தாவூத் கான் கர்ரானி

தாவூத் கான் கர்ரானி (Daud Khan Karrani) (ஆட்சி 1572 – 12 ஜூலை 1576) இவர் வங்காள ஆட்சியாளர் சுலைமான் கான் கர்ரானியின் இளைய மகனாவார். இவரது தந்தையின் ஆட்சிக் காலத்தில், 40,000 குதிரைப்படை, 3,600 யானைகள், 140,000 காலாட்படை மற்றும் 200 பீரங்கிகளைக் கொண்ட ஒரு பெரிய இராணுவத்திற்கு இவர் தலைமை வகித்துள்ளார். இன்றைய இந்தியாவின் தென்மேற்குப் பகுதிகளின் மேல் இவர் படையெடுத்துள்ளார். [1]

முகலாய-ஆப்கான் போர்

[தொகு]

முகலாயப் பேரரசர் அக்பரின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதற்கு தாவூத் கான் அதிருப்தி அடைந்தார். எனவே இவர் தில்லி இராணுவத்திற்கு எதிராகப் போராடி வங்காளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்தார்.

ஜமானியாவின் படையெடுப்பு

[தொகு]

காசிப்பூர் அருகே ஜமானியா மீது தாவூத் படையெடுத்தவுடன் பேரரசர் அக்பர் தாவூத் கானைத் தவிர்த்து வந்தார். வங்காள இராணுவம் ஜமானியா நகரத்தை தரைமட்டமாக்கி அதன் கோட்டையை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, அக்பர் இறுதியாக ஜான்பூரின் ஆளுநர் முனிம கான்னுக்கு தாவூத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முனிம் கான் தனது நண்பரும் தாவூத்தின் பிரதம மந்திரியுமான இலூதி கானை பாட்னாவில் சந்தித்து போர் தொடுத்தார்.

போருக்குப் பின்னர் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் அக்பர் மற்ரும் தாவூத் கான் ஆகியோருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இலூதி கான் பின்னர் தாவூத்தால் கொல்லப்பட்டார். [2]

பாட்னா போர்

[தொகு]

1573 ஆம் ஆண்டில் முனிம் கான் பீகாரைத் தாக்கினார். தாவூத் பின்வாங்கி பாட்னாவில் தஞ்சம் புகுந்தார். காட்லு லோஹானி, குஜார் கான் கர்ரானி மற்றும் சிறீஹரி ஆகியோரை முகலாய இராணுவத்திற்கு எதிராக தாவூத் அனுப்பினார். முனிம் கான், தோடர் மால் மற்றும் மான்சிங் ஆகியோருடன் ஹாஜிப்பூரில் முதல் தாக்குதலை நடத்தினார். கடுமையான போருக்குப் பிறகு, வங்காளிகள் மற்றும் ஆப்கானியர்கள் வெற்றியின் விளிம்பில் இருந்தனர். இருப்பினும், அக்பர் எதிரியின் இராணுவத்திற்கான உணவுப் பொருட்களின் ஆதாரமாக இருந்த அண்டை கோட்டையான ஹாஜிபூரை கைப்பற்றினார். ஆப்கானியர்களுடன் வங்காளிகளும் பாதிக்கப்பட்டு வங்காளத்திற்கு பின்வாங்கினர். முனிம் கானை பீகார் மற்றும் வங்காள ஆளுநராக நியமித்த பின்னர் அக்பர் தலைநகருக்கு திரும்பினார். அவருக்கு உதவ தோடர் மாலும் அங்கேயே விடப்பட்டார். [2]

துக்கராய் போர்

[தொகு]

மார்ச் 3, 1575 அன்று துக்கராய் நகரில் முகலாயர்களுக்கும் ஆப்கானியர்களுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. இதன் விளைவாக இருவருக்கும் ஒரு சமநிலை ஏற்பட்டது. ஆப்கானியர்கள் ஒரிசாவின் கட்டாக்கிற்கு பின்வாங்கினர். ஆப்கானிஸ்தான் தலைநகரான வங்காளத்த்தின் தாண்டாவை முகலாயர்கள் கைப்பற்றினர். முனிம் கான் வங்காளத்தின் தலைநகரை தாண்டாவிலிருந்து கவுருக்கு மாற்றினார். கட்டாக் ஒப்பந்தத்தில், தாவூத் வங்காளத்தையும் பீகாரையும் முகலாயர்களுக்கு வழங்கினார். அவர் ஒரிசாவை மட்டுமே தனது வசம் வைத்திருந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு சண்டை வெடித்தது. முனிம் கான் அக்டோபர் 1575 இல் திடீரென இறந்தார். [2] முகலாய இராணுவம் கிழக்கு வங்கத்திலிருந்து கலபகர் மற்றும் ஈசா கான் ஆகியோரின் எதிர்ப்பால் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கவுரை வெற்றிகரமாக மீண்டும் கைப்பற்ற தவூத் ஒரிசாவிலிருந்து அணிவகுத்துச் சென்றார்.

ராஜ்மகால் போர்

[தொகு]

ராஜ்மகால் போர்

அக்பர் கான் ஜஹான் குலியின் தலைமையில் கீழ் ஒரு புதிய இராணுவத்தை அனுப்பினார். அவர் தெலியாகரியைக் கைப்பற்றி ராஜ்மகாலை நோக்கி முன்னேறினார். இரு படைகளும் ராஜ்மகால் போர்க்களத்தில் சந்தித்தன. போர் பல நாட்கள் நீடித்தது. அக்பருக்கு சண்டை மிகவும் கடினமாகிவிட்டதால், பீகார் ஆளுநர் முசாபர் கான் துர்பதி மற்றும் பிற தளபதிகள் தன்னுடன் இணையுமாறு கேட்டுக்கொண்டார். மறுபுறம் தாவூத் மற்ற முக்கிய ஆப்கானிய தலைவர்களான ஜுனைத் மற்றும் குட்லு கான் ஆகியோருடன் இருந்தார் [2] 1576 ஜூலை 12 அன்று நடந்த கடுமையான போருக்குப் பிறகு, தாவூத் இறுதியாக தோற்கடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

அவரது மரணத்திற்குப் பிறகு வங்காளம் நேரடி முகலாய ஆட்சியின் கீழ் சென்றது. அது மாகாணமாக நிறுவப்பட்டு சுபாதார்களைக் (ஆளுநர்) கொண்டு ஆளப்பட்டு வந்தது.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Kingdoms of South Asia - Indian Kingdom of Bengal". historyfiles.co.uk.
  2. 2.0 2.1 2.2 2.3 "Daud Khan Karrani". banglapedia.org.