தஞ்சாவூர் மாவட்டம் | |||||
மாவட்டம் (சென்னை மாகாணம்) | |||||
| |||||
கொடி | |||||
தலைநகரம் | நாகப்பட்டினம் (1799-1845) தரங்கம்பாடி (1845-1860) தஞ்சாவூர் (1860-1950) | ||||
வரலாறு | |||||
• | மாவட்டத்தை நிறுவுதல் | 1799 | |||
• | நவீன தஞ்சாவூர் மாவட்டம் | 1950 |
தஞ்சாவூர் மாவட்டம் (Tanjore District) என்பது பிரித்தானிய இந்தியாவில் சென்னை மாகாணத்தின் கிழக்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இது தற்போதைய தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் ஆகிய மாவட்டங்களையும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வட்டத்தையும் உள்ளடக்கியது. தஞ்சாவூரானது இந்து சமய மரபுவழியைத் தாங்கியதாக மட்டுமல்லாது, சோழ கலாச்சார பாரம்பரியத்தின் மையமாகவும், சென்னை மாகாணத்தின் பணக்கார, மிக வளமான மாவட்டங்களில் ஒன்றாகவும் இருந்தது.
1799 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மராத்திய ஆட்சியாளரான இரண்டாம் சரபோஜி தனது இராச்சியம் முழுவதையும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்தபோது தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. காவிரி வடிநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டமானது, தென்னிந்தியாவில் மிகப்பெருமளவில் நெல் விளையும் பகுதிகளில் ஒன்றாக இருந்தது. இது 1876-78 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சென்னை மாகாண பெரும் பஞ்சத்தால் பாதிக்கப்படவில்லை.
தஞ்சாவூர் மாவட்டத்தின் வடக்கில் தென் ஆற்காடு, மேற்கில் திருச்சிராப்பள்ளி, தெற்கே புதுக்கோட்டை சமஸ்தானம் மற்றும் மதுரை, தென்கிழக்கில் இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களைக் கொண்டிருந்தது. தென் ஆற்காடு மாவட்டத்தின் நீண்ட வடக்கு எல்லையில் கொள்ளிடம் ஆறும், கிழக்கில் வங்காள விரிகுடாவும் எல்லையாக அமைந்திருந்தன.
மாவட்டமானது நன்கு அறியப்பட்ட நான்கு பிரிவுகளாக இருந்தது - கொள்ளிடம் மற்றும் காவேரிக்கு இடையில் இருந்த வளமான நிலங்கள் "பழைய வடிநிலம்" என அழைக்கப்பட்டது, இப்பகுதி இயல்பாகவே அணைக்கட்டு நீரால் நீர்ப்பாசன வசதியைப் பெற்றது. இப்பகுதியானது மன்னார்குடி வட்டத்தின் வடபகுதி, நன்னிலம், தஞ்சாவூர் வட்டத்தின் கிழக்கு பகுதி, சீர்காழி, மாயாவரம், கும்பகோணம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது. காவேரி ஆற்றின் தெற்குப்பகுதி சமவெளியில் உள்ள நன்னிலம் வட்டத்தின் தெற்குப் பகுதி மற்றும் மன்னார்குடி வட்டம் ஆகியவை "புதிய வடிநிலம் " எனப்பட்டது. காரணம் இந்தப் பகுதியில் உள்ள நீர்பாசனக் கால்வாய்களானது காவேரி மற்றும் கொள்ளிடம் மற்றும் அதன் கிளைகளில் இருந்து மனித உழைப்பால் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட கால்வாய்களால் பாசன வசதி பெற்றதாகும். இது பழைய டெல்டாவைக் காட்டிலும் குறைவான வளம் கொண்டதாக இருந்தது. வறண்ட வல்லம் பீடபூமி என்பது தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை,பேராவூரணி வட்டங்களின் மேற்குப்பகுதியைக் கொண்டது. அடுத்து வேதாரண்யம் உப்பள நிலப்பகுதியாகும். இதன் நீளமானது முப்பது மைல் கொண்டதாகவும், அகலம் நான்கு அல்லது ஐந்து மைல் அகலம் கொண்டதாக கோடியக்கரையில் துவங்கி அதிராம்பட்டிணம் வரையில் திருத்துறைப்பூண்டி வட்டத்தின் தெற்கு பகுதியும், பட்டுக்கோட்டை வட்டத்தின் கிழக்குப் பகுதியும் கொண்டாதாகும். மாவட்டத்தில் மக்கள் வாழும் இரண்டு தீவுகள் உள்ளன. அவை கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்று முகத்துவாரத்தில் உள்ள தீவுக்கோட்டை மற்றும் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள விநாயகத்தரு போன்றவை ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான நிலப்பகுதியானது மிராசுதார்களுக்குச் சொந்தமான நிலங்களாக இருந்தன. மாவட்டத்தில் சில பெரிய சமீன்தார்கள் இருந்தனர் அவற்றில் கந்தர்வக்கோட்டை, கள்ளக்கோட்டை, கொனூர் போன்றவை புதுக்கோட்டை எல்லைக்கு அருகே இருந்தன, மேலும் உக்கடை மற்றும் பூண்டி போன்ற பெரிய ஜமீன்களும் இருந்தன. இவையெல்லாம் தஞ்சாவூர் நாயக்கர் அல்லது தஞ்சாவூர் மராட்டிய மன்னர் போன்றோர் தங்களது காவலர்களாக கருதப்பட்டவர்களாக இருந்த கள்ளர் தலைவர்களால் ஆளப்பட்டது. ஆனால் பெரும்பகுதி நிலமானது மிராசுதாரர்களான் கட்டுப்பாட்டில் இருந்தன. அது வழக்கமாக விவசாயிகள் போன்றோருக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டமானது குறைந்தது கி,மு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலிருந்து மக்கள் வாழிடமாகவும், சோழ சாம்ராஜ்யத்தின் பாரம்பரியத் தாயகமாகவும் இருந்தது. தஞ்சாவூரை முற்காலச் சோழர்கள் கி.மு 3 ஆம் நூற்றாண்டுமுதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டனர். இவர்கள் காலத்தில் பூம்புகாரில் இருந்த துறைமுகமானது ரோமுடன் வணிகத் தொடர்புகொள்ளும் முக்கிய இடமாக இருந்தது. அதன் பிறகு களப்பிரர் காலத்தில் ஏற்பட்ட ஒரு இடைவெளியினைத் தொடர்ந்து, தஞ்சாவூர் பல்லவர்களின்கீழ் தனதுக் கடந்தகால பெருமையைப் பெற்றதுடன், இடைக்காலச் சோழர்கள் மற்றும் சாளுக்கிய சோழர்கள் ஆகியோர்களின்கீழ் அதன் செழிப்பை மீண்டும் அடைந்தது. 13 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரானது பாண்டியரால் கைப்பற்றப்பட்டது, பின்னர் அவர்கள் மாலிக் காபூரால் வீழ்த்தப்பட்டனர். பின்னர் தஞ்சாவூரானது தில்லி சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகம் போன்றவற்றால் குறைந்த காலகட்டமாக 15 ஆம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது. அவர்களிடம் இருந்து விஜயநகர மன்னர்களால் தஞ்சாவூரானது கைப்பற்றப்பட்டபிறகு, அதன் பெருமையை மீண்டும் பெற்றது. அப்போதிருந்து தஞ்சாவூரானது விசயநகர பேரரசின் ஒரு பகுதியாகவும், மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்கள் ஆட்சியிலும் இருந்தது. இது 1674 இல் சத்திரபதி சிவாஜியின் சகோதரர் வெங்கோஜியால் கைப்பற்றப்பட்டு இவரால் தஞ்சாவூர் மராத்திய அரசு நிறுவப்பட்டது. 1749 முதல் இப்பகுதியின் விவகாரங்களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமானது பெரிய அளவில் தன் செல்வாக்கை செலுத்தத் துவங்கியது. 1760கள் மற்றும் 1770களில், தஞ்சாவூர் மராத்திய ஆட்சியாளர்கள், ஆற்காடு நவாப் மற்றும் இப்பகுதியின் பிற பெரிய சக்திகள், பிரித்தானிய செல்வாக்கின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1799 ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியானது இரண்டாம் சரபோஜி தஞ்சாவூர் அரியணையைப் பெற உதவியது. இந்த உதவிக்கு பிரதிபலனாக இரண்டாம் சரபோஜி தஞ்சாவூர் நகரை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு அவரது இராச்சியத்தின் மற்ற பகுதிகளைக் கொடுத்துவிட்டார். அவரது மகன் சிவாஜி ஆண் வாரிசு இன்றி 1855 இல் இறந்ததை அடுத்து, பிரித்தானியரின் அவகாசியிலிக் கொள்கையின்படி தஞ்சாவூரானது பிரித்தானிய அரசால் கைக்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் 1800 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, அதன் எல்லைகளானது முந்தைய தஞ்சாவூர் மராத்திய ராஜ்யத்தின் பரப்பைக் கொண்டதாக இருந்தது.
1901 ஆம் ஆண்டைய நிலவரத்தில், தஞ்சாவூர் மாவட்டம் ஒன்பது வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.