தமிழ்த் தொன்மவியல் (Tamil mythology) என்பது தமிழ் மக்களிடையே வழங்கிவரும் பழங்கதைகளையும் புனித விவரணைகளையும் குறிப்பதாகும். இத்தொன்மவியலின் பொருள் தமிழர் பண்பாடு, திராவிடர் பண்பாடு மற்றும் சிந்துசமவெளி நாகரிகம் ஆகியவற்றின் கூறுகளோடு இந்து சமயப் பார்வைகளையும் அம்சங்களையும் உள்ளடக்கியக் கலவையாக அமைந்துள்ளது.
சமசுகிருத இலக்கியத்தோடு தமிழ் இலக்கியமும் இந்துக் கலாச்சாரம் குறித்த முக்கியத் தகவல் மூலமாகக் கருதப்படுகிறது. இந்து மறைகளில் காணலாகும் அகத்தியர், இராவணன், பதஞ்சலி உள்ளிட்ட பல வரலாற்று நபர்களின் மூலாதாரமாகப் பழந்தமிழ்க் காப்பியங்கள் அமைகின்றன. முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு பழந்தமிழ் இலக்கியங்களே தோற்றமூலமாக அமைந்துள்ளன. இத்தெய்வங்களே பின்னாளில் இந்து சமயத்தில் முறையே கார்த்திகேயனாகவும் காளியாகவும் உட்கொள்ளப்பட்டது. நடராஜர், மீனாட்சி, திருப்பதி, இராமேசுவரம் முதலியவற்றின் வரலாற்று மூலமாகவும் தமிழ் இலக்கியங்கள் அமைந்துள்ளன. பண்டைய தமிழர்கள் சிவன் வழிபாடு ஆதி தமிழகம் காலத்திலிருந்து மக்கள் சிவனை வணங்கி வந்தார்கள். சிவன் முவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் உத்திரகோசமங்கையில் தான் பிறந்தார். கடவுள் என்று அழைக்கப்படும் சிவன் பிறந்த ஊர் உத்திரகோசமங்கை தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதியாக பதிவு செய்தார்கள். உலகத்தில் முதல் சிவன் கோவில் உத்திரகோசமங்கை திருக்கோவில். சிவன் முதல் தமிழ் சங்கத்தை ஆரம்பித்து வழங்கினார்.
கார்த்திகேயன் என்றும் வழங்கப்படும் முருகன், போர்த் தெய்வமாகவும், வெற்றித் தெய்வமாகவும் வழங்கப்படும் இந்துக் கடவுளாகும். பெரும்பாலும் தமிழ் தாக்கமுள்ள இடங்களில், குறிப்பாக தென்னிந்தியா, இலங்கை, மொரிசியசு, மலேசியா, சிங்கப்பூர், ரீயூனியன் தீவு போன்ற இடங்களில் முருகனை வணங்கி வழிபடும் வழக்கத்தைப் பரவலாகக் காணலாம். தமிழ்நாட்டில் அமைந்துள்ள அறுபடைவீட்டுத் தளங்களே இந்தியாவினுள் இடம்பெறும் முருகனின் மிக முக்கியமானக் கோவில்களாகும். யாழ்ப்பாணத்தில் இந்துக்களும் பௌத்தர்களும் புனிதத்தளமாகப் போற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி கோவிலும், தெற்கில் கதிர்காமர் கோவிலும் இலங்கையில் அமைந்த முருகனுக்கான புனிதத் தளங்களாகும்.[1] மலேசியத் தமிழின மக்கள் பத்து மலைக் குகை முருகனை வழிபடுகின்றனர். அங்கு தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகேயன் அக்கினி பகவானுக்கும் சுவாகா என்ற தேவகன்னிகைக்கும் பிறந்ததாக ஒரு கதை உண்டு. சுவாகா, பின்னர் சப்தரிசிகளின் ஏழு பத்தினிகளுள் அறுவராக உருமாற, அந்த ஆறு துணைவியரும் கார்த்திகைப் பெண்களானதாகவும் அக்கதை கூறுகிறது. மேலும் முருகன் மகிசாசுரனைக் கொல்லப் பிறந்ததாகவும் ஒரு கூற்று உண்டு. [2] (மகிசன், துர்கையின் எதிரியாக பின்னாட்களில் உருவான தொன்மங்களில் சித்தரிக்கப்படுகிறான்). கார்த்திகேயனால் தனக்குத் தீங்கு நேரலாம் எனக் கருதி, இந்திரன் அவனைத் தாக்கினான். இந்திரனைச் சிவன் குறுக்கிட்டுத் தடுத்து, முருகனைத் தேவர் படையின் தளபதியாக்குகிறான். மேலும் இந்திரன் மகளான தேவசேனையையும் முருகன் மணக்கிறான். இதனால் முருகனை தேவசேனாபதி எனும் சிலேடை (தேவசேனாவின் பதி[கணவன்] / தேவ[தேவர்]-சேனை[படை]யின் பதி[தலைவன்]) பொருந்திய பெயரால் வழங்குவதாகவும் கதை அமைகிறது.
சாஸ்தா, அல்லது சாத்தன் என்றழைக்கப்படும் ஐயப்பன் இந்தியா முழுதும் வழிபடப்படும் ஒரு இந்து சமயத் தெய்வம் ஆகும். சிவனுக்கும் திருமாலுக்கும் (மோகினி, என்ற திருமாலின் ஒரே பெண் அவதாரத்தில்) பிறந்த தருமசாத்தனின் அவதாரமாக ஐயப்பனைக் கருதுவர். கழுத்தில் மணியணிந்து யோகாசனத்தில், அமர்ந்த நிலையிலேயே பெரும்பாலும் சித்தரிக்கப்படுவதால் மணிகண்டன் என்றும் ஐயப்பனை வழங்குவர். தமிழ்நாட்டில் பரவலாக வணங்கப்படும் காவல் தெய்வமான ஐயனாரோடு ஐயப்பனுக்கு நெருங்கிய வரலாற்றுத் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரக்கக் குல அரசனும், தன் தமையனுமான மகிசாசுரனைத் தேவர்கள் வஞ்சித்துக் கொன்றதனால், அரக்கக்குல இளவரசியான மகிசி கோபமடைந்தாள். எந்த ஆடவன் கையிலும் தனக்குத் தோல்வியில்லை என்று வரம் பெற்றிருந்த மகிசனைத் தேவர்கள், துர்கையை அனுப்பி வதைத்தனர். இச்செயலுக்கு பழிதீர்க்கும் பொருட்டு மகிசி கடுந்தவம் புரிந்து, படைப்புக் கடவுளான பிரம்மனின் அருளைப் பெற்றாள். பிரம்மனிடம் சாகாவரத்தை வேண்டினாள். எனினும் பிரம்மன் அதனை மறுக்கவே, சிவன் திருமால் ஆகிய இரு ஆண்கடவுட்களுக்குப் பிறந்த மகனைத் தவிர வேறு எவராலும் தனக்கு சாவுயில்லை, என்று வேறு வரம் வேண்டிப் பெற்று, அண்டத்தை ஆளத்துவங்கினாள்.
இதனால் விளையும் பேரிடரிலிருந்து தங்களை விடுவிக்குமாறு தேவர்கள், சிவனையும் திருமாலையும் வேண்டினர். இதற்குத் தீர்வாக, திருமால், பாற்கடல் கடைந்து அமுதமெடுத்தபோது, அரக்கர்களை வசியம் செய்து அமுதத்தைத் தேவர்களுக்குப் பெற்றுத்தர மேற்கொண்ட பெண்ணுரு மோகினி அவதாரத்தை மீண்டும் கையாண்டு சிவனோடு இணைந்து, மகிசியை வதைக்கும் தெய்வீகப் பிள்ளையைப் பெற்றெடுத்தனர்.
இப்புணர்வில் தருமசாத்தன் பிறந்ததாகக் கருதப்படுகிறது. சிவன் திருமால் இருவரின் அம்சமாக, இருவரின் சத்தியையும் தருமச்சாத்தன் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இத்தருமச்சாத்தனின் அவதாரமாகவும், பாண்டிய அரச வம்சத்தை சேர்ந்ததாகவும் ஐயப்பனைக் கருதுவர். ஐயப்பன் தருமச்சாத்தனோடு பின்னர் கலந்திட்டதாகவும் கருதுவர். ஐயப்பன் பிறந்தவுட திருமால் அவனுக்கு மணி பொருந்திய கழுத்தணி வழங்கியதால் மணிகண்டன் என்றும் ஐயப்பனை அழைப்பர்.[3] பேரளப் புத்திரன், தரும சாஸ்தாவு என்றும் இத்தெய்வத்தை வழங்குவர்.
பெருமாள் என்றும் வழங்கப்படும் திருமால் தமிழ்நாடு வாழ் தமிழரிடையேயும் புலம்பெயர் தமிழரிடையேயும் அதிகப்படியாக அறியப்படும் இந்துக் கடவுளாகும். திருமால் தமிழரால் பெருமாள் என்று வழங்கப்படுகிறது.
தமிழ் சங்க இலக்கியங்களில் கரியவன் என்று பொருள்தரும் மாயோன் என்றழைக்கப்படும் திருமால், அண்டத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலையும் ஆளும் பெருந்தெய்வமாகக் கூறப்படுகிறது.
திருமாலின் புகழினைப் பாடும், கடுவன் இளவெயினர் இயற்றி பரிபாடலில் மூன்றாவதாக அமையும் பாடலின் ஒரு பகுதி:
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ; அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;
இப்பாடலில் குறிப்பிடப்படும் 'உட்பொருளும் நீ' என்ற சொற்கள் அண்டத்தின் அடிப்படை காரணமாகக் கருதப்படும் அந்தர்யாமியாகத் திகழும் திருமாலைப் புகழ்வதாக அமையும். இக்கருத்து வேதங்களில் முதலில் குறிக்கப்பெற்று, பின்னர் ஆழ்வார் பிரபந்தங்களிலும், வைணவ ஆச்சாரியார்களின் வர்ணனை வியாக்கியானங்களிலும் பெரிதும் போற்றி மரபாக்கப்பட்டது.
சிவபெருமான் தில்லைவனத்தில் அலைவதிலிருந்து சிதம்பரத்தின் கதை துவங்குகிறது. சிதம்பரத்தின் அருகிலுள்ள பிச்சாவரம் சதுப்பு நில அலையாத்திக் காடுகளில் தற்போது காணலாவது போன்ற தில்லை மரங்கள் நிறைந்ததாகத் தில்லைவனம் கருதப்படுகிறது. அந்தத் தில்லைவனத்தில் மாயமந்திரங்கள் கொண்டு இறைவனைக் கட்டுப்படுத்தலாமென நம்பிய முனிகள் ரிசிகளின் குழுக்கள் உறைந்திருந்தன.[4] அவ்வனத்தில் சிவபெருமான் அழகொளிரும் பிட்சாடனர் கோலம் கொண்டு இரவல் பெற்று அலைந்து திரிந்ததாகவும், அவரது துணைவியாக மோகினி வடிவில் திருமாலும் உடன் திரிந்ததாகவும் கதை போகும். அங்கு வாழ்ந்திருந்த ரிசிப்பத்தினிகள், அழகொளித் திகழ வனத்தில் திரிந்த அந்த பிச்சன்பால் வயப்பட்டு மோகம் கொண்டனர். இதனால் கோபமுற்ற முனிவர்கள் மந்திரங்கள் ஓதி நாகங்களைப் பிச்சாடன்மீது ஏவினர். அந்த நாகங்களை அள்ளி சிவபெருமான் தன் சடாமுடியிலும், கழுத்திலும், இடையிலும் அணியாக அணிந்தார். மேலும் கோபமுற்ற ரிசிகள் புலியை ஏவ அதன் தோலை உரித்துப் பாயாகவும் இடைக் கச்சாகவும் அணிய மேலுமோர் யானையை ஏவினர். அதனையும் வதைத்து அதன் தோலையும் உரித்தார்.
இதன்பின் ரிசிகள் தம் மொத்த வலிமையையும் திரட்டி முயலகன் என்ற சூரனைத் தூண்டி ஏவ, சிவபெருமான் குறுநகை புரிந்து அவனை மிதித்து ஏறி ஆனந்தத் தாண்டவம் புரிந்து தன் உண்மை வடிவத்தைக் காட்டினார். இதனைக் கண்ட ரிசிகள் சிவனின் உண்மைக் கோலத்தையும் வலிமையையும் கண்டு மாயமந்திரங்களுக்கு அப்பாற்பட்டவன் சிவபெருமான் என்றுணர்ந்து சரணடைந்தனர். இவ்வாறாகக் கதை போக்கு அமையும்[4]
ஒருபோது, யாருக்கும் எந்தத் தீங்குமிழைக்காத சூரனொருவனை இந்திரன் வதைத்துவிட, சாபத்துக்குள்ளாகிறான். இப்பாவத்திலிருந்து விடுபடும் வழி தேடி அலைந்து இறுதியில் ஓர் காட்டில் தென்பட்ட சிவலிங்கத்தின் அருளால் சாப விடுதலை பெற்று, அங்குக் கோவில் அமைக்கிறான்.
அதே காலகட்டத்தில் தென்னகத்தில் மலையதுவச பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் இந்திரன் கோவிலமைத்த அத்தளத்து அருகிலுள்ள மனவூர் என்ற சிறு நகரத்தை ஆண்டுவந்தான்[5]. இவன் குலசேகரப் பாண்டியனின் மகனாவான். அவன் இச்சிவலிங்கம் குறித்துக் கேள்விப்பட்டு, கதம்பவனம் என்ற கானகத்தில் அதற்கொரு பெருங்கோவில் எழுப்ப முடிவு செய்தான். இச்சிற்றரசையே வளர்த்து புகழ் பெற்ற மதுரை அரசாக ஆக்கினான்.
எனினும் அம்மன்னனுக்கு மக்கட்பேறில்லாததால், சிவபெருமானிடம் அரசுக்கொரு வாரிசினை வேண்டினர். மன்னனது வேண்டுதலுக்கு இறங்கி, சிவபெருமான் அவனுக்குப் பார்வதியின் அம்சமான ஒரு "அயோனிஜ" (கருவறையில்லாமல் பிறந்த) குழந்தையை வரமாக வழங்கியதாகக் கதை அமைகிறது. அக்குழந்தையே பாண்டிய மாமன்னன் மலையத்துவஜன் மற்றும் காஞ்சனமாலை தம்பதியரின் மகளாக வளர்ந்து சிவபெருமானின் உருவமான சுந்தரேசுவரரின் மனைவியாக ஆன மீனாட்சி அம்மை ஆவார். இவர் "தடாதகை பிராட்டி" எனவும் அறியப்படுகிறார். இவர் மிகுந்த வீரம் கொண்டவராகவும், தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படைதிரட்டிச் சென்று கையிலையை வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கையிலையில் சிவபெருமானை கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை அடைந்ததால் சிவபெருமானையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.[6][7] மீனாட்சி மும்முலை கொண்டிருந்ததாகவும், கையிலையில் சிவனைக் கண்டபோது மூன்றாவது முலை மறைந்ததாகவும் கூறப்படுகிறது.
மீன் போன்ற கண்ணுடையாள் எனும் பொருள்படுமாறு மீன் (தமிழ்), அட்சி/அட்சயம் (கண் - சமசுகிருதம்) என்ற இரு பதங்களின் கூட்டுச் சொல்லான "மீனாட்சி" என்று பொதுவாகவும், தனித்தமிழில் "அங்கயற்கண்ணி" (அம்- அழகிய + கயல் - மீன் + ["போன்ற" என்ற உவம உருபு தொக்கியுள்ளது] + கண்ணி - கண்ணுடையாள்) என்றும் வழங்கப்படுகிறாள்.
கண்ணகி தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரக் கதையின்(கி.மு. 100-300) தலைவியாவாள், ஒரு பழம்பெரும் தமிழச்சி. கண்ணகி, தன் கணவனான கோவலனுக்குத் தவறுதலாக மரண தண்டனை விதித்துக் கொன்ற மதுரையை ஆண்ட சங்க காலப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பழிதீர்த்து மதுரையையும் எரித்ததாக சிலப்பதிகாரக் கதை அமையும்.
கொடுங்கல்லூர் பகவதி கோவில் கண்ணகியின் தியாகத்தின் நினைவாக அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராம முனி மக்களின் நல்வாழ்விற்காக இக்கோவிலை அமைத்ததாகக் கூறப்படுகிறது. இக்கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நகரின் நடுவில் ஏதோ ஒரு சிறப்பான காரணத்திற்காக அமைக்கப்பட்டதாக பழங்கதைகள் கூறுகின்றன.[8]
ஒரு கதையின்படி பரசுராமர் கேரளத்தைப் படைத்தவுடன் அவரைத் தாருகன் என்ற அரக்கன் இடர் செய்தான். இவ்வரக்கனைக் கொல்ல சிவனிடம் பரசுராமன் வேண்ட, சிவனோ பராசக்தியின் அம்சமாகத் திகழும் பகவதிக்குக் கோவில் எழுப்புமாறு அறிவுறுத்தினார். இக்கதையின்படி, பத்ரகாளியே அரக்கன் தாருகனைக் கொன்றாள்.
சித்தர்கள் என்பார் முக்தி பெறும் பொருட்டு நூதன முறையிலான ஆன்மீகப் பயிற்சிகளைக் கையாண்ட இந்தியத் துறவிகள், தமிழகத்தில் இவர்கள் பெரும்பாலும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாவர்.
அபிதான சிந்தாமணி கூறும் ஒன்பது சித்தர்கள் பின்வருமாறு:
தமிழ் சித்தர் மரபில் மொத்தம் பதினெட்டு சித்தர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலெமூரியா/ குமரிக்கண்டம் | |
---|---|
![]() பழம்பெரும் இலெமூரியா | |
வகை | அழிந்துபோனதாக அனுமானிக்கப்படும், குமரிக்கண்டம் என்று கந்தபுராணத்திலும் சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள, நிலப்பரப்பு. |
உறை மக்கள் | இலெமூரியர்கள் |
குமரிக்கண்டம் (30,000 கி.மு. முதல் 16,000 கி.மு)[9] என்பது சங்க இலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கடலுள் மூழ்கித் தொலைந்ததாகக் கருதப்படும் நிலப்பரப்பின் பெயராகும். இந்நிலப்பரப்பு இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் தென்கோடி முனையான தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் தெற்காக அமைந்திருந்ததாகக் கருதப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. கலித்தொகையின் 104-ஆவது பாடல், கடல் கொண்ட நிலங்களுக்கு ஈடு செய்ய பாண்டிய மன்னர்கள் புதுப்புது நிலங்களைக் கைப்பற்றியதாக அமைகிறது.[10] தற்போது கடலுள் மூழ்கிப்போனதாகக் கருதப்படும் நிலத்தில் பஃறுளியாறு மற்றும் குமரியாறு எனும் ஆறுகள் ஓடியதாகக் குறிக்கப்பட்டுள்ளது.[11] கி.பி முதல் சில நூற்றாண்டுகளில் படைக்கப்பட்ட, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் அமைந்த மதுரைக்காண்டத்தின் ஒரு பாடலில் "பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்று பாண்டிய மன்னனின் நிலத்தில் கடல்கோல் நிகழ்ந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் இக்குறிப்பினை விளக்குகையில், முன்னொரு காலத்தில் தற்போதைய கன்னியாகுமரிக்கும் தெற்கில் 700 காவதம் தொலைவிற்கு நிலப்பரப்பு இருந்ததாகவும், அதன் வடக்கில் பஃறுளி ஆறும், தெற்கில் குமரியாறும் இருந்ததாகவும் கூறுகிறார். காவதம் என்பது இன்றைய அளவில் எவ்வளவு தூரம் என்று தெரியாததால் அவர் குறிப்பிட்ட நிலப்பரப்பின் தொலைவு 1,400 மைல்கள் (2,300 km)-இல் இருந்து 7,000 மைல்கள் (11,000 km)-இற்குள் இருக்கலாம் என்று பலவாறாகக் கருதப்படுகிறது. மேலும் அந்நிலத்தின் மொத்த பரப்பளவு 6-7 ஆயிரம் சதுர மைல்களாக இருக்கலாம் என்று சிலரும், சில கிராமங்களை மட்டும் உள்ளடக்கிய சிறு நிலப்பரப்பாக இருக்கலாம் என்று மற்றும் சிலரும் கருதுகின்றனர்.[12]
இந்நிலப்பரப்பு ஏழுதெங்கை நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பாலை நாடு, ஏழுபின்பாலை நாடு, ஏழுகுன்று நாடு, ஏழுகுணக்கரை நாடு, ஏழுகுறும்பனை நாடு என மொத்தம் 49 நாடுகளாகப் பகுக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார். "குமரிக்கொல்லம்" என்றழைக்கப்படும் மலைநாட்டிலிருந்து துவங்கிய இந்நிலப்பரப்பு அனைத்தும் காடுகளோடும் குடிகளோடும் கடலுள் மூழ்கியதாகக் கூறுகிறார்.[11] இன்றைய கொல்லம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அந்நிலப்பரப்பின் மூழ்காது எஞ்சிய சிறுபகுதிகளாகக் கருதப்படுகிறது.