தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)

Lua error in Module:Lang at line 621: wrong number of arguments to 'insert'.

தமிழ்த்தாய் வாழ்த்து

புதுச்சேரி மாநிலம் song
இயற்றியவர்பாரதிதாசன்
இசைஎல். கிருஷ்ணன்
சேர்க்கப்பட்டது2007

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே அல்லது புதுவையின் தமிழ்த் தாய் வாழ்த்து (அன்னை தமிழை பிரார்த்திப்பது) என்பது புதுச்சேரியின் மாநிலப் பாடல் ஆகும். இந்த பாடலை பிரபல கவிஞர் பாரதிதாசன் எழுதியிருந்தார். [1] இவர் எழுதிய இசை அமுது என்னும் பாடல் தொகுப்பிலுள்ள இரண்டாம் பகுதியின் முதல் பாடல் இதுவாகும்.[2]

1991 ஆம் ஆண்டில், இசையமைப்பாளர் எல். கிருஷ்ணன் இப்பாடலுக்கு இசையமைத்தார். [3] பொதுவாக புதுச்சேரி அரசின் அதிகாரப்பூர்வ விழாக்கள் இந்த பாடலுடன் தொடங்கி இந்திய தேசிய கீதத்துடன் முடிவடையும்.

வரலாறு

[தொகு]

1967 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சரான கா. ந. அண்ணாதுரை தமிழ்த்தாய் வாழ்த்தாக மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலை ஆக்க விரும்பினார்.[4] இதற்கிடையில் 1969-இல் அண்ணா இறந்தார். இதன்பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராகத் பொறுப்பேற்றதையடுத்து அப்பாடலை 1970 மார்ச்சு 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.[5]

அப்போது புதுச்சேரியிலும் தி.மு.க தான் ஆட்சியில் இருந்தது. அதன் முதல்வராக இருந்த பாரூக் மரைக்காயர் நீராரும் கடலுடுத்த படலையே புதுச்சேரியின் மாநிலப் பண்ணாக அங்கீகரித்தார். புதுச்சேரி கம்பன் விழாவில், புதுச்சேரிக்கு என தனியாக தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும் என்று கோவிந்தசாமி, மன்னர் மன்னன், புதுவை சிவம், புலவர் சித்தன் ஆகியோர் அம்மாநில முதல்வரான பாரூக் மரைக்காயரிடம் நோரடியாக கோரிக்கை வைத்தனர். அப்படியானால் யார் பாடலை வாழ்த்தாக வைக்கலாம் என்று அவர் கேட்டபோது மண்ணின் மைந்தரான பாரதிதாசனின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக வைக்கலாம் என்று அனைவரும் ஒருமித்து கூறினர். இதையடுத்து பாரதிதாசனின் இசை அமுது என்னும் பாடல் தொகுப்பின் இரண்டாம் பகுதியின் முதல் பாடலான வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற பாடலை புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தாக வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 1972, சனவரி, 4 அன்று முறையாக அரசாணை வெளியிடப்பட்டது.[6]

பாடல் வரிகள்

[தொகு]
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி![7]

பாடல் விளக்கம்

[தொகு]

வாழ்க்கையை நேர்மையானதாக, அழகானதாகச் செய்பவள் நீயே. நிறைவான புகழுக்குரியவள் நீயே என் தமிழ்த் தாயே! வாழ்வினில் தமிழரைத் தாழாது காப்பவள் நீதான். வீரனுக்குள் இருக்கும் திறனும், அவனது வெற்றிக்குக் காரணமும் நீதான். நான் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உன்னை விட்டுப்பிரியமாட்டேன். தமிழன் நான் என்றும் தலைகுனிய மாட்டேன். எனைச் சூழ நின்று எனக்கு இன்பத் தரும் தாயே, என் உடலுக்குள் உயிராய் இருக்கும் உனை மறக்கமாட்டேன். பெருமைமிகு தமிழே, என்னுயிரே, தேனே, எனது செயலும் உயிரும் உன்னைச் சார்ந்தே இயங்கும். நீ சிதைந்து போனால் நானும் சிதைவேன்; நல்லநிலையடைந்தால் நானும் நல்லநிலையடைவேன். களங்கமற்ற புது நீர்நிலை போன்ற தொன்மையான நல்ல மாந்தர் கூட்டத்தில் செந்தாமரை செழித்து வளர்ந்தது போல் வளர்ந்து செழித்த என் தமிழே வாழ்க! ஒளியான தமிழே நீ வாழ்க!  

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ramakrishnan, Deepa H. (22 March 2012). "Bharathidasan's gift to Tamil and Pondicherry".
  2. பாரதிதாசன் நூல்கள்: இசை அமுது
  3. "Uniform tune sought for 'Thamizh Thaai Vaazhthu'". 6 October 2007.
  4. "தமிழ்த்தாய் வாழ்த்து: ஒரு நூற்றாண்டு வரலாறு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  5. "Memo No.3584/70-4" இம் மூலத்தில் இருந்து 2018-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180125133904/https://tamil.oneindia.com/img/bbc/2018/01/x_99739152_tamilanthem.jpg.pagespeed.ic.Oeggf9ohSy.jpg. 
  6. "பாவேந்தரின் வரிகள் புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தாக மலர்ந்தது எப்படி?". Hindu Tamil Thisai. 2025-01-22. பார்க்கப்பட்ட நாள் 2025-02-07.
  7. http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/