![]() தஞ்சோங் பியாண்டாங் கடற்கரை | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°04′N 100°23′E / 5.067°N 100.383°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கிரியான் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 34250 |
தொலைபேசி எண் | +60-05-725 0000 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | P |
தஞ்சோங் பியாண்டாங் (ஆங்கிலம்: Tanjung Piandang; மலாய்: Tanjung Piandang; சீனம்: 丹绒便当) என்பது மலேசியா, பேராக் மாநிலம், கிரியான் மாவட்டத்தில் (Kerian District) அமைந்துள்ள ஒரு மீனவ நகரம்; மற்றும் முக்கிம் ஆகும். பேராக் மாநிலத்தின் வடமேற்கு முனையில் உள்ளது. பத்து காஜா மாவட்ட நகராண்மைக் கழகத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகிறது. ஈப்போ மாநகரத்தில் இருந்து 117 கி.மீ. தொலைவில் உள்ளது. [1]
இந்த நகரம் தஞ்சோங் பியாண்டாங் ஆற்றின் (Sungai Tanjung Piandang) கரையில் அமைந்துள்ளது; மிக அருகில் கிரியான் மாவட்டத்தின் நிர்வாக மையமான பாரிட் புந்தார் நகரம் உள்ளது. தஞ்சோங் பியாண்டாங்கில் உள்ள ஒரு சுற்றுலா பகுதி பான் பெச்சா கடற்கரை (Pantai Ban Pecah) ஆகும். தஞ்சோங் பியாண்டாங்கில் உள்ள பெரும்பாலான கிராமவாசிகள் கடலையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.[2]
தஞ்சோங் பியாண்டாங் நகரம், நாட்டின் மிகவும் பிரபலமான இடமாக விளங்கவில்லை; இருப்பினும் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. இயற்கை அழகுடன் மிக அழகிய கடற்கரை பகுதிகளைக் கொண்டுள்ளது. அத்துடன் சுற்று வட்டாரத்தில் பரந்த அளவில் நெல் வேளாண்மையும் நடைபெறுகிறது.[3]
இந்த நகரத்தின் வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. முதன்முதலில் சீனாநாட்டில் இருந்து ஹக்கா சமூகத்தைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் (Hakka Chinese) இங்கு குடியேறினர். அவர்கள் சிறந்த வாழ்க்கையைத் தேடி இங்கு வந்தனர்; இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளனர். அவர்களின் இந்த வருகை, இந்த நகரத்திற்கு தனித்துவமான ஒரு கலாசார அடையாளத்தையும் வடிவமைத்துக் கொடுத்து உள்ளது.[4]
2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களிபடி தஞ்சோங் பியாண்டாங் கிராமப்புற மக்கள் தொகையில் மலாய்க்காரர்கள் 55% விழுக்காடு; சீனர்கள் 35% விழுக்காடு; மற்றும் சிறிய இனமாக 8 விழுக்காடு இந்தியர்கள்; மற்ற இனத்தவர்கள் 2% விழுக்காடு.[5]
தஞ்சோங் பியாண்டாங்கில் உள்ள மலாய் மக்கள் பெரும்பாலும் கிராமத்திலும் தஞ்சோங் பியாண்டாங் நகரத்திலும் வாழ்கின்றனர். சீனர்கள் உள்பகுதியிலும் பாகன் சேனா மற்றும் தஞ்சோங் பியாண்டாங் நகரங்களிலும் வாழ்கின்றனர்; இந்தியர்கள் கிராம உள்பகுதிக் குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.