் சுமார் ரூ 2430000 (அமெரிக்க $ 36,000) செலவில் செய்து முடிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக தரங்கப்பாடி வளைவில் இருந்து ஆற்றிற்கு செல்லும் பாதையில் ரூ 1300000 (அமெரிக்க $ 19,000) செலவில் கற்கள் பாவப்பட்டன. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, கோட்டையை சுற்றிய பகுதிகளில் கனரக வாகனங்களின் இயக்கத்திற்கு கட்டுப்படு செய்யப்பட்டது.[31][32]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)