த. விசுவநாதன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா | 13 ஆகத்து 1927
இறப்பு | 10 செப்டம்பர் 2002 கனெடிகட், அமெரிக்கா | (அகவை 75)
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | கருநாடக இசைக் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | புல்லாங்குழல் |
தஞ்சாவூர் விசுவநாதன் (Tanjore Viswanathan) (13 ஆகஸ்ட் 1927- செப்டம்பர் 2002) ஓர் கருநாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் புல்லாங்குழல் மற்றும் பாடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்
டி. விசுவா என்றும் அழைக்கப்படும் விசுவநாதன் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பிறந்தார். இவர் தென்னிந்திய வீணைக் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படும் புகழ்பெற்ற வீணை தனம்மாளின் பேரனாவார். இவரது தாயார் ஜெயம்மாளும் ஒரு கருநாடக இசைப் பாடகர்.[1] குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞரும் மற்றும் நாட்டிய ஆசிரியருமான தஞ்சாவூர் பாலசரஸ்வதி விசுவநாதனின் மூத்த சகோதரியவார்.[2] மிருதங்கக் கலைஞர் த. இரங்கநாதன் (1925-1987) இவரது மூத்த சகோதரராவார்.[3]
மதிப்புமிக்க இசைக் குடும்பத்தைச் சேர்ந்த விசுவநாதன் தனது எட்டாவது வயதில் திருப்பாம்புரம் சுவாமிநாதப் பிள்ளையிடம் புல்லாங்குழலில் பயிற்சிப் பெற்றார்.
விசுவநாதன் தனது குடும்பத்தின் சிறந்த இசை மரபுகளையும் சுவாமிநாதப் பிள்ளையின் பாரம்பரியத்தையும் ஈணைத்து புல்லாங்குழலை வாசித்தார். உண்மையில் விசுவநாதன் ஒரு பயிற்சி பெற்ற குரல் கலைஞர் அல்ல என்றாலும், தனது கச்சேரிகளுக்கு நடுவில் பாஅடவும் தொடங்குவார். குறிப்பாக சுவாமிநாதன் பிள்ளை இசையமைத்த முத்துத் தாண்டவர் பாடல்கள் மற்றும் தனம்மாள் குடும்பத்தின் சொத்தாக இருந்த ஏராளமான பதங்கள், ஜாவளிகள் மற்றும் தில்லானாக்கள் போன்றவை. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
ஹிக்கின்ஸ் பாகவதர் என்று அழைக்கப்படும் தென்னிந்திய இசையின் ரசிகர்களில் ஒருவரான அமெரிக்க இசைக் கலைஞர் ஜான் பி. ஹிக்கின்ஸை தனது மேடையில் பாடவைத்தார். மேலும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தென்னிந்திய இசையைக் கற்பித்தார்.
விசுவநாதன் முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் புல்பிரைட் உதவித் தொகை மூலம் அமெரிக்காவிற்கு வந்தார். 1958 முதல் 1960 வரை லாஸ் ஏஞ்சலஸிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இன இசையியலை படித்தார். மேல்ய்ம் பல்கலைகழகத்தில் கற்பிக்கவும் செய்தார். பின்னர் இந்தியா திரும்பிய விசுவநாதன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையின் தலைவராகச் சேர்ந்தார். 1966 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறிய விசுவநாதன், கலிபோர்னியா கலை நிறுவனத்தில் சேர்ந்து அங்கு மாணவர்களுக்கு கற்பித்தார். 1975 ஆம் ஆண்டில் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, அந்த பல்கலைக்கழகத்திலும் பல ஆண்டுகள் கற்பித்தார். அனுராதா ஸ்ரீராம், டி. ஆர். மூர்த்தி, ஜான் பி. ஹிக்கின்ஸ், டக்ளஸ் நைட் மற்றும் டேவிட் நெல்சன் ஆகியோர் இவரது மாணவர்களில் அடங்குவர்.
விசுவநாதன் தனது சகோதரர் இரங்கநாதனுடன் சேர்ந்து தங்கள் சகோதரி தஞ்சாவூர் பாலசரஸ்வதி பற்றிய சத்யஜித் ராயின் பாலா (1976) என்ற ஆவணப்படத்திற்கு இசையமைத்தனர்.[4]
விசுவநாதன் செப்டம்பர் 10,2002 அன்று கனெடிகட் மாநிலத்தில் மாரடைப்பால் இறந்தார். இவருக்கு ஜோசபா கார்மாக் என்ற மனைவியும் மற்றும் ஜெயசிறீ என்ற மகளும் குமார் மற்றும் கெரேய் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.[3]
விசுவநாதன், தமிழ்நாடு அரசிடமிருந்து கலைமாமணி விருது (1978) இந்திய அரசிடமிருந்து சங்கீத நாடக அகாதமி (1987) மற்றும் சென்னை, மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது (1988) உட்பட இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் சிலவற்றைப் பெற்றுள்ளார்.[5]
1992 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் கலைகளுக்கான தேசிய அறக்கட்டளை மூலம் சிறந்த நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைஞர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் கௌரவத்தை பெற்ற முதல் இந்திய இசைக்கலைஞரானார்.[6] 1992 ஆம் ஆண்டில், இந்திய படிப்புகளுக்கான அமெரிக்க நிறுவனத்தின் ஆராய்ச்சி உதவித்தொகையையும் பெற்றார்.