டேம் 999 Dam 999 | |
---|---|
இயக்கம் | சோகன் ராய் |
தயாரிப்பு | பிஸ்டிவி நெட்வர்க் |
கதை | ரொப் டோபின் சோகன் ராய் |
இசை | ஊசெப்பாச்சன் |
நடிப்பு | அஷிஷ் வித்யார்த்தி ஜோசுவா பிரெட்ரிக் சிமித் ரஜித் கபூர் வினய் ராய் விமலா ராமன் லின்டா ஆர்செனியோ மேகா பர்மன் ஜால பிக்கரிங் ஜினீத் ராத் |
ஒளிப்பதிவு | அஜயன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | சுரேஷ் பாய் |
விநியோகம் | வார்னர் பிரதர்ஸ் |
வெளியீடு | நவம்பர் 25, 2011 |
நாடு | இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் |
மொழி | ஆங்கிலம் |
டேம் 999 (Dam 999, அணை 999) என்பது 2011 இல் வெளிவந்த ஒரு ஆங்கிலத் திரைப்படம். கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோகன் ராய் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார். அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2011 நவம்பர் 24 அன்று வெளியான இப்படம், இந்தியாவில் நவம்பர் 25 அன்று வெளியானது. இத்திரைப்படம் ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
டேம் 999 திரைப்படம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் சுருக்கம்.
டேம் 999 படத்தின் இயக்குநர் சோகன் ராய் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது 'டேம் 999' திரைப்படம், தமிழக மக்களின் கலாசாரத்தையோ, உணர்வுகளையோ புண்படுத்தக்கூடிய படம் அல்ல. 'டேம் 999' முழுக்க முழுக்க உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம். சீனாவின் பான்கியூ அணை 1975-ல் உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவில் சுமார் 2,50,000 பலியான சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மக்கள் பலரின் வாழ்க்கையை ஓர் அணை பேரழிவின் மூலம் எப்படி மூழ்கடித்தது என்பதையே இந்தப் படம் எடுத்துரைக்கிறது. மாறாக, இந்தியாவில் உள்ள அணைகளைப் பற்றியோ, குறிப்பாக தமிழகத்தில் உள்ள அணைகளைப் பற்றியோ சொல்லவில்லை. தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. அவர்களது கலாசாரத்தையும், உணர்வுகளையும் பாதிக்கும் எந்த செயலலிலும் எனக்கு உடன்பாடு இல்லை. எனது 'டேம் 999' படத்தில், தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழகத்துக்கோ தவறான எண்ணம் ஏற்படும் வகையில் எந்த ஒரு வசனமும் காட்சியும் இடம்பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.[5]
முல்லைப் பெரியாறு அணை உடைவதாக பொருள் கொண்டு "டேம் 999' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் நவம்பர் 25 திரையிடப்படுகிறது. இதையடுத்து "டேம் 999' படத்துக்குத் தடை விதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணையை நேரடியாகக் காண்பிக்கா விட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள், முல்லைப் பெரியாறு அணையை நினைவுபடுத்துவதாக உள்ளது. படத்தின் தலைப்பு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைப் பற்றி மறைமுகமாக எடுத்துக் கூறி, முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் உள்ளதாக, மக்களிடையே பீதி ஏற்படுத்தி தமிழக-கேரள மக்களிடையே வேற்றுமையை உருவாக்கவும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. எனவே, "டேம் 999' படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[6]
முல்லைப் பெரியாறு அணை உடைவதுபோல் காட்டும் "டேம் 999' படத்தைத் திரையிட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்தப் படம் இதர மாநிலங்களில் திரையிடப்பட்டாலும், அது தமிழகத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். இதனால் நாடு முழுவதும் டேம் 999 படத்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.