தல்பத்ராம் தக்யபாய் திருவாடி | |
---|---|
இயற்பெயர் | દલપતરામ ડાહ્યાભાઈ ત્રવાડી |
பிறப்பு | வாத்வான், சுரேந்திரநகர், குசராத்து, முகலாயப் பேரரசு | 21 சனவரி 1820
இறப்பு | 25 மார்ச்சு 1898 அகமதாபாத், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | (அகவை 78)
தொழில் | கவிஞர், பதிப்பாசிரியர் |
மொழி | குஜராத்தி |
தேசியம் | இந்தியன் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மித்யாபிமான் (1870) |
பிள்ளைகள் | நானாலால் தல்பத்ராம் கவி (மகன்) |
தல்பத்ராம் தக்யபாய் திருவாடி (Dalpatram Dahyabhai Travadi) ( 1820 சனவரி 21 - 1898 மார்ச் 25) இவர் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் குசராத்தி மொழி கவிஞராக இருந்தார். இவர் நானாலால் தல்பத்ராம் கவி என்ற கவிஞரின் தந்தையாவார்.
அகமதாபாத்தில் ஒரு சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு தலைமை தாங்கிய இவர், மூடநம்பிக்கைகள், சாதி கட்டுப்பாடுகள் மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராக கட்டுரைகளை எழுதினார். இவர் தனது கவிதையான வெஞ்சரித்ராவில் விதவை மறுமணம் தொடர்பான பிரச்சினையை கையாண்டார். [1]
தல்பத்ராம் 1820 சனவரி 21 அன்று சுரேந்திரநகர் மாவட்டத்தின் வாத்வான் நகரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தல்பத்ராம் வேத மந்திரங்களுக்கு நடுவே வளர்ந்தார். தனது 12 வயதில் கவிதைகளை இயற்றியதன் மூலம் தனது அசாதாரண இலக்கிய திறன்களை வெளிப்படுத்தினார். இவர் பிரம்மானந்த சுவாமியின் கீழ் ஒரு சுவாமிநாராயண் பக்தராக கவிதைகள் கட்டமைப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தனது 24 வயதில் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தார். [2]
தல்பத்ராம் ஒரு சமசுகிருத அறிஞரும் கவிஞரும் ஆவார். [3] அகமதாபாத்திற்கு பிரிட்டிசு காலனித்துவ நிர்வாகியான அலெக்சாண்டர் கின்லோச் போர்ப்சுக்கு தல்பத்ராம் குசராத்தி மொழியைக் கற்பித்தார். அந்தக் காலங்களில் குசராத்தி மொழி வரிசைமுறையின் அடிப்பகுதியில் கருதப்பட்டது, எனவே அவர் தனது கவிதைகளை குசராத்திக்கு பதிலாக பிரஜாபாசைவில் எழுத விரும்பினார். போர்ப்ஸ் இவரை குசராத்தி மொழியில் எழுத ஊக்குவித்தார். போர்ப்ஸ் மற்றும் தல்பத்ராம் நெருங்கிய நண்பர்களாக மாறினர். கிரேக்க நாடகமான புளூட்டஸை அடிப்படையாகக் கொண்டு குசராத்தியில் முதல் நவீன நாடகமான 1849 இல் வெளியிடப்பட்ட லட்சுமி நாடக் என்பதை எழுத தல்பத்ராமை ஊக்கப்படுத்தினார். [4] [5]
குசராத்தி இலக்கியம் உருவாக வேண்டும் என்று விரும்பிய போர்ப்சு, குசராத் சங்கத்தைத் தொடங்க உதவினார். அதன் முதல் உதவி செயலாளராக பணியாற்றிய இவர் 1850 ஆம் ஆண்டில் 'புத்தப்பிரகாஷ்' என்ற இதழைத் தொடங்கினார். 1878 வரை அதில் பணி செய்துள்ளார். 1865 ஆம் ஆண்டில் போர்ப்சு இறந்தபோது, தல்பத்ராம் குசராத்தியில் போர்பசுவிரா மற்றும் போர்பசுவிலாஸ் ஆகிய கவிதைகளை இயற்றினார் . [6] 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சுவாமிநாராயண் சம்பிரதயத்தின் நிறுவனர் சகஜானந்த் சுவாமியால் இவருக்கு மகாகவி என்ற தலைப்பு வழங்கப்பட்டது. [7] [8]
அதே காலகட்டத்தின் மற்றொரு முக்கிய குசராத்தி கவிஞரான நர்மத் போலல்லாமல், தல்பத்ராம் பிரிட்டிசு ஆட்சியை இந்தியாவுக்கு அளித்த நன்மைகளுக்காக ஆதரித்தார். குழந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு, விதவைகளை மறுமணம் செய்ய அனுமதித்தல் போன்ற சமூக சீர்திருத்தங்களையும் தல்பத்ராம் ஆதரித்தார். தல்பத்ராம் மற்றும் நர்மத் இருவரும் தங்கள் கவிதைகளில் பொதுவான வாழ்க்கையுடன் இணைக்கப்பட்ட பாடங்களை உரையாற்றிய முதல் குசராத்தி கவிஞர்களாவார். தல்பத்திராமின் கவிதைகளில் ஆங்கில சட்டம், ஒரு கட்டுரை எழுதுவது எப்படி, "கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்கள்" போன்ற பாடங்களும் இருந்தன. இவரது வரிகள் பெரும்பாலும் நகைச்சுவை உணர்வை பிரதிபலித்தது. [9]
தல்பத்ராம் அளவுகளில் ஒரு அதிகாரியாக இருந்தார். மேலும் பிங்கல் ("புரோசோடி") என்ற ஒரு கட்டுரையை எழுதினார். இது பல தசாப்தங்களாக அறிஞர்களால் ஒரு மூல புத்தகமாக பயன்படுத்தப்பட்டது. [10]
தல்பத்ராம் 1898 மார்ச் 25 அன்று அகமதாபாத்தில் காலமானார். [2]
தல்பத்ராமின் பணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அகமதாபாத்திலுள்ள இவரது வீட்டில் வெண்கலத்தாலான ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது. [11]
இந்த நினைவுச்சின்னம் சமுதாயக் கூட்டங்களுக்கான தளமாகவும் விளங்குகிறது. இவரது பிறந்த நாள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் இவரது நாடகங்கள் மற்றும் கவிதைகளும் நிகழ்த்தப்படுகின்றன. தல்பத்ராம் நினைவுச்சின்னத்தை பராமரிக்கும் பொறுப்பை பாரம்பரியத் துறை எடுத்துள்ளது. [12]
தல்பத்ராம் ஒரு முற்போக்கான சிந்தனையாளராக இருந்தார். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் மேம்பாடு மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை ஆதரித்தார். இவர் தனது இலக்கிய திறன்களைப் பயன்படுத்தி சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். 'கவீசுவர் தல்பத்திராம் விருது' இவரது நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.