டைகர் வரதாச்சாரியார்

டைகர் வரதாச்சாரியார்
பிறப்பு(1876-08-01)1 ஆகத்து 1876
கொளத்தூர், தமிழ்நாடு
இறப்புசனவரி 31, 1950(1950-01-31) (அகவை 73)
அறியப்படுவதுகருநாடக இசைப் பாடகர்
பெற்றோர்கண்டடை இராமாநுஜாச்சாரி

டைகர் வரதாச்சாரியார் (Tiger Varadachariar, 1 ஆகத்து 1876 - 31 சனவரி 1950) ஒரு தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர்.

குடும்பம்

[தொகு]

டைகர் வரதாச்சாரியார் தமிழ்நாடு (அப்போதைய) செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கொளத்தூர் என்னும் கிராமத்திலே கண்டடை இராமாநுஜாச்சாரியாரின் மகனாகப் பிறந்தார். தந்தையார் தமிழ், தெலுங்கு, சமக்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லவராக இருந்தார். வரதாச்சாரியருக்கு, வீணை கிருஷ்ணமாச்சாரியார், கே.வி. ஸ்ரீநிவாச ஐயங்கார் என இரு இளைய சகோதரர்கள் இருந்தனர்.

இசைப் பயிற்சி

[தொகு]

கிராமத்தில் ஒரு ஆசிரியரிடம் தொடக்க இசைப் பயிற்சி பெற்ற பின்னர் வரதாச்சாரியார் தனது 14 ஆவது வயதில் சகோதரர்கள் இருவருடனும் சேர்ந்து பட்னம் சுப்பிரமணிய ஐயரிடம் குருகுலவாச முறையில் இசைப் பயிற்சி பெற்றார். அப்போது பட்னம் சுப்பிரமணிய ஐயர் திருவையாற்றில் இருந்தார். பின்னர் அவர் சென்னையில் குடியேறியபோது மூன்று சகோதரர்களும் அவருடனே சென்னைக்குச் சென்று தாங்களும் அங்கு காலாடிப்பேட்டை என்ற இடத்தில் குடியேறினார்கள். இதனால் மூவரும் காலாடிப்பேட்டை சகோதரர்கள் எனப் பிரபலமாக அறியப்பட்டார்கள்.

தொழில்

[தொகு]

வரதாச்சாரியாருக்கு இசையிலே ஈடுபாடு இருந்தும் தகப்பனாரின் விருப்பப்படியும், குடும்ப நிலை கருதியும் அளவை வாரியத்தில் (Survey dept.) வேலைக்குச் சேர்ந்தார். அவரை கோழிக்கோடு என்னும் இடத்திற்கு அனுப்பினார்கள்.

இசைக் கச்சேரிகள்

[தொகு]

அளவை வாரியத்தில் பணி செய்த போதும் தனது இசைப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தார். பணி நேரம் முடிந்தபின் கோவில்கள், திருமண விழாக்கள் போன்ற இடங்களில் கச்சேரிகள் செய்தார். அவரது புகழ் எங்கும் பரவியது. அதனால் இசை விழாக்கள், திருமண வைபவங்கள் முதலியவற்றில் பாட அழைப்புகள் வந்தன. மைசூர் நவராத்திரி விழாவில் பாட அழைப்பு வந்தது. வரதாச்சாரியார் பாடிய பல்லவியைக் கேட்ட மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் அவரைத் தனது அரண்மனை ஆஸ்தான வித்துவானாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் வரதாச்சாரியார் தனது அளவை வாரிய வேலையிலிருந்து நீங்கினார்.

ஒரு சமயத்தில் வரதாச்சாரியார் பூரணசந்திரிகா இராகத்தில் அமைந்த நுணுக்கமான ஒரு பல்லவியை நான்கு மணி நேரம் பாடிய பாங்கினைக் கேட்ட மகாராஜா அவருக்கு டைகர் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டினார். அதன் பின்னர் அவர் டைகர் வரதாச்சாரியார் என அழைக்கப்பட்டார்.

இசைப் பணிகள்

[தொகு]

பத்து ஆண்டுகள் மைசூர் அரண்மனையில் பணியாற்றிய பின், சென்னைக்கு வந்து மைலாப்பூரில் வாழ்ந்து வந்தார்.

சென்னை மியூசிக் அகாதமியினர் "ஆசிரியர்களுக்கான இசைக் கல்லூரி" (Teacher's college of Music) தொடங்கியபோது டைகர் வரதாச்சாரியார் அதன் முதல்வராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

அதன் பின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பிரிவுக்குத் தலைவராக பணியாற்றினார். அவரது ஆலோசனையில் பேரில் சென்னைப் பல்கலைக்கழகம் இசை பட்டய பயிற்சி (diploma course) தொடங்கியது.

இசை ஆசிரியராக

[தொகு]

மாணாக்கர்களுக்கு இசை கற்பிக்க சாதாரணமாக இசை பயிற்றுவிப்போர் கையாளும் முறையிலிருந்து மாறுபட்ட ஒரு பாணியை டைகர் வரதாச்சாரியார் கடைபிடித்தார். பயிற்சி தொடங்கும்போது ஒரு இராகத்தை அதன் முழு வடிவங்களோடு தானே ஒரு அரை மணி நேரம் பாடுவார். அதன் மூலம் மாணாக்கர்கள் அந்த இராகத்தின் வடிவத்தைப் பற்றிய கோலத்தை மனதிலே பதித்துக் கொள்வார்கள். அதன் பின்னர் முத்துஸ்வாமி தீட்சிதரின் "ஸ்ரீ மூலாதார சக்ர விநாயகா" என்ற ஆதி தாள பாடலின் பல்லவியை மிக ஆறுதலாக பாடுவார். சிறு பகுதியைப் பாடியபின் மாணாக்கர்களை ஒவ்வொருவராக அதைப் பாடுமாறு கேட்பார். தேவையான இடத்தில் திருத்தங்கள் செய்வார். இறுதியாக மாணாக்கர்கள் எல்லோரும் சேர்ந்து பாடுவார்கள். இந்தக் கிருதியின் பல்லவியை பயில சுமார் ஒரு வாரம் வரையில் எடுக்கும். தான் கற்பித்தவற்றின் குறியீட்டை (notation) கேட்டாலும் கொடுக்கமாட்டார். "என்னிடம் கற்றால் உங்களுக்கு வேண்டியவற்றை நீங்களே குறியீடு செய்யக்கூடியதாக இருக்கும்" என அவர் மாணாக்கர்களுக்கு சொல்வார்.

டைகர் வரதாச்சாரியார் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரியினதும்[1], சென்னை அடையாறு கலாசேத்திராவினதும்[2] முதல்வராக பணியாற்றினார்.

ஆக்கங்கள்

[தொகு]

டைகர் வரதாச்சாரியார் தனது குருவான பட்னம் சுப்பிரமணிய ஐயரைப் பின்பற்றி பாடல்களை இயற்றி மெட்டமைத்துள்ளார். கலாசேத்திராவில் நடைபெறும் இசை நாடகங்களில் வரும் பாடல்களுக்கு அவர் மெட்டமைத்தார். அது மட்டுமன்றி, வர்ணங்கள் ஆக்குவதிலும் வல்லவராக இருந்தார். குறிப்பாக மணிரங்கு இராகத்தில் ஒரு ஜம்ப வர்ணம், தர்பார் இராகத்தில் ஒரு ஆதி தாள வர்ணம், ஸ்ரீரஞ்ஜனி இராகத்தில் ஒரு ஆதி தாள வர்ணம், சாவேரி இராகத்தில் ஒரு ஆதி தாள வர்ணம் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். அவரது கற்பனை சுரங்களைக் குறியீடு செய்தால் அதுவே ஒரு மெட்டாக இருக்கும்.

குணம்

[தொகு]

"மிக்க புகழ் படைத்த கனவானாக இருந்தாலும் அவர் மிக எளிமையானவர். அவர் வெளியே செல்லும்போது நெற்றியில் நாமம் துலங்கும். கோட்டும் மேல் வஸ்திரமும் அணிந்துகொண்டு கையில் குடையுடனும், தென்னங்கீற்றினால் செய்யப்பட்ட வெற்றிலைப் பெட்டியுடனும் செல்வார். யார் வேண்டுமானாலும் அவரைக் காணலாம். ஒரு தடவையேனும் அவர் கோபித்ததை யாரும் கண்டதில்லை. எளிமையின் மறு உருவம் அவர். அவரைப் பற்றி முழுமையாகச் சொல்ல வார்த்தைகள் இல்லை." என்கிறார் அவரது மாணாக்கர்களில் ஒருவரான முனைவர் விஞ்சமூரி வரதராஜ ஐயங்கார். இவரின் புகழ்பெற்ற மாணாக்கர்களில் மற்றொருவர் எம்.டி. இராமநாதன் ஆவார்.

விருதுகள்

[தொகு]

டைகர் வரதாச்சாரி தெரு

[தொகு]

சென்னை மாநகராட்சி டைகர் வரதாச்சாரிக்கு மதிப்பளிக்கு முகமாக அடையாறு, பெசண்ட் நகர், அண்ணா காலனியில் ஒரு தெருவுக்கு அவரின் பெயரை சூட்டியுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Specialist in thematic concert". Archived from the original on 2013-01-30. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
  2. His music, his soul
  3. "AWARDS - SANGITA KALANIDHI". மியூசிக் அகாதெமி. 23 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]