தண்டுபாள்யா 3 | |
---|---|
திரைப்பட சுவரிதழ் | |
இயக்கம் | சீனிவாச ராஜு |
தயாரிப்பு | ராம் தல்லூரி |
கதை | சீனிவாச ராஜு |
இசை | அருஜுன் ஜன்யா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | வெங்கட் பிரசாத் |
படத்தொகுப்பு | சி. ரவிச்சந்திரன் |
கலையகம் | எஸ்.ஆர்.டி. என்டர் பிரைசஸ் பிரைவேட் லிமிடட் |
வெளியீடு | மார்ச்சு 16, 2018[1] |
ஓட்டம் | 102 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
தண்டுபாள்யா 3 (Dandupalya 3 [2]) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய கன்னட மொழி குற்றப்புனைவு திரைப்படமாகும் சீனிவாச ராஜு இயக்கிய இப்படத்தை ராம் தல்லூரி தயாரித்தார்.[3] தண்டுபாளையத்தைச் சேர்ந்த பிரபலமற்ற கொள்ளைக் கும்பலை அடிப்படையாகக் கொண்டு, 2017 ஆம் ஆண்டு எடுகப்பட்டு விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தண்டுபாள்யா 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த இந்தத் தொடரின் மூன்றாவது படமாகும். இப்படத்தில் பூஜா காந்தி நடித்துள்ளார். முதல் படத்தில் இருந்து அவர் தனது பாத்திரத்தை நடித்துள்ளார். மேலும் பு. ரவிசங்கர், மகரந்த் தேஷ்பாண்டே, சஞ்சனா, ரவி காலே, பெட்ரோல் பிரசன்னா உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நடிகர்கள் முந்தைய படங்களில் நடித்த தங்கள் பாத்திரங்களை மீண்டும் நடித்துள்ளனர்.[4] இப்படத்திற்கான இசையை அர்ஜுன் ஜன்யா அமைத்துள்ளார். வெங்கட் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தண்டுபாளையம் 3 என்ற பெயரில் வெளியானது.[5] முந்தைய படத்தில் பணிபுரிந்த நவீன் கிருஷ்ணா, தபலா நானி, ரமேஷ், குருராஜ் தேசாய் ஆகிய பெரும்பாலானோர் இப்படத்தில் தக்கவைத்துக் கொள்ளபட்டனர்.[6] இப்படம் கதையின் முடிவைக் குறிப்பதாக உள்ளது.[7]
இப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் இதன் முந்தைய படமான பாகம் 2 படப்பிடிப்பின் போதே படமாக்கப்பட்டது.[8] இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 2017 ஏப்ரல் முதல் நடைபெற்றது. முதலில் பாகம் 2 வெளியீட்டிற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டது. இருப்பினும், படம் 16 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்டது.
கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் வெளியான இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் 'பி' மற்றும் 'சி' மையங்களில் இருந்து நல்ல வசூலை ஈட்டியது.[9]
"அபியின்" என்னும் அபிவ்யக்தியின் செய்திக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, அபியை சந்திக்கும் ஆய்வாளர் சலபதி அவளை கும்பலிடம் அழைத்துச் சென்று அவளின் செயலைக் கண்டிக்கிறார். உமேஷ் ரெட்டியை சுட்டிக்காட்டி, அந்த கும்பல் எந்த கோணத்தில் அப்பாவியாக தெரிகிறது என்று கேட்கிறார். அவர்களின் மூதாதையர்களிடமிருந்து அவர்களின் மரபணுவில் எவ்வாறு குற்றச் செயல்கள் கடத்தப்படன என்பதையும், அவர்களின் பிள்ளைகள் எவ்வாறு தாய்மார்களால் குற்றங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டார்கள் என்பதையும் அவர் அவளிடம் மேலும் விளக்குகிறார்: எதிர்காலத்தில் கடுமையான அடிகளைத் தாங்கி தப்பிக்க அவர்களை வலுக்கட்டாயமாக அடிப்பது. மேலும் அவர்களின் உடலை வலிமையாக்க கழுதை இரத்தத்தை குடிக்க வைப்பது போன்றவற்றை விளக்குகிறார். இப்படம் பின்னனர் கும்பலின் குற்ற வளர்ச்சியைத் தொடர்கிறது. பெங்களூர் நகரம் சுற்றுப்புற கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சி அடைந்தபிறகு, தண்டுபாள்யா கும்பலால் உருவான பிள்ளைகள் வளர்ந்து நகரத்திற்குச் செல்கின்றனர்.
முன்பின் தெரியாத ஒருவரை வீட்டில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று வீட்டில் உள்ள பாட்டியின் எதிர்ப்பையும் மீறி தண்டுபாள்யா கும்பலைச் சேர்ந்த பெண் (லட்சுமி) பணிப்பெண்ணாக ஒரு வீட்டில் வேலைக்கு சேர்க்கபடுகிறாள். குடும்பம் திருப்பதிக்கு செல்வதை அவர்களின் பேச்சின் வழியாக அறிந்த அவள், அதை கும்பலுக்குத் தெரிவிக்கிறாள். அவர்கள் நகரத்தில் தங்கள் முதல் திருட்டுக்குத் திட்டமிடுகின்றனர். அடுத்த நாள், அந்த வீட்டிற்கு கும்பலுடன் பெண் வருகிறாள். ஆனால் வீட்டில் தனியாக இருக்கும் ஒரு பெண் அவளிடம் இன்று ஏன் வந்தீர்கள் என்று வாக்குவாதம் செய்ய, அதையும் மீறி ஆண்கள் வீட்டிற்குள் நுழைந்து அவளை கட்டிப்போடுகின்றனர். கும்பலின் மற்ற ஆண்கள் திருடும்போது, ஒரு ஆண் அவளை கற்பழிக்கிறான், அதேபோல மற்றவர்களும் செய்கின்றனர். காவல் துறைக்கு தங்களைப் பற்றி தகவலை கற்பழிப்புக்கு உள்ளான பெண் தெரிவிக்கக்கூடும் என்று அஞ்சி கும்பல் தலைவன் (மகரந்த் தேஷ்பாண்டே) அவள் கழுத்தை அறுத்துக் கொல்கிறான். கழுத்தை அறுத்ததால் அவள் மூச்சுத் திணறும் போது, அவளது தொண்டையிலிருந்து மேலும் குருதி வெளியேறுகிறது, இது ஒரு விசித்திரமான "ஸ்ஸ்ஸ்ஸ்" என்று ஒலிக்கிறது. இந்த ஒலி அவனுக்கு பரவசத்தைத் தருகிறது. இதனால் கொலைகளின் போது பாதிக்கப்பட்டவர்களின் தொண்டையை அறுப்பதிலும் ஒலியைக் கேட்பதிலும் அவன் ஒரு பரவச வெறியை அடைகிறான். அவர்கள் பெரும்பாலும் காவல் துறைக்கு எந்த ஆதாரத்தையும் விட்டுவிடாமல் செயல்படுகின்றனர்.
காவல்துறையின் அலட்சியத்தால்தான் இந்த கும்பல் தொடர்ந்து வெற்றிபெறுகிறது என்று ஆய்வாளர் சலபதி விளக்குகிறார். கும்பல் நகரத்தில் முதல் கொலை புரிந்த இரவில், கும்பல் தலைவன் குடிபோதையில் கைது செய்யப்படுகிறான். அவன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கு உரையாடிக் கொண்டிருக்கும் காவலர்கள் குற்றவாளிகள் காவல்துறையை விட திறமையாக பல உத்திகளை கையாள்வது குறித்து பேசிக் கொண்டு இருக்கின்றனர். அந்த உரையாடலை கும்பல் தலைவன் நன்கு கேட்டுக் கொண்டு மனதில் பதிந்து கொள்கிறான். காலையில் வெளியே விடப்படும் அவன் தன் கும்பலிடம் சேர்கிறான். பின்னர் காவலர்களின் உரையாடலில் இருந்து கற்ற விசயங்களை தன் கும்பலின் குற்றங்களில் செயல்படுத்துகிறான். அதைக் கொண்டு ஆதாரம் இல்லாமல் கற்பழிப்பு, கொலைகளை கும்பல் செய்கிறது. இதைக் கேட்ட அபி அதிர்ச்சி அடைகிறாள்.
ஆய்வாளர் போலி சாட்சிகள் குறித்து விளக்குகிறார். கும்பலின் கற்பழிப்பில் இருந்து உயிர் தப்பிய ஒருவரை அவர் சந்தித்து விசாரிக்கும் போது, முதலில் அந்த நிகழ்வை நிராகரித்த அப்பெண் பிறகு, அதை ஒப்புக்கொள்கிறாள். ஆனால் சமூகத்தால் ஏற்படும் அவமதிப்பின் காரணமாக அவள் சாட்சியளிக்க விரும்பவில்லை. மேலும், மோசமானவர்களைப் பிடித்து தண்டிக்க, மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளும் சரியானவையே என்று நியாயப்படுத்தப்படுகின்றது.
வீட்டின் அழைப்பு மணியை யாரேனும் அடிக்கும்போது கவனமாக இருக்குமாறு ரவிசங்கர் கேட்பதுடன் படம் முடிகிறது.
இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.
கன்னட பாடல் பட்டியர் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அருகருகோ" | அர்ஜுன் ஜெயா | 2:30 | |||||||
2. | "கஜரா கஜரா கஜரா" | சிம்மா | 4:00 | |||||||
மொத்த நீளம்: |
6:30 |
Telugu track list | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அருகருகோ" | அர்ஜுன் ஜெயா | 2:30 | |||||||
2. | "கஜரா கஜரா கஜரா" | சிம்மா | 4:00 | |||||||
மொத்த நீளம்: |
6:30 |
தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எழுத்தாளர் சுனயனா சுரேஷ், படத்துக்கு 3/5 மதிப்பிட்டுள்ளார். "படத்தின் முதல் இரண்டு பாகங்களைப் பார்ப்பது நல்லது. இதில் குற்றவாளிகளும் அதிகாரிகளும் உள்ளவாறே காட்டப்படுகிறனர். இந்த இதயமற்ற குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள வைக்கும் பணியில் கொடூரமான காவலராக பு. ரவிசங்கர் நன்கு நடித்துள்ளார். பூஜா காந்தி தனது தடையற்ற அவதாரத்தில் கைதட்டலுக்கு தகுதியான மற்றொரு நபர். மகரந்த் தேஷ்பாண்டே பயத்தைத் தூண்டுகிறார், மற்ற நடிகர்கள் தங்கள் பாத்திரத்துக்கு உண்மையாக இருக்கிறார்கள்." [9]
சத்ரலோகாவின் எழுத்தாளர், 3.5/5 மதிப்பீடு அளித்து, "தண்டுபாள்யா கும்பலின் குற்றம் குறித்த படத்தின் மூன்றாம் பாகம் ஒரு திகிலூட்டும் கதையாகும், மேலும் இந்த கும்பல் எப்படி பிடிபட்டது என்பது பற்றி இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ராஜு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், பயமுறுத்தும் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்." [10]
சினிமா எக்ஸ்பிரசின் எழுத்தாளர், படத்திற்கு 3/5 மதிப்பீடு அளித்து, "பூஜா காந்தி தனது சக்திவாய்ந்த நடிப்பால் பார்வையாளர்களை வென்றுள்ளார். அதே நேரத்தில் மகரந்த் தேஷ்பாண்டே கதாபாத்திரத்தை ஆழமாக வழங்கி இருக்கிறார். ரவிசங்கர் ஒரு சகலகலா வல்லவராக காவலர் அவதாரத்தில் இறங்கியதில் எந்த பிழையும் செய்யவில்லை. ஸ்ருதி, கரி சுப்பு, ரவி காலே, டேனி ஆகியோர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள். அர்ஜுன் ஜன்யாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு நன்கு ஏற்றதாக உள்ளது." [11]