உயிர் நீர் தி வாட்டர் ஆஃப் லைஃப் | |
---|---|
![]() | |
ஆர்தர் ராக்காம்,கி 1916 | |
நாட்டுப்புறக் கதை | |
பெயர்: | உயிர் நீர் தி வாட்டர் ஆஃப் லைஃப் |
தகவல் | |
Aarne-Thompson Grouping: | ATU 551 |
Country: | ஜெர்மனி |
Published in: | கிரிம்சு விசித்திரக் கதைகள் |
Related: | "பச்சைக் குறும்பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி" "இங்கிலாந்தின் அரசனும் அவனது மூன்று சகோதரர்களும்" |
" தி வாட்டர் ஆஃப் லைஃப் " (ஆங்கிலம்:"The Water of Life"; German: Das Wasser des Lebens; பொருள்: உயிர் நீர் ) கிரிம் சகோதரர்களால் தொகுக்கப்பட்ட ஒரு செருமானிய விசித்திரக் கதையாகும். அவர்களது தொகுப்பில் இக்கதையின் வரிசையெண் 97.[1]
இது, ஆர்னே-தாம்சனனின் விசித்திரக் கதைத் தொகுப்புகளின் வகைப்பட்டியலில் 551 ஆவதாக உள்ளது. [2]
இக்கதையை ஜான் பிரான்சிஸ் காம்ப்பெல், கிரீன் பள்ளத்தாக்கின் பழுப்புக் கரடி என்ற ஸ்காட்லாந்திய விசித்திரக் கதைக்கு இணையானதாகக் குறிப்பிடுகிறார். [3]
ஒரு அரசன் இறக்கும் நிலையிலிருந்தான். ஒரு முதியவர் அரசனின் மகன்களிடம் உயிர் நீரைக் கொண்டு மட்டுமே அரசரைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார். மகன்கள் ஒவ்வொருவரும் வரிசையாக உயிர் நீரைத்தேடிக் கிளம்பினர். இரு மூத்தமகன்களும் தாங்கள் நாட்டுக்கு அரசனாகி விடலாம் என்ற ஆசையில் சென்றனர். ஆனால் வழியில் ஒரு குள்ளனிடம் முரட்டுத்தனமாக நடந்ததால் குறுகிய மலையிடுக்கில் சிக்கிக்கொண்டனர். மூன்றாவதாக இளையமகன் சென்றபோது அவனை வழியில் கண்ட குள்ளன் எங்கே போகிறாய் என்று கேட்க, இளையமகனும் தான் வந்த நோக்கத்தைச் சொன்னான். குள்ளன் இளையவனிடம் அது ஒரு கோட்டையில் இருப்பதாகச் சொல்லி, வாயில்களைத் திறக்க ஒரு இரும்புக்கோலையும், உள்ளே இருக்கும் சிங்கங்களுக்கு உணவளிக்க இரண்டு அப்பங்களையும் கொடுத்தான். கடிகாரம் 12 மணி அடிக்கும் முன் அவன் உயிர் நீரை எடுத்துக்கொண்டு திரும்பி விடவேண்டும்; இல்லையென்றால் அதன்பிறகு கோட்டைக் கதவுகள் மீண்டும் மூடிக்கொண்டுவிடுமென்று எச்சரித்தான்.
இளையமகன் குள்ளன் கூறியதுபோலவே மந்திரக்கோலால் கோட்டையின் வாயிலைத் திறந்து சிங்கங்களுக்கு அப்பத்தை அளித்தான். பின்னர் அவன் தூங்கும் இளவரசர்கள் இருந்த ஒரு மண்டபத்திற்கு வந்தான். அந்த இளவரசர்களின் விரல்களிலிருந்த மோதிரங்களையும், மேசையிலிருந்து சிறிது ரொட்டியையும் வாளையும் எடுத்துக் கொண்டான். அடுத்து அவன் ஒரு அழகான இளவரசியைக் கண்டு அவளை முத்தமிட்டான். அப்போது இந்த இளவரசி அவன் அவளை விடுதலை செய்துவிட்டதாகக் கூறி மகிழ்ந்தாள். மேலும் ஒரு வருடத்திற்குள் திரும்பி வந்தால் அவனைத் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்து உயிர் நீர் ஊற்று இருக்கும் இடத்தையும் அவனுக்குச் சொன்னாள். அவன் ஊற்றை நோக்கிச் சென்ற வழியில் ஒரு படுக்கையைக் கண்டு அயர்ச்சியினால் அதில் படுத்து உறங்கி விட்டான். அவன் விழித்தபோது 12 மணி அடிப்பதற்குக் கால்மணி நேரமே இருந்தது. அவன் விரைவாகச் சென்று உயிர் நீரை எடுத்துக்கொண்டு மூடிக்கொண்டிருந்த கோட்டைக் கதவை வேகமாகக் கடந்து வெளியே வந்து சேர்ந்தான்.
திரும்பிவந்த அவனிடம் அவனது சகோதரர்களுக்கு நடந்ததைக் குள்ளன் சொன்னான். சகோதரர்களை விடுவிக்குமாறு இளவரசன் குள்ளனிடம் வேண்டிக்கொண்டான். குள்ளனோ அவனது சகோதர்கள் கெட்ட உள்ளம் படைத்தவர்கள் என எச்சரித்து விட்டு அவர்களை விடுவித்தான். சகோதரர்கள் மூவரும் போராலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு வந்தனர். அங்கு இளையவன் எதிரிகளைத் தான் கோட்டையிலிருந்து எடுத்துவந்த வாளால் கொன்றுவிட்டு, அப்பத்தைக்கொண்டு அந்நாட்டு மக்களுக்கு உணவளித்தான். பின்னர் அவர்கள் அதே சூழ்நிலையில் மேலும் இரண்டு நாடுகளுக்கு வந்தனர். அங்கும் அவ்வாறே செய்தார்கள். பிறகு கடலைக் கடந்து தங்கள் நாட்டுக்கு வரக் கப்பலில் ஏறினார்கள். மூத்த சகோதரர்கள் உயிர் நீரைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாகக் கடல் நீரை நிரப்பி வைத்துவிட்டனர்.
கடல் நீரை அருந்தியதால் அரசன் நோய்வாய்ப்பட்டான். மூத்த சகோதரர்கள் இளையவன் அரசருக்கு விஷம் கொடுக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டி, அவர்கள் திருடி வைத்திருந்தகு உயிர் நீரைக் கொடுத்து அரசரைக் காப்பாற்றினர். இளையமகன் மீது கோபங்கொண்ட அரசர் அவனை இரகசியமாகக் கொல்ல முடிவு செய்தார் (தண்டனையாக). அவனுடன் ஒரு வேட்டைக்காரனைக் காட்டிற்கு அனுப்பி அவனைக் கொல்ல ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த வேட்டைக்காரன் இரக்கப்பட்டு இளவர்சனிடம் உண்மையைக் கூறிவிட்டான். இருவரும் ஒருவரது உடையை மற்றவர் மாற்றிக்கொண்டனர். பின்னர் இளவரசன் வேட்டைக்காரன் உடையில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான்.
இளைய இளவரசன் காப்பாற்றிய மூன்று நாடுகளிலிருந்தும் செல்வங்கள் வந்திறங்கின. அதன்பின்னரே அரசர் தனது தவறை உணர்ந்து மகனைக் கொன்றதற்காக வருந்தினார். அப்போது வேட்டைக்காரன் தான் இளையவனைக் கொல்லவில்லை என்று அரசரிடம் ஒப்புக்கொண்டான். அரசரும் இளவரசன் சுதந்திரமாக நாடு திரும்பலாம் என்று ஒரு பிரகடனத்தை வெளியிட்டான்.
கோட்டையில் இருந்த இளவரசி கோட்டைக்கு வருவதற்கு ஒரு தங்கப் பாதையை உருவாக்கி, அது தனக்கு உண்மையான மணமகனைக் கொண்டுவரும் என்றும், அதில் நேராகப் பயணிக்காத யாரையும் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் தன் மக்களிடம் சொன்னாள். இரண்டு மூத்த இளவரசர்களும் (அவளை விடுவித்தவர்கள் என்று பாசாங்கு செய்தவர்கள்) அப்பாதையைப் பார்த்ததும், அதில் பயணித்து அழுக்காக்கி விட்டால் அச்செயல் அவர்களுக்கு அவமானத்தைத் தருமென எண்ணி, பாதையின் ஓராமாகவே சென்றனர். அதனால் வேலைக்காரர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. இளையவன் இளவரசியின் நினைவிலேயே சென்றதால் தங்கப் பாதையைக் கவனிக்காமல் அதிலேயே சென்றான். அதனால் அவனை இளவரசியிடம் அழைத்துச் சென்றனர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இளவரசன் மீண்டும் தன் தந்தையிடம் சென்று உண்மைக் கதையைச் சொன்னான். ராஜா மூத்த சகோதரர்களைத் தண்டிக்க விரும்பினார், ஆனால் அவர்கள் அதற்குள் ஒரு கப்பலில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டிருந்தனர். மீண்டும் ஒருபோதும் அவர்கள் காணப்படவில்லை.
இந்தக் கதையானது பன்னாட்டு ஆர்னே-தாம்சன்-உதர் குறியீட்டில் "தி வாட்டர் ஆப் லைப்" அல்லது "சன்ஸ் ஆன் அ கொஸ்ட் ஃபார் எ வொன்டர்புல் ரெமெடி ஃபார் தெயர் ஃபாதர்" எனக் குறியீட்டு எண் ATU 551 கொண்டுள்ளது.[4] நாட்டுப்புறவியலாளரான ஸ்டித் தாம்சன், இந்த கதை வகைக்கும் "தங்கப் பறவைக்கான தேடல் " அல்லது "பறவை, குதிரை மற்றும் இளவரசி" என்ற கதையின் ATU 550 வகைக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.[5]
தி ரோஸ் ஆஃப் பகாவலி (இந்தி-உருது: குல்-இ-பகாவலி ) என்ற இந்திய வகைகளில், அரசர் பார்வையற்றவராகி, அவரது மருத்துவர்களின் உத்தரவின் பேரில், சாத்தியமான ஒரே சிகிச்சைக்காக தனது ஐந்து மகன்களை தேவதை இளவரசி பகாவலியின் மந்திர ரோஜாவைக் (குல்பகாவலி) கொண்டுவர அனுப்புகிறார் [6] [7] டபிள்யூ. எ. க்ளூஸ்டன் மாயமலருக்கானத் தேடலான இக்கதையை ஜெர்மன் விசித்திரக் கதையான "தி வாட்டர் ஆஃப் லைஃப்" க்கு இணையாகக் கூறுகிறார். [8]