தஞ்சோங் துவான்
Tanjung Tuan | |
---|---|
![]() தஞ்சோங் துவான் கடற்கரை | |
ஆள்கூறுகள்: 2°24′N 101°52′E / 2.400°N 101.867°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | அலோர் காஜா |
முக்கிம் | கோலா லிங்கி |
உருவாக்கம் | 1400 |
தோற்றுவித்தவர் | பரமேசுவரா |
தஞ்சோங் துவான் (ஆங்கிலம்: Tanjung Tuan; மலாய் மொழி: Tanjung Tuan போர்த்துகீசியம்: Cape Rachado) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கடற்கரை நகரமாகும்.
நெகிரி செம்பிலான், போர்டிக்சன் நகரத்திற்கு அருகில் உள்ளது. இந்த இடம் நெகிரி செம்பிலான் மாநிலத்திற்குள் அமைந்து இருந்தாலும், மலாக்கா மாநிலத்தின் நிர்வாகத்தில் உள்ளது.[1]
இந்த இடத்திற்கு உடைபட்ட முனை (Broken Cape) என்று போர்த்துகீசியர்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள். மலாக்கா நீரிணையை எதிர்கொள்ளும் ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம் (Cape Rachado Lighthouse) மலேசிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட இடமாகும்.
1606-ஆம் ஆண்டில் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் (Dutch East India Company); போர்த்துகீசிய கடற்படைக்கும் இடையே இங்குள்ள கடற்கரைப் பகுதியில் ஒரு பயங்கரமான போர் நடந்தது. அந்தப் போரின் பெயர் 1606 ரச்சாடோ முனை போர். அதனால் இந்தக் கடற்கரைப் பகுதி மலாக்கா வரலாற்றில் பிரபலம் அடைந்தது.[2]
இந்தப் போருக்குப் பின்னர் மலாக்காவில் போர்த்துகீசியர்களின் தலையெழுத்தும் மாறியது. ஜொகூர் சுல்தானகத்திற்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே ஒரு பரஸ்பர ஒப்பந்தம் உருவானது. அந்த வகையில் 1841-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்கள் சரண் அடைந்தார்கள். ஆ பாமோசா கோட்டையை டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்தார்கள்.
1511-இல் மலாக்காவைக் கைப்பற்றிய பிறகு, போர்த்துகீசியர்கள் அதன் கப்பல்களுக்கு வழிகாட்ட ஒரு கலங்கரை விளக்கத்தை உருவாக்க விரும்பினார்கள். தஞ்சோங் துவான் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு கேப் ரச்சாடோ (Cape Rachado) என்று பெயரிடப்பட்டது.
பின்னர், 1528 - 1529ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. அதன் பின்னர் மூன்று நாட்டவர்கள்; போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரித்தானியர்கள் கவனத்திலும் கண்காணிப்பிலும் இந்தக் கலங்கரை விளக்கம் இருந்து வந்துள்ளது.
1921-ஆம் ஆண்டில், 809,700 சதுர மீட்டர் பரப்பளவில், இந்த ரச்சாடோ முனை வனக் காப்பகம் (Hutan Simpanan Cape Rachado), ஒரு நிரந்தர வனக் காப்பகமாக அரசிதழில் (No.Warta : 2066 bertarikh 23 Disember, 1921) வெளியிடப்பட்டது.
இருப்பினும், 1969-ஆம் ஆண்டில் 161,900 சதுர மீட்டர் பரப்பளவு காடுகள் பொதுப் பயன்பாட்டிற்காக நிரந்தர வன இருப்பு நிலையில் இருந்து நீக்கப்பட்டன (No.Warta : 328 bertarikh 25 Disember, 1969).
5 சனவரி 1971-இல், 607,000 சதுர மீட்டர் ரச்சாடோ முனை வனப் பகுதிகள் வனவியல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறை (PERHILITAN) அதிகாரத்தின் கீழ் வனவிலங்கு சரணாலயமாக அரசிதழில் பாதுகாப்பு ஆணை, 1955-இன் கீழ் வெளியிடப்பட்டது (Ordinan Perlindungan Binatang-Binatang Liar dan Burung-Burung, 1955)
அனைத்துலகப் பறவைகள் அமைப்பு (BirdLife International), இந்தப் பகுதியை முக்கியமான ஒரு பறவை சரணாலயமாக அறிவித்துள்ளது. மலேசிய இயற்கைக் கழகம் (Malaysian Nature Society), இந்த ரச்சாடோ முனை வனப் பகுதியின் இய்ற்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
சிங்கப்பூரா எனும் சிங்கப்பூரின் கடைசி மன்னரும் மலாக்காவை நிறுவியவருமான பரமேசுவரா (1344 – c. 1414) அடக்கம் செய்யப்பட்ட இடம் தஞ்சோங் துவான் என்றும் நம்பப் படுகிறது. பரமேசுவராவிற்குப் பிறகு அவரின் மகன் மெகாட் இசுகந்தர் ஷா மலாக்காவை 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
1389–ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரையில், சிங்கபுர இராச்சியத்தை (Kingdom of Singapura) பரமேஸ்வரா ஆட்சி செய்தார். அவரின் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் மஜபாகித் அரசு சிங்கப்பூரைத் தாக்கியது. அதனால் பரமேசுவரா மலாக்காவிற்கு இடம் பெயர்ந்தார்.[3]
சிங்கப்பூரில் உள்ள புக்கிட் லாராங்கான் (Bukit Larangan, Singapore) எனும் சிங்கப்பூர் மேரு மலையில், பரமேசுவரா அடக்கம் செய்யப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது. பரமேசுவரா புதைக்கப்பட்ட உண்மையான இடத்தை மக்கள் கண்டுபிடிக்க முடியாததால், இந்துக்களின் சடங்கு நம்பிக்கை முறையின் அடிப்படையில் அவர் தகனம் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் நம்புகின்றனர்.[4]
1927-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் கென்னிங் மலையில் ஒரு நீர்த்தேக்கக் கட்டுமானம் (Fort Canning Service Reservoir) தொடங்கியது. 1929-ஆம் ஆண்டில் நிறைவு அடைந்தது. அப்போது அந்த மலையின் உச்சியில், பரமேசுவரா அல்லது அவர் சார்ந்த மூதாதையர்களின் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.[5]
அதே சமயத்தில் அங்கு ஒரு சமாதி கண்டுபிடிக்கப் பட்டது. 14-ஆம் நூற்றாண்டின் சிங்கப்பூரின் கடைசி ஆட்சியாளராக இருந்த பரமேசுவராவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான இடமாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.
இருந்தாலும் அந்தக் கல்லறை பரமேசுவராவின் கல்லறையாக இருக்க முடியாது என்பதே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. ஏன் என்றால் பரமேஸ்வரா மலாக்காவில் இறந்து போனார்.
போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம். வாய்ப்புகள் அதிகம். கென்னிங் மலையில் அடக்கம் செய்யப் பட்டதற்கான எந்த ஆதாரமும் இது வரையிலும் கிடைக்கவில்லை.[6]