டேவிட் எசு. செரிதன் (David S. Sheridan) ஒரு முறை பயன்படுத்திக் கழிக்கும் நெகிழி பெருமூச்சுக்குழல் செருகுக் குழாயை கண்டுபிடித்தவராவார். 1908 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் நாள் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் இவர் பிறந்தார்.
உருசியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய அடோல்ஃப் மற்றும் அன்னா சாகோலோஃப் ஆகியோரின் ஆறு மகன்களில் டேவிட் இரண்டாவதாகப் பிறந்தார். 1939 ஆம் ஆண்டு இவர் தனது பெயரை சாகோலோஃப் என்பதிலிருந்து செரிதனாக மாற்றினார். 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே இவர் பள்ளியில் படித்தார். தனது தந்தை மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து கடினமான மரத் தொழிலில் வேலைக்குச் சென்றார்.
டேவிட் செரிதன் நவீனமான ஒருமுறை மட்டும் பயன்படுத்திக் கழிக்கும் நெகிழி பெருமூச்சுக்குழல் செருகுக் குழாயை கண்டுபிடித்தார். மூச்சு பெருங்குழலுள் செருகப்படும் இக்குழாய்கள் இப்போது வழக்கமாக அறுவைச் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன[1] செரிதனின் இக்கண்டுபிடிப்பு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற பயன்படுகிறது.
செரிதன் ஐம்பதிற்கும் மேற்பட்ட மருத்துவ கருவி காப்புரிமைகளை வைத்திருந்தார். 1940 ஆம் ஆண்டுகளில் நவீன ஒருமுறை பயன்படுத்தி நீக்கும் வடிகுழாயைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவராகக் கருதப்படுகிறார்.[1] வாழ்நாளில் செரிதன் நான்கு வடிகுழாய் நிறுவனங்களைத் தொடங்கி விற்றார் [1]
செரிதன் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் நாள் தனது 95 ஆவது வயதில் நியூயார்க்கில் காலமானார்.[2]