இக்கட்டுரை தொடரின் ஒரு பகுதியாகும் |
தமிழ்நாடு அரசியல் |
---|
![]() |
2019 தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பில் 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12,524 கிராம ஊராட்சிகளும், சென்னை மாவட்டம் தவிர்த்து 36 மாவட்ட ஊராட்சி குழுக்களும் உள்ளன.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த அறிக்கையை 2 திசம்பர் 2019 அன்று அறிவித்தது.[1][2]
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என 20 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் இயற்றியது.[3][4] முன்னர் அனைத்து உள்ளாட்சித் தலைவர்களை வாக்காளர்கள் நேரடித் தேர்தல் மூலம் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். தற்போதைய இந்த அவசர சட்டத்தால் இனி கிராம ஊராட்சி தலைவர் பதவி தவிர பிற அனைத்து மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர் பதவிகள், உரிய வார்டு உறுப்பினர்களால் மட்டும் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
1996 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியியின் போது மேயர் பதவித் தேர்தல் முதல்முறையாக நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியிலேயே மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சியில் மீண்டும் மக்களால் நேரடி வாக்கு மூலமாகவே மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் 20 நவம்பர் 2019 அன்று, தமிழக அரசு வெளியிட்ட அவசரச் சட்டத்தில் மீண்டும் மறைமுகத் தேர்தல் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவித்துள்ளது. ஆனால் கிராம ஊராட்சித் தலைவர்களை மட்டும் வாக்காளர்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.[5]
தற்போது ஊரக உள்ளாட்சிகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டுமான தேர்தல்கள் 27 மற்றும் 30 திசம்பர் 2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டத் தேர்தலாக நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது.[6][7]
ஊரக உள்ளாட்சிகளின் தேர்தல்கள் முழுமையாக முடிந்ததும் 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் 2020 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்புகள் தெரிவித்துள்ளது.[8][9]
திமுக தொடர்ந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்[10] புதிதாக நிறுவப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் 8 டிசம்பர் 2019 அன்று வெளியிட்டது. இதனால் முந்தைய தேர்தல் அட்டவணை நீக்கி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.[11][12][13]
புதிய தேர்தல் அட்டவணையின் படி 27 மற்றும் 30 டிசமபர் 2019 நாட்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
உறுப்பினர்/பதவி | எண்ணிக்கை |
---|---|
மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி | 1,064 |
நகராட்சி உறுப்பினர்கள் பதவி | 3,468 |
பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி | |
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவி | 6,471 |
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி | 655 |
கிராம ஊராட்சி தலைவர்கள் பதவி | 12,524 |
கிராம ஊராட்சி வார்டு
உறுப்பினர்கள் பதவி |
99,324 |
மொத்தம் | 1,31,794 |
உறுப்பினர்/பதவி | எண்ணிக்கை |
---|---|
மாநகராட்சி மேயர் | 15 |
நகராட்சி தலைவர் | 121 |
பேரூராட்சி தலைவர் | 528 |
ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் | 385 |
மாவட்ட ஊராட்சி தலைவர் | 31 |
மொத்தம் | 1,083 |
கிராம ஊராட்சி வார்டு வேட்பாளருக்கு வெள்ளை நிறம், கிராம ஊராட்சி தலைவர் வேட்பாளருக்கு இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய வார்டு வேட்பாளர்களுக்கு பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு வேட்பாளர்களுக்கு மஞ்சள் நிறத்தில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும்.
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6 டிசம்பர் 2019 முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல்களை நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.[14] இந்த வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், டிசம்பர் 2019 இல் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம், வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் தவிர்த்த பிற மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த 6 டிசம்பர் 2019 அன்று தீர்ப்பு வழங்கியது. மேலும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்து 4 மாதங்களுக்குள் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.[15][16]
27 டிசம்பர் 2019 (வெள்ளிக் கிழமை) அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 2546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 4700 கிராம ஊராட்சித் தலைவர்கள், 37,830 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 45,336 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது, இத்தேர்தலில் 2,31,890 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் இன்று 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.[17][18][19][20]
இரண்டாம் கட்டத் தேர்தல் 30 டிசம்பர் 2019 (திங்கள்கிழமை) அன்று 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. அதில் 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்காளா்கள் தங்களது வாக்குகளைச் 25 ஆயிரத்து 8 வாக்குச் சாவடிகளில் செலுத்தினா்.[21]இரண்டாம் கட்டத் தேர்தலில் 70 விழுக்காடு வாக்குகள் பதிவானது.
ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 18,193 பேரும், கிராம ஊராட்சித் தலைவர்களாக 410 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களாக 23 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.[22] மீதமுள்ள 91,975 இடங்களுக்கு நடந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை 2 சனவரி 2020 அன்று காலை முதல் துவங்கியது. வாக்கு எண்ணிக்கை 3 சனவரி 2020 வரை தொடரும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.[23]
மொத்தம் உள்ள 515 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களில் திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் முறையே ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் என இரு பதவியிடங்களை தவிர்த்து, மீதம் உள்ள 513 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியிடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தல்களில் கவுன்சிலர் திமுக 243 இடங்களையும், அதிமுக 214 இடங்களையும், பாமாக 16 இடங்களையும், இதேகா 15 இடங்களையும், பாஜக 7 இடங்களையும், தேமுதிக 3 இடங்களையும், சிபிஐ 7 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும், பிறர் 13 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
5,090 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியிடங்களில், 3 இடங்களை தவிர்த்து மீதம் உள்ள 5087 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 2100 இடங்களையும், அதிமுக 1781 இடங்களையும், பாமக 224 இடங்களையும், காங்கிரஸ் 132 இடங்களையும், பா.ஜ.க 85 இடங்களையும், தே.மு.தி.க 99 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும், அமுமக, மதிமுக, தா.ம.க மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட பிறர் 571 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.[24]
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டவாறு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்.[25]
அரசியல் கட்சி | மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் | ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் | |
---|---|---|---|
திமுக | 243 | 2100 | |
அதிமுக | 214 | 1781 | |
பாட்டாளி மக்கள் கட்சி | 16 | 224 | |
பாரதிய ஜனதா கட்சி | 7 | 85 | |
இந்திய தேசிய காங்கிரசு | 15 | 132 | |
அமமுக | 0 | 94 | |
சிபிஐ | 7 | 62 | |
சிபிஐ (மார்க்சிஸ்ட்) | 2 | 33 | |
தேமுதிக | 3 | 99 | |
மதிமுக | 1 | 20 | |
விசிக | 1 | 8 | |
தமிழ் மாநில காங்கிரசு | 1 | 8 | |
நாம் தமிழர் கட்சி | 0 | 1 | |
சுயேச்சைகள் | 3 | 440 | |
தேர்தல் நடைபெற்ற மொத்த இடங்கள் | 513 | 5087 |
கிராம ஊராட்சித் தலைவர் தேர்தல்களில் 9615 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 76673 பேரும் நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மீதியுள்ள 26 இடங்களுக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தல்களில், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் தேர்தலில் 14 இடங்களை அதிமுகவும், அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக ஒரு இடத்தையும், திமுக 12 இடங்களையும் கைப்பற்றியது.
தேர்தல் நடத்தப்பட்ட 285 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலில் 150 இடங்களை அதிமுகவும், 135 இடங்களை திமுகவும் வென்றுள்ளது. [26][27]