தன்வந்தி ராமராவ் (Dhanvanthi Rama Rau) (1893 – 1987) இந்திய குடும்பக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் நிறுவனராகவும் அதன் தலைவராகவும் இருந்தார். புகழ்பெற்ற இந்திய அரசு ஊழியரான சர் பெனகல் ராமராவ் என்பவரை மணந்தார். மேலும் எழுத்தாளரான சாந்தா ராமராவின் தாயார் ஆவார்.
தன்வந்தி, காஷ்மீர பண்டிதர் குடும்பத்தில் தன்வந்தி ஹேண்டூவாக பிறந்து, கர்நாடகாவின் ஹூப்ளியில் பிறந்து வளர்ந்தார். எனவே, இவர் கன்னடம் தெரிந்திருந்தது. ஹூப்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இவர், மாநிலக் கல்லூரியில் சேர சென்னை சென்றார். அங்கிருந்து கலைகளில் இளங்கலை பட்டம் பெற்றார்.
சென்னையில், புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், இந்தியக் குடிமைப் பணியில் உறுப்பினராக இருந்தவரும், இராஜதந்திரியும், சித்ராபூர் சரஸ்வத் பிராமணரும் தென்னிந்தியருமான சர் பெனகல் ராமராவ் என்பவரைச் சந்தித்து திருமணம் செய்தார்.[1] குடும்பக் கட்டுப்பாட்டுக்கு குரல் கொடுத்த மார்கரெட் சாங்கரின் சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் கூட்டமைப்பின் தலைவராகவும் தன்வந்தி பணியாற்றினார்.[2]
இவருக்கு 1959இல் இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கியது.[3] இவரது நினைவுக் குறிப்புகள் "ஒரு மரபுரிமை" (An Inheritance) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.