திருநாவாய் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°00′04″N 75°59′28″E / 11.0010°N 75.9911°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
அருகில் உள்ள நகரம் | திரூர் |
திருநாவாய் (Tirunavaya) என்பது கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது பாரதப்புழாவின் வடக்கு கரையில் (பொன்னானி / நிலா அல்லது பேராறு) அமைந்துள்ளது. இது கேரளாவின் முக்கிய இந்து யாத்திரை மையங்களில் ஒன்றாகும். [1] திருநாவாய் நகரானது திருநாவாய் கோயில் (நவ முகுந்தன் / விஷ்ணு கோயில்), சிவன், பிரம்மா கோயில்கள் (செறுதிருநாவாய் பிரம்மன் கோயில்,சிவன் கோயில் / திருநாவாய் மகாதேவர் கோயில்) ஆகியவற்றின் அமைவிடமாக விளங்குகிறது. இது கேரளத்தில் பித்ருக்களுக்கு தர்பணம் விடும் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.
திருநாவாய் பழங் காலம் முதல் கேரள இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடமாக இருந்துள்ளது. திருநாவாயில் உள்ள பொன்னானி ஆறு ஒரு புனித நதியாக கருதப்படுகிறது. ஏனெனில் அது அதன் வலது கரையில் உள்ள விஷ்ணு (நவமுகுந்தன்) கோயிலுக்கும் அதன் இடதுபுறத்தில் உள்ள பிரம்மன் மற்றும் சிவன் கோயிலுக்கும் இடையில் இந்த ஆறு பாய்கிறது. வளமான நதிப் படுகையில் அமைந்துள்ள இந்த ஊர் கேரளத்தின் மிக முக்கியமான பிராமண குடியேற்றங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.[2] திருநாவாயில் மாமாங்கம் திருவிழா போல 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முக்கியத்துவம் உடைய கோயில் திருவிழா பெரியதாக நடத்தப்படுகிறது. [3]
திருநாவாயில் உள்ள நவமுகுந்தன் கோயிலானது வைணவ ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[4] திருநாவாயில் நிகழ்த்தப்படும் பித்ருகர்மா / பித்ருகிரியைகள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. கார்கிடகா வாவு (அமாவாசை) அன்று, வட கேரளத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்துக்கள் கோயிலுக்குச் சென்று, தங்கள் மூதாதையர்களுக்கு மோட்சத்தைத் அளிக்குமாறு பித்ருகிரியைகளை (பலி தர்பணம்) செய்கிறார்கள். ஊடகங்களின்படி, 2015 இல் நவமுகுண்டா கோவிலில் 50,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாவு பலி நிகழ்த்தினர். [5] துலாம் மற்றும் கும்பத்தின் வாவு நாட்களில் திருநாவாயில் பலி சடங்குகள் செய்யப்படுகின்றன.[6]
திருநாவாய் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் (புவியியல் பரப்பு: 11.01 கி.மீ 2 ) மக்கள் தொகையானது 24,790 (2011) என்று உள்ளது. மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 77.41%, இந்துக்கள் 18.30%. அட்டவணை சாதியினர் 6.17% ஆகவும், அட்டவணை பழங்குடியினர் 0.63% ஆகவும் உள்ளனர். [7]
ஊரின் ஆண்டு சராசரி மழையளவு 2769 மி.மீ. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 32° C வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° C ஆக நிலவும்.