தம்தமா ஏரி | |
---|---|
தம்தமா ஏரியில் உள்ள அரியானா சுற்றுலாத்துறையின் விடுதி | |
அமைவிடம் | சோனா, குர்கான் மாவட்டம், அரியானா, இந்தியா |
ஆள்கூறுகள் | 28°18′14″N 77°07′44″E / 28.304°N 77.129°E |
வகை | நீர்த்தேக்கம் |
பூர்வீக பெயர் | दमदमा झील Error {{native name checker}}: parameter value is malformed (help) |
வடிநில நாடுகள் | இந்தியா |
கட்டியது | 1947 |
தம்தமா ஏரி (Damdama Lake) இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள குர்கான் மாவட்டத்தில் குருகிராமுக்கு அருகில் சோனாவில் அமைந்துள்ள ஓர் ஏரி.[1] இது அரியானாவில் உள்ள சிறிய ஏரிகளில் ஒன்றாகும். 3,000 ஏக்கர் (12.14 கிமீ 2) பரப்பளவில், 1947 ஆம் ஆண்டில் மழைநீர் சேகரிப்புக்காக பிரித்தானியர்கள் கல்லாலும் மண்ணாலும் கட்டிய அணையினால் தம்தமா ஏரி உருவாக்கப்பட்டது.[2] கட்டுக்கரையைக் கொண்டுள்ள இந்த ஏரிக்கான முதன்மை நீர்வரத்து ஆரவல்லி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள தாழியில் விழும் பருவகால மழையேயாகும். ஏரியின் நீர்மட்டம் 20 அடி (6. 1 மீ)யாகக் குறையும் போதும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து உள்ளது. பருவமழையின் போது நீர்மட்டம் 50 அடி (15 மீ) முதல் 70 அடி (21 மீ) வரை உயர்கின்றது. கோடைக்காலங்களில் இந்த ஏரி வறண்டுவிடுகின்றது.[3]
தம்தமா ஏரி மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்துள்ளது, இதன் இட அமைப்பியல் சீரானதாக இல்லை. அமீபாவைப் போன்ற வடிவில் பல கிளைகளுடன் பரவியவாறு இது அமைந்துள்ளது.
இந்த ஏரியின் காலநிலை மிதமானது, எனவே ஆண்டின் எல்லாக் காலங்களிலும் சுற்றுலா செல்ல ஏற்றதாக உள்ளது. இருப்பினும் அக்டோபர் முதல் மார்ச் வரையான பருவமழைக் காலம் சுற்றுலா செல்ல சிறப்பான காலமாகும். கோடைக்காலங்களில் இந்தப் பகுதியின் வெப்பநிலை 45 முதல் 47 °C வரை இருக்கின்றது.
தம்தமா ஏரி, சரிஸ்கா தேசியப் பூங்காவில் இருந்து தில்லி வரை நீண்டிருக்கும் வட ஆரவல்லி சிறுத்தைப்புலி காட்டுயிர் தாழ்வாரத்தில் ஆரவல்லி மலைத்தொடருக்குள் அமைந்துள்ள ஒரு முதன்மையான உயிரியற் பல்வகைமைப் பகுதியாகும். பறவைகளின் இயற்கையான இல்லமாகத் திகழும் இந்த ஏரியில் உள்ளூர் மற்றும் வலசை போகும் பறவைகள் என நூற்றுத்தொன்னூறுக்கும் மேலான பறவையினங்கள் உள்ளன. நீர்ப் பறவை, நீர்க்காகம், ஆலா, கொக்கு, மீன் கொத்தி போன்றவை இங்கு காணப்படும் பறவைகளில் சிலவாகும்.
ஆரவல்லி மலைத்தொடரால் சூழப்பட்டுள்ள இந்த ஏரி, நகர்ப்புறத்தை விடுத்து அமைதியான இடம் நாடுபவர்களுக்கும் சாகச விளையாட்டு விரும்பிகளுக்கும் ஏற்ற சுற்றுலா தளமாகும். இங்கு இழுவைப் படகு, துடுப்புப் படகு, இயந்திரப் படகு மூலம் படகோட்டம் மேற்கொள்ள முடியும். மேலும் பாய்மரப் படகோட்டம், மென்படகோட்டம், மிதிவண்டியோட்டம், மீன்வேட்டை, பாறையேற்றம், பள்ளத்தாக்கைக் கடப்பது போன்ற சாகச விளையாட்டுகளுக்கும் இது பெயர்பெற்றது.
தோல் நோய்களுக்கான மருத்துவப் பண்புள்ளதாகக் கருதப்படும் சோனாவில் உள்ள கந்தக வெந்நீரூற்று, சுற்றுலா ஈர்ப்புத்தளமாகவும், பரத்பூர் மன்னர் கட்டிய சிவன் கோவில் ஒரு சமய ஈர்ப்பு இடமாகவும் உள்ளன.[4][5]