தியடோர் சாமர்வெல்

எவரஸ்ட் மலை ஏற்றத்தின்போது 1924இல் சாம்வெல்
வென்ற பதக்கங்கள்
ஆண்கள் மலையேற்றம் (Alpinism)
தங்கப் பதக்கம் – முதலிடம் 1924 பாரிஸ்

தியோடர் ஹோவர்ட் சாமர்வெல் (Theodore Howard Somervell) (16 ஏப்ரல் 1890 - 1975, சனவரி 23) என்பவர் ஒரு இங்கிலாந்து அறுவை சிகிச்சை நிபுணர், மலை ஏற்ற வீரர், ஓவியர், அறப் பணியாளர் என பன்முகத் தன்மைகள் கொண்டவர். 1920களில் எவரஸ்டு சிகரத்தில் ஏறும் சாதனைப் பயணக் குழுவில் இடம்பெற்றவர். பின்னர் இந்தியாவில் ஒரு மருத்துவராக கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சேவையாற்றியவர். 1924 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மலைஏற்றத்திற்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை பியர் தெ குபர்த்தென் என்பவரிடம் பெற்றவர்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சாமர்வெல் இங்கிலாந்தில் வெஸ்ட்மோர்லேண்டில் கெண்டல் என்ற ஊரில் பிறந்தார் இவரது பெற்றோர் காலணிகளை தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்த ஒரு வசதியான ஒரு குடும்பத்தினர். இவரது பதினெட்டாம் வயதில் ரக்ப பள்ளியிலும், மலையேற்றப் பயிற்சிக்கழகத்திலும் சேர்ந்தார். ஆர்வத்துடன் மலையேற்றத்தைக் கற்றார். அவரது பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு, கேம்பிரிட்சில் கான்வில் காயஸ் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இக்காலகட்டத்தில் இவருக்கு கிருத்துவ மத நம்பிக்கையில் பெரும்பற்று கொண்டார். மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்தார். மருத்துவ பயிற்சி முடித்தபின் உலக போரில் பிரித்தானிய வீரராக பணியாற்றினார். .[1] இவருக்கு மார்கரெட் ஹோப் சிம்சன் (1899-1993) என்பவருடன் திருமணம் நடந்தது.

முதலாம் உலகப் போர்

[தொகு]

1915 முதல் 1918 வரையில் சாமர்வெல் பிரான்சில் பிரித்தானிய படையில் பணியாற்றினார். பயங்கரமான இந்த போர் அவரை ஒரு ஆழமான அமைதி விரும்பியாக மாற்றியது. 1916 ல் போரின்போது இவர் ஒரு கூடாரத்தில் நான்கு சக மருத்துவர்களுடன் ஒன்றாக இருந்தது காயம்பட்ட வீரர்களுக்கு வைத்தியம் பார்த்தார். அங்கே காயம்பட்டுக் கிடந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களில் ஒருவர்கூட பிறரைவிட முன்னால் தங்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டுமென கோராததைக் கவணித்தார். இந்த அனுபவம் இவரை அமைதிவாதியாக மாறத் தூண்டியது. இதுவே இவர் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கடைபிடித்து வந்த ஒரு நம்பிக்கையானது.[2] 1921 இல் இராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்த நிலையில் இராணுவத்தைத் துறந்து வெளியேரினார்.[3]

முதல் எவரெஸ்ட் பயணம்

[தொகு]

1922 இல் சாமர்வெல் லேக் மாவட்டத்தில் இருந்த ஆல்ப்ஸ் மலையில் ஏறி தன் திறமையை நிரூபித்துக்கொண்ட நிலையில், எவரெஸ்ட் ஏறும் பிரித்தானிய குழுவில்சேர்ந்துகொள்ள அழைக்கப்பட்டார் பயணத்தின் போது, ஜார்ஜ் மல்லோரி என்பவருடன் ஆழமான நட்பு ஏற்பட்டது. இருவரும் இரவு நேரத்தில் ஷேக்ஸ்பியர் கவிதைகளை தங்கள் கூடாரத்தில் படித்து ரசித்தனர்.[4] மே 18, அன்று சாமர்வெல் மல்லோரி மற்றும் இரண்டு மலை ஏறிகள் மற்றும் ஷெர்பாக்கள் என்னும் வழிகாட்டி மற்றும் சுமை தூக்குபவர்களுடன் எவரெஸ்டின் வடக்கு கோல் பகுதியில் சுமார் 7020 மீட்டர் உயரத்தில், அக்காலகட்டத்தில் மனிதன் சென்றதிலேயே உயரமான பகுதியில் முகாமிட்டிருந்தார். எவரெஸ்ட்டின் உச்சியை அடைய முதல் முயற்சியாக திட்டமிடு வடக்கு விளிம்பு வழியாக ஏற முயற்சித்தனர். மேலும் 8000 மீட்டர் உயரத்தில்அவர்களின் முகாமை நிறுவ இருந்தனர், ஆனால் காற்றின் அடர்தி குறைவால் அவர்களால் விரைவாக ஏற முடியாமல் போய்விட்டது, இதனால் 7600 மீ கீழே ஷெர்பாக்களை அனுப்பி ஒரு முகாமை அமைக்கச் செய்தனர். அங்கே முகாமிட்டபின் அடுத்த நாள் பனியால் புண்ணாகிப்போன கால்களுடன் மேலும் ஏறினர் உச்சியை அடையும் நம்பிக்கையுடன் 8170 மீ உயரம் அடைந்தனர். அவர்கள ஏறிய அந்த உயரம் அக்காலகட்டத்தில் யாரும் செல்லாத உயரம் என்றவகையில் அது ஒரு உலக சாதனை ஆகும்.[5]

அடுத்த சில நாட்களில், மலை ஏறிகளின் இன்னொரு குழு, ஜெஃப்ரி புரூஸ் மற்றும் ஜார்ஜ் பின்ச் ஆகியோர் மலைமையில் ஆக்சிசனுடன் மலை ஏறியது அதில் சாம்வெல் இணைந்தார்., உச்சியை அடையும் இந்த இரண்டாவது முயற்சியும் தோல்வியடைந்தது.வார இறுதியில் முதன்மை முகாமுக்கு திரும்பினர். (சாம்வெல் மட்டுமே மேலும் பயணிக்க தகுதியுடன் இருப்பதாக மருத்துவர்களால் கருதப்பட்டார்) வானிலை மோசமாக இருந்தது. சாம்வெல் மற்றும் மல்லோரி ஆகியோர் இன்னொரு முயற்சி செய்யலாம் என வாதிட்டனர். ஆலோசனையில் குழுவின் தலைவரான சார்லஸ் புரூஸ் இதை எதிர்த்தார்.[6] 7 ஜூன் அன்று சாம்வெல்லுடன் நான்கு பிரிட்டிசார்களும், பதினைந்து ஷெர்பாக்களுடன் கலந்துகொண்ட குழுவுடன் மலையேற்றத்தை மீண்டும் துவக்கினர். இடுப்பளவு பனியில் மேலேரினர் அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு ஷெர்பாக்கள் அதில் சிக்கி இறந்தனர்.[7] இது சாம்வெல்லை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எவரஸ்ட் ஏறும் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பினார்.

இந்தியப் பயணம்

[தொகு]

இந்தியாவில் சுற்றுப்பயணம் மோற்கொண்ட சாம்வெல் இந்தியாவெங்கும் சுற்றிவிட்டு கன்னியாகுமரி வந்தார். அங்கே ஏழை மக்கள் வறுமையால் துண்பப்படுவதையும், மருத்துவ வசதிகள் இன்றி அவதியுறுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். திருவாங்கூரில் குமரிக்கு அருகில் உள்ள நெய்யூரில் இருந்த இலண்டன் மிசன் அமைப்புடன் இணைந்து மருத்துவப்பணி செய்யத்துவங்கினார். அங்கே இருந்த ஒரே மருத்துவரிடம் மிகுதியான நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறுவதைக்கண்டார். பிரிட்டன் திரும்பிய அவர், பிரிட்டனில் தனக்கு இருந்த நல் எதிர்காலத்தைக் கைவிட்டு, நெய்யூருக்குத் திரும்பி அங்கேயே தங்கி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கத் துவங்கினார். எவரெஸ்ட்டில் தனது அடுத்த முயற்சிக்குப பிறகு, நிரந்தரமாக இந்தியாவில் தங்கி பணியாற்றும் தன் விருப்பத்தை அறிவித்தார். அவரது பகழ்பெற்ற ஓவியங்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்தபோது விற்றார். அவரது பெயர் சொல்லும் பல அடையாளங்கள் இன்னமும் கேரளத்தில் உள்ளது.[1]

இரண்டாம் எவரெஸ்ட் பயணம்

[தொகு]

சாம்வெல் மீண்டும் எவரெஸ்ட் ஏற்றத்துக்கு 1924 ஆண்டு சென்றார். அந்த முயற்சியில் பயணம் முழுவதும் அவருக்கு இருமல், அவ்வப்போது சுவாசப் பிரச்சனையுடனை, தொண்டைப் புண், என உடல் நலச்சிக்ல்கள் பின்தொடர்ந்தன, ஆனாலும் அணியின் வலுவான உறுப்பினர்களுடன் எவரெஸ்ட் உச்சியைத் தொடும் முயற்சியில் ஈடுபட்டு மோசமான வானிலை காரணமாக மலை ஏற்றம் முழுமையடையவில்லை. பின்வாங்கிய போது பனிச்சரிவில் இறங்க மறுத்து நான்கு சுமை தூக்கும் ஷெர்பாக்கள் மலைவிளிம்பிலேயே தங்கிவிட முகாமுக்குத் திரும்பிய சாம்வெல் மறுநாள் மலை ஏறிச்சென்று அவர்களை மீட்டு வந்தார்.[8] சாம்வெல் நார்ட்டனுடன் இணைந்து அணியை மீண்டும் ஒன்றிணைத்து உயரத்தில் சென்று மீண்டும் முகாமை நிறுவி, மலை ஏற்றத்தை மேற்கொண்டனர். 8570 அடி உயரத் வரை சென்றனர். இந்த முயற்சியிலும் பல்வேறு காரணங்களினால் வெற்றி பெறவில்லை என்றாலும், அவர்கள் 8570 மீ உயரம் அடைந்தது டென்சிங் ,எட்மண்ட் இல்லரி கூட்டணி எவரெஸ்டில் ஏறிய 1952ஆம் ஆண்டுவரை இது முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது.[9][10]

மருத்துவ வாழ்க்கை

[தொகு]

சாம்வெல் 1923–1949 காலகட்டத்தில் கேரளத்தின் குந்தாவில் இருந்த 'லண்டன் மிசனரி சொசைட்டி பாய்ஸ் பிரிகேட் மருத்துவமனை'யில் (இப்போது எல்எம்எஸ் பாய்ஸ் பிரிகேட் மருத்துவமனை என அழைக்கப்படுகிறது) ஒரு மருத்துவராகப் பணியாற்றினார். அந்த மருத்துவமனையில் இவருக்கு ஒரு தனி அறுவை சிகிச்சைக் கூடம் இருந்தது. அவர் அந்த மருத்துவ மனைக்கு அக்காலத்தில் £ 1,000 நன்கொடை அளித்ததார்.[11] சாம்வெல் வேலூர் கிருத்து மருத்துவக் கல்லூரியில் தன் அறுவைசிகிச்சை முறைகளை 1949 முதல் கற்பிக்க ஆரம்பித்தார். 1961-ல் தனது ஓய்வு வரையில் இந்த கற்பிக்கும் பணியைச் செய்தார். இவரது பணியை பாராட்டி ஆர்டர் ஆப் பிரித்தானிய எம்பயர் என்ற கௌரவ பதவி 1953 இல் அளிக்கப்பட்டது.[12] 1961 இல் ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார். மூன்று ஆண்டுகள் ஆல்பைன் கிளப்பின் தலைவராக இருந்தார்.

ஓவியக் கலைஞர்

[தொகு]

சாம்வெல் பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.[13] இவரது நூற்றுக்கணக்கான ஓவியங்கள் இமயமலை, திபெத்தை சிறப்பாக பிரதிபலிப்பதாகவே இருந்தன இதில் பெரும்பாலானவை 1922 ல் இருந்து 1924 இவர் மேற்கொண்ட பயணங்கள் தொடர்புடையவை.

இறப்பு

[தொகு]

சாம்வெல் 1975இல் லண்டனினின் அசம்பிள்சைட் என்ற ஊரில் இறந்தார். அவர் நினைவாக திருவனந்தபுரம் காரகோணத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிக்கு 'டாக்டர் சாம்வெல் நினைவு சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.[14]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Cecil Northcott, 'Somervell, (Theodore) Howard (1890–1975)', rev., Oxford Dictionary of National Biography, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2004
  2. Neale, Jonathan (2002). Tigers of the Snow. St Martin's Press. pp. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-26623-5.
  3. "No. 32798". இலண்டன் கசெட். 23 பெப்பிரவரி 1923.
  4. Unsworth, Walt (2000). Everest – The Mountaineering History (3rd ed.). Bâton Wicks. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-898573-40-1.
  5. Unsworth pp. 84–90
  6. Neale p.44
  7. Unsworth p.44
  8. Unsworth pp.116–117
  9. Unsworth pp.120–122
  10. It is possible that Mallory and Irvine reached a higher point on their doomed attempt three days later, but there is no definitive proof of this
  11. "Somervell has a Kollam connection too - The Hindu". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்பிரவரி 2015.
  12. "No. 39732". இலண்டன் கசெட் (invalid |supp= (help)). 30 திசம்பர் 1952.
  13. David Seddon,T H Somervell, Himalayan Club publication,(2006)
  14. "Dr. Somervell Memorial CSI Medical College Hospital". பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்பிரல் 2008.[தொடர்பிழந்த இணைப்பு]