மருத்துவர். தமிழிசை சௌந்தரராஜன் | |
---|---|
2வது தெலங்கானா ஆளுநர் | |
பதவியில் செப்டம்பர் 08, 2019 – 19 மார்ச்சு 2024[1] | |
முன்னையவர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் |
25வது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (கூடுதல் பொறுப்பு)[2] | |
பதவியில் 18 பெப்ரவரி 2021 – 19 மார்ச்சு 2024 | |
முன்னையவர் | கிரண் பேடி |
மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு | |
பதவியில் 16 ஆகத்து 2014 – 01 செப்டம்பர் 2019 | |
இயக்குநர் (அலுவல் சாரா), பாரத் பெட்ரோலி நிறுவனம்[3] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 2, 1961[4] நாகர்கோவில், மெட்ராஸ் ஸ்டேட், இந்தியா (தற்போதைய தமிழ்நாடு) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மருத்துவர் பி. சௌந்தரராஜன் |
பிள்ளைகள் | சுகநாதன் |
பெற்றோர் | குமரி அனந்தன் கிருஷ்ணகுமரி |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முன்னாள் கல்லூரி | மதராசு மருத்துவக் கல்லூரி |
வேலை | |
தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan, பிறப்பு: சூன் 2, 1961) ஓர் இந்திய அரசியல்வாதியும், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும் ஆவார்.[5] 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்று அப்பதவியில் இருக்கிறார்.[6] இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார்.[7] தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின்[8] மகளான இவரும், இவரது கணவர் சௌந்தரராஜன் தொழில்முறை மருத்துவர்கள். இவர் இதற்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராவார்.
தமிழிசை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் சூன் 2, 1961 ஆம் ஆண்டு குமரி அனந்தன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் ஒரு மருத்துவர் ஆவார். இவர் சௌந்தரராஜன் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு சுகநாதன் என்னும் மகன் உள்ளார்.[9] இவர் மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்து முடித்தார்.
2006, 2011 சட்டசபைத் தேர்தல்களிலும், 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக வேட்பாளராக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியடைந்தார்.
இவரை 2017 ஆம் ஆண்டு மத்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், அலுவல் சாரா இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்த பதவியில் இவர் மூன்றாண்டு காலம் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்தது.[10]
ஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு சதவீதம் % |
---|---|---|---|---|---|---|
2006 | சட்டமன்றத் தேர்தல் 2006 | பாஜக | இராதாபுரம் | 5ஆவது இடம் | 5,343 | 4.70% |
2011 | சட்டமன்றத் தேர்தல் 2011 | பாஜக | வேளச்சேரி | 4ஆவது இடம் | 7,040 | 4.63% |
ஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு சதவீதம் % |
---|---|---|---|---|---|---|
2009 | 15வது மக்களவைத் தேர்தல் | பாஜக | வட சென்னை | 3ஆவது இடம் | 23,350 | 3.54% |
2019 | 17வது மக்களவைத் தேர்தல் | பாஜக | தூத்துக்குடி | 2வது இடம் | 2,15,934 | 21.8% |
தமிழிசை சௌந்தரராஜன் #மி டூ இயக்கத்தின் ஆதரவாளர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான எந்தவொரு பெண்ணுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.[11]
சௌந்தரராஜன், கோவில்களை கோவில் பக்தர்கள் மற்றும் ஆத்திகர்களைக் கொண்ட குழுக்களால் நிர்வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.[12]
2019 ஆம் ஆண்டு தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றார், ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் முன்பு இப்பதவியை வகித்தார்.[13] இவர் 2 சூன் 2014 அன்று உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் இரண்டாவது ஆளுநர் ஆவார்.[14] அனைத்து மாநில ஆளுநர்களிலும் இவர் இளையவர்.[15] 18 மார்ச் 2024 அன்று இப்பதவியை விலகினார்.[16]
தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) 18 பிப்ரவரி 2021 அன்று பதவியேற்றார்.[17] சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தமிழிசை தமிழில் சத்தியப்பிரமாணம் செய்தார். 18 மார்ச் 2024 அன்று இப்பதவியை விலகினார்.[18]
தமிழிசை சௌந்தரராஜனின் கீழ் உள்ள இராஜ் பவன், தெலுங்கானா மாநில உயர்கல்வி சபையுடன் இணைந்து, சிறந்த ஆசிரியர்கள், சிறந்த ஆராய்ச்சி மற்றும் கல்விசார் சமூகப் பொறுப்பில் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான 'வேந்தர் விருதுகளை' நிறுவியது.[19]
தெலுங்கானாவின் பழங்குடியின சமூகங்களுக்கு பொருத்தமான ஊட்டச்சத்து தலையீட்டு திட்டத்தை உருவாக்குவதற்கான விரிவான செயல் திட்டத்தை உருவாக்க, ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து தமிழிசை கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.[20][21]
ஏப்ரல் 2023 இல், தெலுங்கானா அரசு 10 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஏழு மாதங்களான பிறகும் தனது ஒப்புதலை வழங்கத் தவறியதற்காக சௌந்தரராஜனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிப்பேராணை மனு தாக்கல் அரசு செய்தது.[22]
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 2024 மார்ச் 18 அன்று தெலுங்கானா ஆளுநர் பதவியையும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியையும் தமிழிசை சௌந்தரராஜன் இராஜினாமா செய்தார்.[18] பாஜகவில் இணைந்து முழுநேர அரசியலுக்குத் திரும்பியுள்ளார்,[23] தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவார் என பாஜக பட்டியல் வெளியிட்டுள்ளது.[24]