தாவாவ் மாவட்டம் Tawau District Daerah Tawau | |
---|---|
![]() தாவாவ் திருமுருகன் ஆலயம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 4°14′33.4″N 117°53′33.16″E / 4.242611°N 117.8925444°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | தாவாவ் |
தலைநகரம் | ![]() |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,125 km2 (2,365 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,97,673 |
• அடர்த்தி | 65/km2 (170/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
வாகனப் பதிவெண்கள் | SD |
இணையதளம் | mpt |
தாவாவ் மாவட்டம்; (மலாய்: Daerah Tawau; ஆங்கிலம்: Tawau District) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த செம்பூர்ணா மாவட்டத்தின் தலைநகரம் தாவாவ் நகரம் (Tawau Town).
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சுமார் 1,832 கி.மீ. (989 மைல்) தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 452 கி.மீ. (280 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2010-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தாவாவ் மாவட்டத்தின் மக்கள் தொகை 397,673.
சபா மாநிலத்தின் தாவாவ் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
1890-களில் தாவாவ் பகுதியில் அதிகமாக மக்கள் வசிக்கவில்லை. ஏறக்குறைய 200 பேர் மட்டுமே வசித்தனர். பெரும்பாலும் இவர்கள் பாலுங்கான், தாவி-தாவி இனத்தைச் சேர்ந்த பூர்வீக மக்கள். கலிமந்தான் பகுதியை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்யத் தொடங்கியதும், அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தவர்கள்தான் அந்தப் பூர்வீக மக்களாகும். அப்போது தாவாவ் ஒரு சிறிய கிராமமாக இருந்தது.
1898-இல் சீனர்கள் தாவாவ் கிராமத்தில் குடியேறினர். பின்னர், அங்கு ஒரு சீனக் குடியேற்றப் பகுதி உருவானது. வேளாண்மைத் துறைக்கு மிகச் சிறந்த நில அமைப்பு அங்கே அமைந்து விட்டதால், 1930-களில் தாவாவ் நகரம் துரிதமான வளர்ச்சியைக் கண்டது. 1931-இல் அதன் மக்கள்தொகை 1980-ஆக உயர்ந்தது.[1]
1900-ஆம் ஆண்டுகளில், தாவாவ் மாவட்டத்தில் குகாரா தோட்டம், குபோத்தா தோட்டம் எனும் பெரும் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் ரப்பர், சணல், தென்னை போன்றவை பயிர் செய்யப்பட்டன. தாவாவ் நகரத்தை முதலாம் உலகப்போர் பெரிதாகப் பாதிக்கவில்லை. இருப்பினும், உலகப் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் இருக்கவே செய்தது.
அந்தச் சமயத்தில் அரசாங்கத்தின் நிர்வாக மையமாகவும் வணிக மையமாகவும் சண்டக்கான் விளங்கியது. தாவாவ் சிறிய நகரமாக இருந்தாலும், சண்டக்கான் நகரைக் காட்டிலும் நன்கு செழிப்புற்று விளங்கியது.
தாவாவ் நகரத்தில், 1930-களில், ஏறக்குறைய 60 கடைவீடுகள் இருந்தன. அனைத்தும் மரத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள். தாவாவ் நகரில் அப்போது இருந்த டன்லப் தெரு (Dunlop Street), மான் சியோங் தெரு (Man Cheong Street) எனும் இரண்டே இரண்டு தெருக்களில் அந்தக் கட்டடங்கள் இருந்தன.
அந்தக் காலகட்டத்தில் ஏ.ஆர்.டன்லப் (A.R. Dunlop) என்பவர், தாவாவ் மாவட்டத்தின் பிரித்தானிய அதிகாரியாக இருந்தார். அவர் நினைவாக டன்லப் தெருவிற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது.
மான் சியோங் (Man Cheong) என்பது தாவாவ் நகரில் புகழ் பெற்ற ஒரு காபிக் கடை ஆகும். அந்தக் கடை இன்னும் டன்லப் தெருவில் இருக்கிறது. சில தங்கும் விடுதிகளும் இருக்கின்றன. தாவாவ் நகரில் இருக்கும் பெரும்பாலான கடைகள் சீனர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன.
தாவாவ் நகரத்தின் காப்பித்தான் சீனாவாக இசுடீபன் தான் என்பவர் இருந்தார். பின்னர், இவர் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டார். அந்தக் கட்டத்தில் போக்குவரத்து, அஞ்சல் தொடர்புகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தன.
தாவாவ் நகரத்தில் இருந்து சண்டாக்கான் நகருக்கு ஒரு கடிதத்தை அனுப்பினால், அது போய்ச் சேர ஒன்பது நாட்களுக்கும் மேலாகும். சிங்கப்பூருக்குப் போய்ச் சேர பத்தொன்பது நாட்கள் பிடிக்கும். அஞ்சல் வழியாகச் செய்திகள் வந்து சேருவதற்கு கால தாமதமானதால், உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்ள தாவாவ் மக்கள் பெரும்பாலும் வானொலியை நம்பி இருந்தனர்.
அந்தக் காலக் கட்டத்தில் ஐரோப்பாவிலும், சீனாவிலும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு சிலர் மட்டுமே வானொலியைப் பயன்படுத்தும் வசதிகளைப் பெற்று இருந்தனர். மணிலா வானொலி நிலையம்தான் அவர்களின் முக்கியத் தேர்வாக இருந்தது.
ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகாலம் தாவாவ், ஜப்பானியர்களின் ஆட்சியில் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது தாவாவ் மட்டும் அல்ல, போர்னியோ தீவு முழுவதுமே சப்பானியர்களின் பிடியில் இருந்தது.
1945 சூன் 10-ஆம் தேதி, லபுவான் தீவில் தரையிறங்கிய வடக்கு ஆத்திரேலிய இராணுவப் படையினர், போர்னியோவை சப்பானியர்களிடம் இருந்து மீட்பு செய்தனர். போர்ச் சேதங்களினால் தாவாவ் மிகுதியாகப் பாதிப்பு அடைந்து இருந்தது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தாவாவ் நகரை நிர்வாகம் செய்து வந்த பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம், மறு சீரமைப்பு செய்வதில் தீவிரமான கவனம் செலுத்தியது. 1963-ஆம் ஆண்டு, பிரித்தானிய பேரரசிடம் இருந்து சபா விடுதலை பெற்றது.
தாவாவ் மாவட்டத்தின் தென் கிழக்குப் பகுதியில், சுலாவெசி கடலும், சூலு கடலும் அமைந்துள்ளன. மேற்குப் பகுதியில் அடர்ந்த போர்னியோ காடுகள் உள்ளன. இந்த மாவட்டத்தின் தென் பகுதியில் இந்தோனேசியாவின் கலிமந்தான் பெருநிலம் உள்ளது.
தாவாவ் மாவட்டம் மெரோதாய் (Merotai), கலாபாக்கான் (Kalabakan), செம்பூர்ணா (Semporna), கூனாக் (Kunak), லகாட் டத்து (Lahad Datu) என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. தாவாவ் நகரில் இருந்து 155 கி,மீ. வட கிழக்கே லகாட் டத்து எனும் பட்டணம் உள்ளது.
2013 பிப்ரவரி 13-ஆம் தேதி, இந்த லகாட் டத்து பட்டணத்திற்கு அருகில் இருக்கும் தண்டுவோ (Tanduo) எனும் கிராமத்தை, சூலு சுல்தானகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சில பிலிப்பீன்சுகாரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
அவர்கள் சூலு சுல்தானகத்தின் அரியணைக்கு உரிமை கோரும் சமாலுல் கிராம் III (Jamalul Kiram III) என்பவரால் அனுப்பப் பட்டனர். கிழக்கு சபாவின் மீது பிலிப்பீன்சு நாட்டின் பிராந்திய உரிமையை வலியுறுத்துவதே (Philippine Territorial Claim to Eastern Sabah) சமாலுல் கிராமின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது.[2][3]
இந்த ஆக்கிரமிப்பிற்குப் பலடியாக மலேசியப் பாதுகாப்பு படையினர் (Malaysian Security Forces) அந்த தண்டுவோ கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். பிலிப்பீன்சு மற்றும் மலேசியா அரசாங்கங்கள் ஓர் அமைதியான தீர்வைக் காண்பதற்காக அந்தக் குழுவுடன் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற பிறகு, இந்த மோதல் ஆயுத மோதலாக மாறியது.[4][5]
அந்த மோதலில் சூலு சுல்தானகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட 56 பேர் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்; மற்றும் பலர் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். [7][8] மோதலின் போது மலேசியத் தரப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; பொதுமக்களில் 10 பேர் உயிர் இழந்தனர்.[6][7][8]