தமிழ்நாடு இந்துக்கள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மொத்த மக்கள்தொகை | |||||||||
63,188,168 (2011)[1] தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 87.58% | |||||||||
மொழி(கள்) | |||||||||
தமிழ் | |||||||||
சமயங்கள் | |||||||||
சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், சமணம் |
தமிழர் |
---|
![]() |
தமிழ்நாட்டில் இந்து சமயம் (Hinduism in Tamil Nadu) என்பது பொ.ஊ.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாறைக் கொண்டது. மொத்த தமிழ் இந்துக்களின் தொகையானது 2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 6,31,88,168[2] ஆகும். தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 87.58% ஆகும். தமிழ்நாட்டின் மிகப் பெரிய சமயமாக இந்து சமயம் உள்ளது.
தமிழ்நாட்டின் சமய வரலாற்றில் குறிப்பாக இடைக்காலத்தில் இந்து சமயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவில் ஏற்பட்ட பக்தி இயக்கக் காலத்தில் பன்னிரு ஆழ்வார்கள் (வைணவ அடியார்) மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார் (சைவ அடியார்) ஆகியோர் இந்து சமயத்தைத் தென் இந்தியாவில் நிலைபெறச் செய்தவர்களாவர். ஒன்பதாம் நூற்றாண்டுவரை வாழ்ந்த இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் நிலத்தில் இருந்து தோன்றியவர்களே.
இந்து வழிபாட்டு முறைகளில் தமிழ்நாட்டில் தனித்துவமான சில வழிபாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளன. தமிழ்நாட்டில் கோயில்களை அடிப்படையாகக் கொண்ட துறவிகள் வாழும் பல மடாலயங்கள் உள்ளன. தற்காலத்தில் பெரும்பாலான இந்து கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் பராமரிக்கப்படுகின்றன.
சங்க காலத்தில் புகழோடு இருந்த சோழர் அதன் பிறகு சில நூற்றாண்டுகள் இருக்கும் இடம் தெரியாதவர்களாக ஆயினர். பாண்டியர் மற்றும் பல்லவருக்கு இடையில் போட்டிகள் தோன்றிய காலமானது, சோழர்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு சோழர் பெரும் ஆற்றலாக உருவாயினர். அவர்களின் சரிவுக்குப் பிறகு பாண்டியர் மறுமலர்ச்சி அடைந்தனர். இந்தக் காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் ஊக்குவிக்கப்பட்ட இந்து சமயத்தால் கோவில் கட்டிடக்கலை மற்றும் சமய இலக்கியங்கள் சிறந்தோங்கின.[3]
சேரர் மரபினர் சங்க காலத்தில் (பொ.ஊ.மு. 300 - பொ.ஊ. 200) தமிழகத்தின் தற்போதைய கோயம்புத்தூர், கரூர், சேலம் மாவட்டப் பகுதிகளையும் தற்காலக் கேரளத்தின் பகுதிகளையும் வஞ்சி முத்தூரை (தற்கால கரூர்) தலைநகராக்க் கொண்டு ஆட்சி செய்தனர்.
சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தின் மீது படை எடுத்து வந்த களப்பிரர் மூவேந்தரையும் வென்று பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டுவரை ஆண்டனர். இக்காலம் தமிழர் வரலாற்று மற்றும் தமிழ்நாட்டு இந்து சமயம் ஆகியவற்றில் இருண்ட காலமாக குறிப்பிடப்படுகிறது. அவர்கள் ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்களாலும், பாண்டியர்களாலும் வெல்லப்பட்டனர். களப்பிரரின் ஆட்சியின் போது, தமிழகத்தில் சைன சமயம் செழித்தும், இந்து சமயம் ஒடுங்கியும் இருந்தது. களப்பிரர் சைன சமயத்துக்கும், ஒருவேளை பௌத்தர்களுக்கும் பாதுகாப்பை அளித்தால் அவர்கள் இந்து எதிர்ப்பாளர்கள் என்று சிலர் முடிவு செய்திருக்கிறார்கள், ஆனால் இந்தக் கூற்று மறுபரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது.
நான்காம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ்நாட்டில் பல்லவ மன்னர்களான மகேந்திரவர்மன் மற்றும் அவரது மகன் மமல்லன் நரசிம்மர்வர்மன் காலத்தில் எழுச்சி கண்டனர்.[4] பல்லவர்கள் தென்னிந்தியாவின் பெரும்பகுதியை காஞ்சிபுரத்தை தங்கள் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர். மகேந்திர வர்மன் முதலில் பெளத்தராக இருந்தார், ஆனால் சைவ சமயப் புனிதர்களின் செல்வாக்கால் அவர் இந்து சமயத்துக்கு மாற்றப்பட்டார். அவராலும் அவருக்குப் பின் ஆண்ட பல்லவ மன்னர்களாலும் கட்டப்பட்ட இந்து கோயில்களால் திராவிடக் கட்டிடக்கலை பெருமளவு வளர்ச்சியடைந்தது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக உள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது.
பல்லவர்கள் 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்டனர். சோழர்களை 13 வது நூற்றாண்டில் பாண்டியர்கள் வெற்றிகொண்டு மதுரையில் இருந்து ஆண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் போன்ற கோயில்கள் பாண்டியர்களின் கோவில் கட்டிடக்கலைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.[5]
ஓன்பதாம் நூற்றாண்டில், ஆதித்த சோழன், அவரது மகன் பராந்தகச் சோழன், இரண்டாம் பராந்தக சோழன் போன்றோர் காலத்தில், சோழப் பேரரசானது தற்போதைய ஆந்திரப் பிரதேசம், கடலோரக் கர்நாடகம்வரை விரிவுபடுத்தப்பட்டது. மேலும் ராஜராஜ சோழன் அவருடைய மகன் இராசேந்திர சோழன் போன்றோர் காலத்தில் சோழர்கள் தெற்காசியாவில் குறிப்பிடத்தக்க அதிகாரமிக்க ஆட்சியாளர்களாக உயர்ந்தனர்.
சோழர்கள் அற்புதமான கோயில்களை கட்டியெழுப்புவதில் சிறந்து விளங்கினர். தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் சோழர் கால அற்புதமான கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெருவுடையார் கோயிலானது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமான "அழியாத சோழர் பெருங்கோயில்கள்" என்ற பிரிவில் உள்ளது.[6] பிற எடுத்துக் காட்டுகளாக திருவண்ணாமலை நகரத்திலுள்ள அண்ணாமலையார் கோயிலும், சிதம்பரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள நடராசர் கோயிலும் உள்ளன. 1230 முதல் 1280 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, மாறவர்மன் சுந்தர பாண்டியன் மற்றும் அவரது தம்பி, சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோரின் காலத்தில் பாண்டியர்கள் எழுச்சிப் பெற்றனர். இந்த மறுமலர்ச்சியானது குறுகிய காலமே நீடித்தது, பாண்டியரின் தலைநகரான மதுரை 1316 ஆம் ஆண்டு அலாவுதீன் கில்சியின் தளபதியான மாலிக் காபூரின் தலைமையிலான படைகளால் முற்றுகையிடப்பட்டு ஏற்பட்ட குழப்பங்களால் தங்கள் செல்வாக்கை இழந்தனர்.[7]
இந்த முஸ்லீம் படையெடுப்புகளானது தக்காணத்தில் இந்து விஜயநகரப் பேரரசை உருவாக்கத் தூண்டியது. இது இறுதியில் முழு தமிழ் நாட்டையும் (பொ.ஊ. 1370 இல்) கைப்பற்றியது. அதன் பிறகு 1565 ஆம் ஆண்டில் நடந்த தாலிகோட்டா போரில் விஜயநகரம் தோல்வியடையும்வரை இந்தப் பேரரசு கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. இந்தத் தோல்வியின் விளைவாக, பல திறமையற்ற அரசர்கள் விஜயநகர சிம்மாசனத்தில் அமர்ந்தனர். இதன் விளைவாக விஜயநகர பேரரசின் கீழ் ஆட்சியாளர்களாக இருந்த மதுரை மற்றும் தஞ்சாவூர் நயக்கர்கள் முதன்முதலில் தங்கள் சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொண்டனர்.[8] விஜயநகரப் பேரரசு 16 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து சரியத் துவங்கிவிட்டதால், விஜயநகரப் பேரரசின் பல்வேறு பகுதிகளை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட நயக்க ஆளுநர்கள் தங்கள் சுதந்திரத்தை அறிவித்தனர். இவர்களில் 17 ஆம் நூற்றாண்டில் முதன்மையானவர்களாக இருந்த தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் போன்றோர் ஆவர். அவர்கள் நாட்டில் இருந்த மீனாட்சி அம்மன் கோவில் போன்ற பழமையான கோயில்களில் சிலவற்றை புனரமைத்தனர்.
18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஐதராபாத் நிசாம் மற்றும் ஆற்காடு நவாபின் ஆளுமையின் கீழ் தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதிகள் வந்தன. 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆற்காடு நவாப் பதவிக்கு ஆங்கிலேயரால் வாலாஜா ஆதரிக்கப்பட்ட சமயத்தில், சந்தா சாகிப் பிரான்சால் ஆதரிக்கப்பட்டார். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இரண்டாம் ஆங்கில-மைசூர் போரில் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகள் ஹைதர் அலி அவரைத் தொடர்ந்து அவர் மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சியின் கீழ் வந்தன. பாளையக்காரர் போர்களில் வென்ற பிறகு, கிழக்கு இந்தியக் கம்பெனியானது ஐதராபாத் நிசாமின் ஆட்சிக்கு உட்பட்ட தென் இந்தியாவின் பெரும்பகுதியை சென்னை மாகாணத்துடன் இணைத்ததுக் கொண்டது. புதுக்கோட்டை ஒரு சுதேச அரசாகவே இருந்தது. இந்து கோவில்கள் இந்த காலகட்டத்தில் அப்படியே இருந்தன, மேலும் குறிப்பிடத்தக்க அழிவுகளுக்கு ஆளாகவில்லை.
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சென்னை மாகாணமானது, இன்றைய தமிழ்நாடு, கரையோர ஆந்திரப் பிரதேசம், கர்நாடகத்தின் தென் கன்னட மாவட்டம் கேரளத்தின் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. அதற்குப் பிறகு மாநிலங்களானது மொழிவாரியாக பிரிக்கப்பட்டன. 1969 இல் சென்னை மாநிலம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.
2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி மொத்த தமிழ் இந்துக்களின் தொகை 63,188,168[9] இது தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 87.58% ஆகும்.
அளவுரு | மக்கள் தொகை |
---|---|
மொத்த மக்கள் தொகை | 54985079 |
கல்வியறிவு உள்ளவர்கள் | 35011056 |
தொழிலாளர் | 25241725 |
விவசாயிகள் | 4895487 |
விவசாயத் தொழிலாளர்கள் | 8243512 |
தொழிற்சாலைத் தொழிலாளர்கள் | 1330857 |
பிற தொழிலாளர்கள் | 10771869 |
வேலை இல்லாதவர்கள் | 29743354 |
தென் இந்தியாவில் பக்தி இயக்கத்தைக் கொண்டுவந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள் (வைணவ அடியார்) மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார் (சைவ அடியார்) ஆகியோர் ஆவர்.[11] ஒன்பதாம் நூற்றாண்டுவரை வாழ்ந்த இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் நிலத்தில் இருந்து தோன்றியவர்களே. இவர்களில் குறிப்பிடத்தக்க சைவ அடியார்களான ஏழாம் நூற்றாண்டில் தேவாரத்தை இயற்றிய தமிழ் அடியார்களான அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஒன்பதாம் நூற்றாண்டில் திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். சைவ நாயன்மார்களால் 276 கோவில்கள் பாடல் பெற்றன அக்கோயில்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டின் காவிரி ஆற்றின் இரு கரையோரங்களில் இருப்பவை ஆகும். இது அல்லாது தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பட்ட 276 சிவன் கோயில்கள் வைப்புத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.[12] குழந்தைப் புலவரான திருஞான சம்பந்தர் புத்த சமயம் மற்றும் சைன சமயத்தில் இருந்து மக்களை சைவ சமயத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டார்.அப்பரடிகள் சிதைந்த சிவன் கோயில்களில் துப்புரவு மற்றும் மறுசீரமைப்பு வேலையான உழவாரப்பணியில் ஈடுபட்டார். ஏழு- ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த 12 வைணவ அடியார்களான ஆழ்வார்கள் திவ்யப் பிரபாந்தத்தை இயற்றினர், இது 4000 வசனங்களில் விஷ்ணுவை புகழ்ந்து பாடிய ஒரு இலக்கியமாகும்.
தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் சைன சமய பழக்கவழக்கங்களை நிராகரித்து இந்து சமயமானது கோயில்கள், மடங்கள் வாயிலாக வளர்ந்தது.[13]
பிராமணிய இந்து சமயத்தின் ஸ்மார்த்த அல்லது ஆரிய சடங்கு வடிவமானது, 5-6 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது விரைவில் தமிழ் நாட்டில் இந்து சமயத்தின் நிலையான வடிவமாக மாறியது. தமிழ்நாட்டின் பல்வேறு அரச மரபுகளின் உதவியுடன் இது பரப்பப்பட்டது. இதன் விளைவாக சைவ மற்றும் வைணவ இயக்கங்கள் தோன்றின. காஞ்சி மடமானது மாநிலத்தின் முதன்மையான ஸ்மார்த்த நிறுவனமாக உள்ளது. காஞ்சி மடத்தின் அதிகாரபூர்வ வரலாறானது இது ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது என்றும், அதன் வரலாறு கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரை பழமையானது என்றும் கூறிக்கொள்கிறது.[14] மடத்தின் வேறுசில பரப்புரைகளிலும் ஆதி சங்கரர் காஞ்சிக்கு வந்திருந்து சர்வக்ஞா பீடம் என்று மடம் நிறுவியதாகவும் இங்கு மரணமடைந்ததாகவும் அறியப்படுகிறது. பிற மூலங்கள் சங்கரரின் இறப்பு இமாலயத்தில் கேதார்நாத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.[15][16]
மதுரை ஆதினமே தென்னிந்தியாவின் பழமையான சைவ மடம் ஆகும். இதை கி.பி. 600 சம்பந்தர் நிறுவியதாகக் கூறப்படுகிறது. இது உலகின் மிகப் பிரபலமான சிவ-சக்தி ஆலயங்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் இரு தொகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது. இது சைவ சித்தந்த தத்துவத்தின் தீவிர மையமாக உள்ளது. தற்போது இந்த மடமானது அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியரின் தலைமையில் இயங்கி வருகிறது.[17] இந்த மடத்தின் கட்டுப்பாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நான்கு கோயில்கள் உள்ளன.
திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில், திருவாவடுதுறை நகரிலுள்ள ஒரு மடம் ஆகும்.[18] 1987 ம் ஆண்டில், ஆதினத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 15 சிவன் கோயில்கள் இருந்தன.[19]
தருமை ஆதீனம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நகரத்தில் அமைந்துள்ள ஒரு மடம் ஆகும். 1987 ஆம் ஆண்டளவில், மொத்தம் 27 சிவன் கோவில்கள் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.
பிராமண இந்து சமுதாயத்தின் வைணவப் பிரிவின் முதல் மடாலயம் பரகலா மடம் ஆகும். இந்த மடம் கி.பி. 1268 இல் வேதாந்த தேசிகரின் சீடரான பிரம்மந்திரா ஸ்வந்தந்திர ஜீயரால் நிறுவப்பட்டது. இந்த மாடத்தின் தலைவர் மைசூர் மன்னர் குடும்பத்தின் பரம்பரை ஆச்சார்யர் ஆவார். இங்கு வணங்கப்படும் ஹயக்ரீவர் சிலையானது வேதாந்த தேசிகர் காலத்தில் இருந்து வழிபடப்பட்டுவரும் சிலையாகும்.[20]
அகோபிலம் மடம் 600 ஆண்டுகளுக்கு முன்னர் அகோபிலத்தில் ஆதிவண் சடகோப மகாதேசிக சுவாமி (முதலில் ஸ்ரீனிவாசாச்சார்யா என்று அழைக்கப்பட்டவர்) என்பவரால் நிறுவப்பட்ட ஒரு வடகலை வைணவ சமய அமைப்பு ஆகும் [21][22][23] ஆதிவண் சடகோப மகாதேசிகர் ஒரு வடகலை வைணவர்,[24] இவர் வேதாந்த தேசிகரின் முதன்மை மாணவர்[25][26] மற்றும் பிரகத மடத்தின் ஜீயரான பிரம்மதந்திர ஸ்வாதாந்திர ஜியாரின் மாணவர்,[27] இந்த மடமானது இவரால் பஞ்சரத்ர பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டது.[28][29][30][31] அன்று முதல் பின்னர் "அழகிய சிங்கர்" என்று அழைக்கப்பட்ட நாற்பத்தி-ஆறுபேர் மடத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர்.
இந்து சமயமானது பலவித சிந்தனைகளைக் கொண்டதாக ஒரு கடவுட் கொள்கை, பல கடவுட் கொள்கை, அனைத்து இறைக் கொள்கை, பொருண்மை வாதம், இறைமறுப்பு, அறியவியலாமைக் கொள்கை, ஞானக் கொள்கை மற்றும் பல;[32][33][34][35] கருத்துகளோடு சிக்கலானதாக ஒவ்வொரு நபருக்கும் பொருந்துகிற, பாரம்பரிய தத்துவங்களோடு பின்பற்றப்படுவதாக உள்ளது. இது சில சமயங்களில் ஹொன்தோஸ்டிசிக்காக குறிப்பிடப்படுகிறது (அதாவது, மற்றவற்றின் இருப்பை ஏற்கும் அதே சமயத்தில் ஒரு கடவுள் மீது பக்தி செலுத்துவதுடன் சம்பந்தப்பட்டது), ஆனால் இந்தச் சொல் மிகைப்பொதுவமாக்கலாக இருக்கலாம்.[36]
சிவன் கோயில்களில் முதன்மை வழிபாட்டு வடிவங்களாக சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் ஆகியோர் உள்ளனர். விஷ்ணு கோயில்களில் விஷ்ணுவை நேரடியாகவோ அல்லது அவரது பத்து அவதார வடிவங்களிலோ வணங்கப்படுகிறார், இந்த அவதாரங்களில் மிகவும் பிரபலமானவை ராமன் மற்றும் கிருஷ்ண அவதாரங்கள்.[37]
லிங்கம் (சமசுகிருதம் लिङ्गं liṅgaṃ, பொருள் "குறி" அல்லது "அடையாளம்") என்பது இந்து கோவிலில் வழிபாட்டுக்காக பயன்படுத்தப்படும் ஒரு சிவ வடிவமாகும்.[38] தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய சிவன் கோயில்களில் இந்த லிங்கம் முதன்மை தெய்வ வடிவமாகும். தென்னிந்தியாவில் பெரிய அளவில் லிங்க வழிபாடு பரவியது சோழர் காலங்களில் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு) இருந்து என்று நம்பப்படுகிறது. லிங்க வடிவத்தில் சிவபெருமானை வணங்குவது குறித்த விவரங்களில் பழமையானதாக ரிக் வேதத்தில், உள்ள செய்திகள் கருதப்படுகிறது .[39] பல்லவர் காலத்தில் சோமஸ்கந்தர் வடிவத்தை வணங்குவது பிரதானமாக இருந்தது, சைவ சமயத்தை தீவிரமாக கடைபிடித்த சோழர்கள், எல்லா கோயில்களிலும் லிங்கங்களை நிறுவினர்.[40]
பிள்ளையார், கணேசர் (சமசுகிருதம்: गणेश; IAST: Gaṇeśa; ), கணபதி (சமசுகிருதம்: गणपति, IAST: gaṇapati), விநாயகர் (சமசுகிருதம்: विनायक; IAST: Vināyaka) என்பவர் இந்து தெய்வங்களில் மிகவும் பிரபலமான தெய்வம் இந்து கோயில்களில் மிகவும் பரவலாக வணங்கப்படுகிறார்.[41] சிவபெருமானின் முதல் மகனான கணேசர் விளங்குகிறார். எல்லா சிவன் கோயில்களிலும் அவருக்கே முதல் வழிபாடு அளிக்கப்படுகிறது. தமிழில் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். சிவனின் மகன் என்பதால் பிள்ளையார் பெயர் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது சமசுகிருதத்தில் யானையைக் குறிப்பிடும் சொல்லான புலிசாரா என்ற சொல்லின் திரிபு என்ற கருத்தும் உள்ளது.[42] சாளுக்கியர்களிடம் இருந்து பல்வ்வரகள் கணேசர் வழிபாட்டைப் பெற்றதாக கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி (1963: 57-58) கருதுகிறார். [43] ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியரைப் போரில் தோற்கடித்த பல்லவ தளபதியான பரஞ்சோதியால் வாதாபி கணபதி சிலையானது பாதாமியில் (வாதாபி - சாளுக்கியர் தலைநகரம்) இருந்து பல்லவர்களால் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது.[44] நவீன காலத்தில், தமிழ்நாட்டில் விநாயக்கருக்கு பல தனிக் கோவில்கள் உள்ளன.
முருகன் சமசுகிருதம்:सुब्रह्मण्य, சமக்கிருதம்: कार्तिकेय) மேலும் கார்த்திகேயன், கந்தன், சுப்பிரமணியன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் தென்னிந்தியாவில் பிரபலமான கடவுள். குறிப்பாக தமிழ் மக்களால் தமிழ்க் கடவுள் என அழைக்கப்படுபவர். இவர் தமிழ் நாட்டின் காவல் தெய்வம்.[45] பண்டையத் தமிழ் நூலான தொல்காப்பியமானது (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) தமிழர்களில் பெரும்பான்மையினர் விரும்பப்படும் கடவுளாக மயில்மீது அமர்ந்தவனும் செந்நிறத்தவனும், என்றும் இளமையும், அழகுமுடையவனான முருகன் என்கிறது. சங்ககால நிலம், பருவ காலம் ஆகியவை ஐந்து தினைகளாக அதாவது வகைகளாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்தினைகளில் ஒவ்வொரு தினைகளுக்குமான கடவுள்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, அதில் மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான குறிஞ்சிக்கு முருகன் கடவுள் என்கிறது. மூன்றாம் சங்க கால இலக்கிய நூலான பத்துப்பாட்டில் இடம்பெற்றதும், புகழ்வாய்ந்த சங்கப் புலவரான நக்கீரரால் முருகனைப் பற்றிப் பாடப்பட்டதுமான திருமுருகாற்றுப்படை ஆழமான பக்தி கவிதை ஆகும்.[46] 6 ஆம் நூற்றாண்டின் போது முருக வழிபாட்டு மறைந்து காணப்பட்டது. பின்னர் 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர் காலத்தின்போது மீண்டும் வளர்ச்சியடைந்தது. பல்லவர் காலத்தின் நிறுவப்பட்ட சோமஸ்கந்தர் சிற்பங்கள் அதற்கு சான்றுகளாக நிற்கின்றன.[47]
லிங்கோத்பவர் வடிவமானது சிவனின் வடிவமாக பல்வேறு புராணங்களில் காணப்படுகிறது. இந்த வழிபாட்டு வடிவமானது பழங்குடிகளின் காலத்தில் உருவமற்ற தூணை வழிபாடும் பழைய வழிபாட்டு முறையில் இருந்து வந்திருக்க வாய்ப்புள்ளது.[48] தூணில் வணங்கப்பட்ட தெய்வத்திலிருந்து இந்த யோசனை உருவானது, பின்னர் இது சிவன் லிங்கத்திலிருந்து தோன்றியதாகக் கருதப்பட்டது. சிவன் கோயில்களில் கருவறைக்கு பின்புறம் சுவரில் உள்ள கோட்டத்தில் இந்த லிங்கோத்பவர் உருவம் காணப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பர், சம்பந்தர் போன்றோர் தேவாரத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோரால் அடி முடி காண முடியாத ஒளிவடிவான மேனி என சிவனின் இந்த வடிவத்தைக் குறிக்கிறனர்.[49]
நடராசர் அல்லது கூத்தன், கூத்தரசன் என்பது இந்து கடவுளான சிவபெருமானின் ஒரு வடிவம் ஆகும். இவரது தெய்வீக நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. தமிழக் கருத்தின்படி, நடராசர் வடிவமானது முதன்முதலில் சோழர் கலை வடிவத்தில் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்பு தில்லை என்று அழைக்கப்பட்ட சிதம்பரத்தில் நடராசரின் அனைத்து சித்தரிப்புக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.[50][51][52] தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களில் இந்த நடராசர் வடிவம் காணப்படுகிறது, என்றாலும் இந்த வடிவத்துக்கு சிதம்பரம் கோயிலே புகழ்பெற்றது ஆகும்.[53]
தட்சிணாமூர்த்தி அல்லது தென்முகக் கடவுள், தென்னன், IAST:Dakṣiṇāmūrti)[54] என்று அழைக்கப்படும் சிவ வடிவமானது அனைத்து துறைகளிலும் குருவான சிவனின் ஒரு அம்சம் ஆகும். சிவனின் இந்த அம்சமானது முடிவான விழிப்புணர்வு, புரிதல், அறிவு போன்றவற்றின் உருவகமாக உள்ளது.[55] மேலும் இந்த வடிவத்தில் யோகக் கலை, இசை, ஞானம் ஆகியவற்றின் ஆசிரியராக சிவன் சித்தரிக்கப்படுகிறார், மேலும் அவருடைய சீடர்களுக்கு சாஸ்திரங்கள் (வேத நூல்கள்) போன்றவற்றை விளக்குகிறார்.[56]
சோமாசுகந்தர் என்ற பெயர் சக (சிவன்) உமா (பார்வதி) ஸ்கந்தர் (குழந்தை முருகன்) என்ற சொற்களில் இருந்து தோன்றியது.[57] இந்த சிவ வடிவில் சிவன் பார்வதி ஆகியோருக்கு இடையில் குழந்தை முருகன் ஆகியோர் அமர்ந்த நிலையில் உள்ள தோற்றமாகும். [58] இதன் பெயர் சமஸ்கிருத பெயராக இருந்தாலும், இந்த வடிவம் தமிழரின் வடிவமாகும். சோமாஸ்கந்தர் வடிவம் வட இந்தியக் கோயில்களில் காணப்படுவதில்லை.[59] திருவாரூர் தியாகராசர் கோவிலில், தியாகராசர் என்ற பெயரில் சோமஸ்கந்தர் முதன்மை தெய்வமாக உள்ளார். பெரும்பாலான சிவன் கோயில்களில் உள்ள உற்சவர் சிலைகள் சோமாஸ்கந்தாராக உள்ளன.[60] பிற்கால சோழர் கலைவடிவத்தில் உருவான நடராசர் வடிவத்தைப் போலல்லாமல், சோமாஸ்மாஸ்கந்தர் வடிவமானது அதற்கும் முன்பு பல்லவ காலத்திலேயே முக்கியம் பெற்று இருந்தது.[61] கி.பி ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்திலிருந்து சோமஸ்கந்தர் வடிவம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளது அக்காலத்தில் பல்லவர் கட்டிய கோயில்களின் கருவறைச் சுவரில் சோமாஸ்கந்தரின் உருவம் செதுக்கப்பட்டன.[62] பல்வர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்களில் சோமாஸ்கந்தரே பிரதான வழிபாட்டு வடிவமாக இருந்தார், பிற்காலத்தில் அந்த இடத்தில் லிங்கங்கள் வைக்கப்பட்டன, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான மாமல்லப்புரத்தில் உள்ள கோயில்கள் உட்பட இவ்வாறு மாற்றப்பட்டன.[63] சங்க இலக்கியங்களில் சோமாஸ்கந்தரைப் பற்றிய குறிப்புகள் இல்லை அதன்பிறகான காலகட்டத்தில் ஏழாம் நூற்றாண்டில் தேவரத்தில் இவ்வடிவம் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.
பைரவர் என்பது சிவனின் முதன்மையான எட்டு வடிவங்களில் ஒன்றாகும். இந்தப் பெயர் "கொடூரமான" அல்லது "அஞ்சத்தக்க" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பைரவர் தமிழில் வைராவர் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் எட்டு திசைகளிலும் பக்தர்களைக் காக்கும் நாட்டுப்புற தெய்வமாகவும் உள்ளார். சோழர் காலத்தில் பைரவர் பிட்சாடனர் என அழைக்கப்பட்டார், பெரும்பாலான சோழர் காலக் கோவில்களில் இந்த வடிவம் காணப்படுகிறது.[64]
விஷ்ணுவும் அவரது மனைவியான லட்சுமியும் தமிழ்நாட்டில் உள்ள விஷ்ணு கோயில்களில் பல்வேறு வடிவங்களில் அல்லது அவதாரங்களில் காணப்படுகிறார். மிகவும் பொதுவான வடிவங்களாக இராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகும்.
ஐயனார் என்னும் தெய்வம் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் உள்ள தமிழ் கிராமங்களிலும் ஒரு காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார். ஐயனார்-சாஸ்தா பற்றிய பழைய குறிப்பானது, தமிழ்நாட்டின் ஆற்காடு மாவட்டத்தில் கிடைத்த மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டுக்கும் மேற்பட்ட நடுகற்களில் இருந்து கிடைத்துள்ளது. இந்த நடுகல்லில் உள்ள எழுத்துக்கள் "ஐயனப்பன்; காத்தனுக்கு ஒரு கோயில்." என்று படிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சிராப்பள்ளி அருகே உள்ள உறையூரில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டு உள்ளது.[65] அய்யனார்-காத்தன் பற்றிய இலக்கிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன.[66] சோழர் காலத்திலிருந்து (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு ) அய்யனா-சாஸ்தாவின் பெயர் இன்னும் புகழ்பெற்று பரவலாக காணப்படுகிறது.[67] மதுரை வீரன் என்ற தெய்வம் தென் தமிழ் நாட்டில் பிரபலமான நாட்டுப்புற தெய்வம். இவர் மதுரையில் காவல் பணியில் இருந்ததால் அதிலிருந்து இப்பெயர் உருவானது.[68] காளி (தமிழ்: காளி) என்பவர் இந்து பெண் கடவுளாவார். இவர் சிவனின் மனைவியான சக்தியின் ஒரு வடிவம். மேலும் இவர் துர்க்கை, பத்ரகாளி, தாட்சாயிணி, ருத்ராணி, பார்வதி, சாமுண்டி போன்ற பல இந்து தெய்வங்களுடன் தொடர்புடையவர். இவர் தச மகா வித்யா என்னும் ஆதிசக்கியின் பத்து கடுமையான தாந்த்ரிக் கடவுளர்களில் முதன்மையானவர்.[69]
முனீசுவரர் என்பவர் ஒரு நாட்டுப்புற தெய்வமாவார். 'முனி' என்பதன் பொருள் 'துறவி' 'ஈஸ்வரன்' என்றால் 'சிவன்' என்ற சொல்லைக் குறிக்கிறது. இந்த பெயர் ஒற்றுமையைக் கொண்டு இவர் சிவனின் வடிவமாகக் கருதப்படுகிறார், ஆனால் இத்தகைய கூற்றுக்களை சரிபார்க்க எந்த எழுத்துச் சான்றும் இல்லை. பெரும்பாலான சைவக் குடும்பங்களில் குல தெய்வமாக இவர் வணங்கப்படுகிறார்.
கருப்பசாமி (வேறு சில பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்) என்பவர்தமிழ் வட்டார ஆண் தெய்வங்களில் ஒருவர். இவர் தமிழ்நாட்டிலும் கேரளத்தின் ஒரு சிறு பகுதியிலும் நாட்டுப்புற சமூகப் பிரிவினரால் வணங்கப்படுகிறார். இவர் அய்யனாரைச் சேர்ந்த 21 துணைத் தெய்வங்களில் ஒருவர், எனவே தமிழர்களால் காவல் தெய்வமாக கருதப்படுகிறார்.
சுடலை மாடன் அல்லது மாடன் என அழைக்கப்படுபவர் தமிழ் நாட்டின் பிரபலமான நாட்டுப்புற ஆண் தெய்வமாவார். இவர் சிவன் மற்றும் பார்வதி ஆகியோரின் மகனாக கருதப்படுகிறார். தமிழ்நாட்டு கிராமங்களில் அல்லது சமூகங்களின் மூதாதையரில் அய்யனாரைப் போலவே தோன்றிய காவல் தெய்வமாகத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய சுமார் 2000 ஆண்டுகளாக படிநிலையாக வகைபடுத்தப்பட்ட சாதியமைப்பு உள்ளது. இதற்கு விவசாயம், மக்கள்தொகை, மையப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒத்திசைவுகள் போன்றவை அடிப்படையாக உள்ளன. இந்த சாதிகள், குறிப்பாக கிராமப்புறங்களில் சமூக குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. "பசுமைப் புரட்சி" போன்ற நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக கிராமப்புற தமிழ்நாட்டின் வர்க்க அமைப்பு வடிவமானது வியத்தகு முறையில் மாறிவிட்டது.[70] 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 11,857,504 பேர் பட்டியல் வகுப்பார் உள்ளனர் இது தமிழக மக்கள் தொகையில் 19 விழுக்காடு ஆகும், அதேசமயம் இந்தியாவில் பட்டியல் வகுப்பார் 7.1 விழுக்காடு உள்ளனர்.[71] புத்த சமயத்தில் 840 பேரும், சீக்கியத்தில் 837 பேரும் உள்ளவர் போக, மீதமுள்ள 11855827 பேர் இந்து சமயத்தவராக உள்ளனர்.[71] இவர்களின் எழுத்தறிவு விகிதம் ( எழுத, படித்து புரிந்து கொள்ளக்கூடியவர்கள்) 63.2 விழுக்காடு, ஆனால் மாநில சராசரி எழுத்தறிவு 73.5 என்று உள்ளது.[71]
சுயமரியாதை இயக்கம் என்பது பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சம உரிமைகளை அடைவதை நோக்கமாக கொண்ட ஒரு இயக்கமாகும்,[72] மேலும் சாதி அடிப்படையிலான சமுதாயச் சூழலில் பின்தங்கிய மக்களை சுயமரியாதையோடு இருக்க ஊக்குவிப்பதோடு,சாதி அடிப்பையிலான சமுதாய அதிகார அடுக்குமுறையில் அடி நிலையில் இருப்பதை மாற்றுவதை நோக்கமாக கொண்டது.[73] இது 1925 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் பெரியார் ஈ. வே ராமசாமியால் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் தங்கள் தோற்றத்துக்கு சுயமரியாதை இயக்கத்துக்கு கடமைபட்டுள்ளன.[74] அதிமுகவானது திமுகவில் இருந்து 1972 இல் உடைந்து உருவானது. பொதுவாக இரு கட்சிகளின் சமூக ஜனநாயக நோக்குகள் ஜனரஞ்சகமானவை.[75]
தமிழ்நாட்டில் 1960கள் முதல் 1980கள் பிற்பகுதி வரை சாதியடிப்படையிலான கட்சிகள் வெற்றிபெறவில்லை. இக்காலகட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவையே ஆதிக்கம் செலுத்தின. 80களின் பின்பு பாட்டாளி மக்கள் கட்சி வன்னியரை முன்னிலைப்படுத்தியும், புதிய தமிழகம் தேவேந்திரரை முன்னிலைப்படுத்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பறையரை முன்னிலைப் படுத்தியும் தோன்றின இவை 1999 நாடாளுமன்றத் தேர்தலில் 12 விழுக்காடு வாக்குகளைப் பெற்றன.[76] 1931 க்குப் பிறகு, சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, இதனால் சாதிவாரியான மக்கள்தொகைத் தகவல்கள் கிடைக்கவில்லை.[77]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)