தாம் மொரேசு (Dominic Francis Moraes 19 சூலை 1938–2 சூன் 2004) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 30 புத்தகங்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் ஆங்கில இலக்கிய வட்டத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றவர் எனக் கருதப்படுகிறார்.[1]
தாம் மொரேசுவின் தந்தை பிராங்க் மொரேசு ஓர் இதழாளராகவும் டைம்சு ஆப் இந்தியா செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்தவர். மும்பையில் பிறந்த தாம் மொரேசு ஆக்சுபோர்ட்டில் தங்கிப் படிப்பதற்கு இங்கிலாந்து சென்றார். 1968 ஆம் வரை அங்கு இருந்தார்.
இலண்டன், ஆங்காங், நியுயார்க்கு நகரங்களில் நடத்தப்பட்ட சில இதழ்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். 1971 இல் ஏசியா இதழின் ஆசிரியர் ஆனார். பிபிசி மற்றும் அய்டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் ஆவணப்படங்களுக்கு உரை எழுதினார். நாசிக் கொடுமைகள், அல்சிரியப் புரட்சி, இசுரேல், வியத்நாம் போர் போன்ற நிகழ்வுகளின் செய்தி நிருபராகப் பணி செய்தார். 1959இல் தலாய் லாமா இந்தியாவுக்கு வந்தபோது அவரை முதன் முதலாக பேட்டி கண்டு அதை வெளியிட்டார்.
1961-62 இல் கோவா தமன், தியு ஆகிய பகுதிகளை இந்தியப்படை கைப்பற்றியபோது அந்த நடவடிக்கையை தாம் மொரேசு கண்டித்தார். 2002இல் குசராத்துக் கலவரம் நிகழ்ந்தபோது அதைக் கேள்விப்பட்ட உடனேயே ஆமதாபாத்துக்குப் புறப்பட்டுச் சென்று பாதிக்கப்பட்ட இடங்களைக் கண்டார்.