திம்மம்மா ஆலமரம் Thimmamma Marrimanu | |
---|---|
வகை | ஆல் (Ficus benghalensis) () |
இடம் | இந்தியா, ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர் |
திம்மம்மா ஆலமரம் அல்லது திம்மமாமா மரிமானு (Thimmamma Marrimanu; தெலுங்கு: తిమ్మమ్మ మర్రిమాను) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கதிரி நகரில் இருந்து 25 கிலோமீட்டரில் தொலைவில் உள்ள ஒரு பெரிய ஆல மரமாகும். தெலுங்கு மொழியில், "மர்ரி என்பது ஆல் என்பதையும் மானு என்பது மரத்தையும் குறிக்கும் சொல்லாகும்.[1][2] இந்த மரத்தின் மேல் பரப்பானது 19,107 m2 (4.721 ஏக்கர்கள்) கொண்டுள்ளது.[3][4][5] இது 1989 ஆம் ஆண்டின் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் உலகின் மிகப் பெரிய மரமாக பதிவு செய்யப்பட்டது.[3][6][7] திம்மம்மா ஆலமரம் அனைத்து தர்ம சமயத்தினராலும் புனிதமாகக் கருதப்பட்டுத் தொழப்படுகிறது.
இந்த மரம் குறித்த தகவலாக கூறப்படுவது என்னவென்றால், செட்டிபலிஜா தம்பதியரான சென்னக்க வெங்கடப்பா, மங்கம்மா ஆகியோருக்கு பொ.ஊ. 1394இல் திம்மம்மா என்ற ஒரு மகள் பிறந்தார். இவரை பால வீரைய்யா என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். பாலவீரைய்யா 1434இல் இறந்தார். இதையடுத்து திம்மம்மா உடன்கட்டை ஏறினார்.[8][9] இவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் இந்த மரம் வளர்ந்துள்ளது என நம்பப்படுகிறது.[8] குறிப்பாக, சிதையின் வடகிழக்கு முனையில் இந்த மரம் வளர்ந்தது என்று நம்பப்படுகிறது.
திம்மம்மா ஆலமரம் இந்து மதம், சமணம், பௌத்தம், சீக்கியம் ஆகிய இந்திய சமயத்தினரால் புனிதமாகக் கருதப்பட்டுத் தொழப்படுகிறது. இந்த ஆலமரத்தின் அடியில் திம்மமாவுக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது. இங்கு வந்து தில்மாமாவை வணங்குகிற குழந்தை இல்லாத தம்பதியருக்கு அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். சிவராத்திரி நாளில் இங்கு திம்மமாவுக்கு ஜத்ரா என்னும் விழா நடத்தப்படுகிறது. இதில் பலர் கலந்து கொள்கின்றனர்.[10]
இந்த மரத்தை முதன் முதலில் கவனித்து, உலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் சத்யநாராயண ஐயர் என்பவராவார். கர்நாடகத்தின், பெஙுகளூரைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், ஒளிப்படக் கலைஞராவார். இவரே பின்னர் கின்னஸ் உலக சாதனை பதிவில் இந்த மரத்தைப் பதிவுசெய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இவருடைய பெயரும் இந்த சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]
திம்மம்மா மர்ரியாம்மா மரம் குறித்து பிபிசி தொடரான 'தி ட்ரீ ஸ்பிரிட்ஸ்' (29 ஆகஸ்ட் 2017) தெடரின் இரண்டாம் பாகத்தில் விவரிக்கப்பட்டது.[11]