தியா | |
---|---|
இயக்கம் | ஏ. எல். விஜய் |
தயாரிப்பு | அல்லிராஜா சுபாஸ்கரன் |
கதை | ஏ. எல். விஜய் |
இசை | சாம் சி. எஸ். |
நடிப்பு | சாய் பல்லவி நாக சௌரியா விரோனிகா அரோரா கந்தாரி நித்தின் |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | லைக்கா தயாரிப்பகம் |
விநியோகம் | நவீன் |
வெளியீடு | 27 ஏப்ரல் 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
தியா (Diya) என தமிழிலும், கனம் என தெலுங்கில் (English: Embryo) அழைக்கப்படுவது 2018 ஆண்டைய இந்திய பன்மொழி திகில், திரில்லர் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை ஏ. எல். விஜய் இயக்க, லைக்கா தயாரிப்பகம் தயாரித்துள்ளது. படத்தில் சாய் பல்லவி மற்றும் விரோனிகா அரோரா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்றுள்ளனர், இவர்களுடன் நாக சௌரியாவும் முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
கிருஷ்ணாவும் (நாக ஷௌரியா) துளசியும் (சாய் பல்லவி) காதலிக்கின்றனர். இவர்களின் சேர்கையினால் துளசி கர்ப்பமடைகிறாள். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டாலும் துளசி படித்து முடிக்கும்வரை குழந்தை வேண்டாம் என்றுகூறி, அந்தக் கரு கலைக்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கிருஷ்ணாவும் துளசியும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். தேனிலவுக்கு பிறகு இவர்கள் புது வீட்டில் குடியேற, எதிர்பாராத விதமாய் அடுத்தடுத்து இவர்களின் குடும்பத்தைச் சேர்நவர்கள் இறக்கின்றனர். முதலில் கிருஷ்ணாவின் தந்தை (நிழல்கள் ரவி) இறக்க, சில நாட்களில் துளசியின் தாயார் (ரேகா) இறந்துபோகிறார். இவர்களின் குடும்ப பெண் மருத்துவரும் இதே போல மர்மமாக இறக்கிறார். இந்த மர்ம மரணங்கள் குறித்து காவல்துறை விசாரிக்கிறது ஆனால் நடந்து என்ன என அவர்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எல்லோரின் மரணமும் ஒரே மாதிரி திட்டமிட்ட கொலை போல தெரிகிறது.
துளசியின் மனதிற்குள் சில உணர்வுகள் தோன்றுகிறது. கருவிலேயே கொல்லப்பட்ட குழந்தை பழிவாங்குகிறது என அவள் உணர்கிறாள். ஆனால் இதை நம்ப மறுத்த கிருஷ்ணா துளசிக்கு மனநிலை பாதிப்பு உள்ளதாக கருதி அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கிறார். அந்தக் குழந்தை, முடிவில் தன் தந்தையையே பழிவாங்க நினைக்கிறது என்பது துளசிக்குத் தெரிகிறது. துளசியால் தன் கருவிடமிருந்து கணவனைக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் மீதிக் கதை.
2017 ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், ஏ. எல். விஜய், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்காக சாய் பல்லவி நடிக்கும் ஒரு படத்தில் பணியாற்றுவதாக அறிவித்தார், மேலும் அவர் "மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்" எழுதிய ஒரு திரைக்கதையை இயக்குவதாகக் கூறினார்.[1] பிரமோட் பிலிஸ் மலையாளத் திரைப்படமான சாரிலி (2015) படத்தை மாதவனுடன் சாய் பல்லவியை நடிக்கவைத்து, தமிழில் மறு ஆக்கம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அப்படத்தின் மறு ஆக்கம் திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டார். திரைப்படப் படப்பிடிப்புக்கு நடிகையின் தேதிகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, இயக்குநர் விஜய் தன் வழக்கமான தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் நிராவ் ஷா மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டோனி போன்றரை நியமித்தார்.[2] சாய் பல்லவி இதற்கு முன் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்ட சில படங்கள் கைவிடப்பட்டதாலும், அவர் படத்தில் இருந்து மாற்றப்பட்டதாலும், இப்படமே அவரது முதல் தமிழ் திரைப்படமாக ஆனது. முன்னர் அவர் தமிழில் நடிப்பதாக இருந்த, மணிரத்தினத்தின் காற்று வெளியிடை (2017) படம் மற்றும் விஜய் சந்தரின் ஸ்கெட்ச் (2017) ஆகிய படங்களில் இருந்து மாற்றப்பட்டார். அதேபோல, அவர் தமிழில் நடிப்பதாக இருந்த சார்லி மற்றும் ராஜீவ் மேனனின் சர்வம் தாள மயம் ஆகிய படங்கள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டன.[3] வரும் மாதம், தெலுங்கு நடிகர் நாக ஷோரியாவின், தமிழ் படத்தில் நடிக்க கையெழுத்திட்டார்.[4][5] விஜய் படங்களில் தொடர்ந்து ஜி. வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து இசையமைத்து வந்த நிலையில் இப்படத்தில் அவருக்கு பதிலாக சாம் சி. எஸ்சை இசையமைப்பாளராக நியமித்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் 2017 செப்டம்பர் வாக்கில் நிறைவான நிலையில், சாய் பல்லவி தனது டப்பிங் வேலைகளை தொடங்கினார்.[6] இந்தப் படம் ஒரு திகில் படம் என்ற கூற்றை மறுத்த விஜய், " இது ஒரு இளம் தாய் மற்றும் அவரது நான்கு வயது குழந்தையின் கதை" என்றார். மேலும் இதில் சாய் பல்லவி அம்மாவாக நடிப்பதாக கூறினார்.[7]
2018 ஏப்ரலில் படத்தின் பெயரானது கரு என்பதில் இருந்து தியா என மாற்றப்பட்டது.[8]
இப்படம் 2018 ஏப்ரல் 27 அன்று வெளியானது.