திறந்த ஆவணக தகவல் முறைமை

திறந்த ஆவணக தகவல் முறைமை (ஆங்கிலம்: Open Archival Information System அல்லது OAIS) என்பது ஆவணகப்படுத்தல் செயற்பாடுகளை நெறிப்படுத்த பயன்படும் ஒரு குறிப்பு மாதிரி (reference model) அல்லது சட்டகம் ஆகும். இது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல நூறு ஆவணகங்களால் பயன்படுத்தப்படும் குறிப்பு மாதிரி ஆகும். திறந்த ஆவணக தகவல் முறைமை என்பது தகவலைப் பெற்றுப் பாதுகாத்து, ஒரு குறிப்பிட்ட பயனர் சமூகத்திடம் பரப்பும் பொறுப்பில் இருக்கும் ஆவணகம், அதன் நபர்கள் மற்று முறைமைகளைக் குறிக்கின்றது.[1]

திறந்த ஆவணக தகவல் முறைமை பல்வேறு நிறுவனங்களில் இருந்து தகவல்களைப் பெற்றுப் பாதுகாக்கும் மரபுவழி ஆவணகத்துக்கான சட்டகமாக முதன்மையாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், எண்ணிமப் பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் இதனைப் பயன்படுத்துகின்றன.

ஆவணகத்தின் பொறுப்புக்கள்

[தொகு]

தி.ஆ.த.மு வகை ஆவணகம் பின்வரும் ஆகக் குறைந்த பொறுப்புக்களைக் கொண்டது.[2]

  • தகவல் ஆக்கர்களுடன் பேசி, தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்.
  • தொலைநோக்குப் பாதுகாப்புக்கு வேண்டிய கட்டுப்பாடுகளை, உரிமைகளைப் பெற்றுக்கொள்ளல்.
  • குறிப்பிட்ட பயனர் சமூகத்தை (Designated Community) கண்டறிதல்.
  • தகவல் ஆக்கர்களின் உதவி இல்லாமல் குறிப்பிட்ட பயனர் சமூகம் தகவலை விளங்கிக்கொள்ளுமா என்பதை உறுதிசெய்தல்.
  • ஆவணப்படுத்தப்பட்ட கொள்கைகளையும் செய்முறைகளையும் பின்பற்றி, அறிவார்ந்தவாரியாக எதிர்பார்க்ககூடிய இடர்களுக்கு எதிராக பாதுகாப்புச் செயற்பாடுகளைச் செய்தல். மெய்யுறுதிப்படுத்திய நகல்களாக தகவலை (as authorized copies of information) குறிப்பிட்ட பயனர் சமூகத்திடம் பரப்ப ஏதுவாக்கல், இந்த நகல்களில் இருந்து அசல் எதுவென கண்டுபிடிக்கக் கூடியதற்கான வசதிகளைச் செய்தல்.
  • குறிப்பிட்ட பயனர் சமூகத்திடம் பாதுகாக்கப்பட்ட தகவலைப் பரப்பல்.

ஆவணகத்தின் சூழல்

[தொகு]

தி.ஆ.த.மு ஆவணகத்தின் சூழல் நான்கு கூறுகளுக்கு இடையேயான ஊடாட்டத்தில் இருந்து வழிவருகின்றது: ஆக்கர்கள்/உற்பத்தியாளர்கள், நுகர்வோர், மேலாண்மையாளர், ஆவணகம்.

  • ஆக்கர்கள் - ஆவணகம் பாதுகாக்கும் தகவலைக் ஆக்குபவர்கள்.
  • நுகர்வோர் - ஆவணகத்தில் பாதுகாக்கப்படும் தகவலைப் பயன்படுத்துபவர்கள். குறிப்பிட்ட பயனர் சமூகம் ஆவணகத்தில் உள்ள தகவலைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு சிறப்பு நுகர்வோர் வகை.
  • மேலாண்மையாளர் - உயர் நிலையில் கொள்கை வகுத்தல், நிதி வழங்குதல் செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்பு. இது அன்றாட நிர்வாகச் செயற்பாடுகளில் ஈடுபடாது.
  • ஆவணகம் - தகவலைப் பாதுகாத்து நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் நிறுவனம்.

தகவல் மாதிரி

[தொகு]

தகவல் என்பது எந்த ஒரு வடிவத்திலும் இருக்கக்கூடிய பகிரக்கூடிய அறிவு என எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது பெளதீக பொருளாகவோ(physical object), எண்ணிமப் பொருளாகவோ(digital object) இருக்கலாம். இரண்டும் பொதுவாக தரவுப் பொருள்(data object) என்று அழைக்கப்படுகின்றன.

ஒரு தரவுப் பொருளின் தகவலை குறிப்பிட்ட பயனர் சமூகம் அந்தத் தரவுப் பொருளுடன் தொடர்புபட்ட சார்புத் தகவலைப்(representation information) பயன்படுத்தியும், அச் சமூகத்தின் அறிவுத் தளத்தினைப்(knowledge base) பயன்படுத்தியும் புரிந்துகொள்ளும். எ.கா யாவா நிரலாளர்களுக்கான தரவுப் பொருட்களைப் பற்றிப் புரிந்துகொள்ள யாவா நிரலாளர்கள் யாவா நிரலைப் புரிந்துகொள்வதற்கான அறிவுத் தளத்தைக் கொண்டு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.[3]

ஒரு தகவல் பொதி பின்வரும் தகவல் பொருட்களைக் கொண்டு இருக்கும்:

  • உள்ளடக்கத் தகவல்: தரவு பொருள், சார்புத் தகவல்கள் (data object and its representation information)
  • பாதுகாப்பு விபரிப்புத் தகவல்: உள்ளடக்கத் தகவலைப் பாதுகாக்கத் தேவையான தகவல் (எ.கா தோற்றமுதல் மற்றும் உரிமைகள் தொடர்பான தகவல்கள், தனித்துவ அடையாளம் காட்டிகள், சரிகாண்தொகை)
  • பொதித் தகவல்: தகவல் பொதியின் கூறுகளைத் தொகுத்து வைப்பது.
  • விபரிப்புத் தகவல்: ஆவணக தேடல் கண்டுபிடிப்புக்குப் பயன்படக்கூடிய பொருளைப் பற்றிய மீதரவுகள்.

தி.ஆ.த.மு மூன்று வகையான தகவல் பொருட்களை அடையாளம் காண்கிறது:

  • சமர்பிப்பு தகவல் பொதி - Submission Information Package (SIP) - தகவல் உற்பத்தியாளரிடம் இருந்து ஆவணகத்துக்கு வழங்கப்படுவது.
  • ஆவணக தகவல் பொதி - Archive Information Package (AIP) - ஆவணகத்தால் பாதுகாக்கப்படும் தகவல் பொதி.
  • பரப்பல் தகவல் பொதி - Dissemination Information Package (DIP) - நுகர்வோருக்கு ஆவணகத்தால் வழங்கப்படும் தகவல் பொதி.

செயற்பாட்டு மாதிரி

[தொகு]

தி.ஆ.த.மு ஆவணகம் ஐந்து செயற்பாட்டுக் கூறுகளை விபரிக்கின்றது.

  • உள்வாங்கும் செயற்பாடு (Ingest)- உற்பத்தியாளரிடம் இருந்து தகவலைப் பெற்று (சமர்பிப்பு தகவல் பொதி) சேமிப்புக்கு ஏற்ற வகையில் ஆவணக தகவல் பொதியாக மாற்றியமைக்கின்றது.
  • ஆவணகச் சேமிப்பு (Archival Storage) - ஆவணக தகவல் பொதிகளை சேமித்தல், மேலாண்மை செய்தல், கண்டுபிடித்தல் அல்லது மீட்டெடுத்தல்.
  • தரவு மேலாண்மை (Data Management) - ஆவணக தகவல் பொதியில் இருக்கும் விபரிப்புத் தகவலையும், ஆவணகத்துக்குப் பயன்படும் முறைமைத் தகவலையும் ஒருங்கிணைக்கின்றது. அறிக்கையளித்தல் மற்றும் பிற செயற்பாடுகளுக்கு உதவுதல்.
  • நிர்வாகம் (Administration) - சமர்பிப்பு ஒப்பந்தங்கள், கொள்கையாக்கம், சீர்தர உருவாக்கம். குறிப்பிட்ட பயனர் சமூகத்துக்கும் மேலாண்மைக்கும் இடையேயா ஒர் இடைமுகமாக செயற்படுகிறது.
  • அணுக்கம் (Access) - ஆவணகத்தில் இருந்து பயனர் தகவலைப் பெறுவதற்கான பயனர் இடைமுகம். ஆவணகத்தில் இருந்து பரப்பல் தகவல் பொதியைப் பெற்று அல்லது அணுகி, பயனுக்குக் கொண்டுசெல்லல்.

செயற் பரப்புக்குப் அப்பால்

[தொகு]

தி.ஆ.த.மு உள்வாங்கும் செயற்பாடுக்கு முன்னரான (Pre-Ingest) செயற்பாடுகளை விபரிக்கவில்லை.

ஆதரவு தரும் மென்பொருட்கள்

[தொகு]
  • ஆர்க்கைவ்மற்ரிக்கா - Archivematica

மேற்கோள்கள்

[தொகு]
  1. "REFERENCE MODEL FOR AN OPEN ARCHIVAL INFORMATION SYSTEM (OAIS)" (PDF). Consultative Committee for Space Data Systems (CCSDS). சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2015.
  2. Brian Lavoie (2000). "Meeting the challenges of digital preservation: The OAIS reference model". OCLC Research. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2016.
  3. Brian Lavoie (2000). "Meeting the challenges of digital preservation: The OAIS reference model". OCLC Research. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]