திருப்தி தேசாய் (Trupti Desai) என்பவர் ஒரு இந்திய பாலினச் சமனிலை செயற்பாட்டாளர் மற்றும் மும்பையில் செயல்படும் பூமாதா பிரிகெட் என்ற சமூக செயற்பாட்டு அமைப்பின் நிறுவனர் ஆவார். இவர் மற்றும் இவரது அமைப்பினர் மகாராட்டிரத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களான சனி சிகதாபூர் கோயில், திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், கோலாபூரில் உள்ள மகாலட்சுமி கோயில் போன்ற இந்து சமய வழிபாட்டு இடங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதை எதிர்த்து பரப்புரை செய்து வருகின்றனர்.
தேசாய் கர்நாடக மாநிலம் நிபானி வட்டத்தில் பிறந்தவர்.[1] இவரது தந்தை தனது குடும்பத்தை ஒரு ஆசிரமத்தில் விட்டுவிட்டார். இவரது தாயார் இவரையும் இவரின் இரு உடன்பிறப்புகளையும் வளர்த்து ஆளாக்கினார்.[2] இவர் ஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே (எஸ்என்டீடி) மகளிர் பல்கலைக்கழகத்தின் புனே வளாகத்தில் பட்டப்படிப்பு படிக்கச் சேர்ந்தார் ஆனால் முதல் ஆண்டிற்குப் பிறகு குடும்பச் சூழல் காரணமாக படிப்பைக் கைவிடவேண்டி இருந்தது.[3]
தேசாய்க்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார். அவரது கணவர் பிரசாந்த் தேசாயைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் ஒரு "ஆன்மீகவாதி" என்றும் கோலாப்பூர் ககங்கிரி மகாராஜை பின்பற்றுபவர் என்று கூறுகிறார்.[4]
இவர் இந்து கோயில்களில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டது அல்லாமல் பிற சமய வழிபாட்டு இடங்களிலும் இதை விரிவுபடுத்தினார். 2016 ஆம் ஆண்டு ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழைய அனுமதிக்கவேண்டும் என்று கோரி போராடினார். அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால் தர்காவில் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.