தீப் சென்குப்தா Deep Sengupta | |
---|---|
![]() 2014 இல் தீப் சென்குப்தா | |
நாடு | இந்தியா |
பட்டம் | கிராண்டு மாசுட்டர் |
பிடே தரவுகோள் | 2520 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2594 |
தீப் சென்குப்தா (Deep Sengupta) இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1988 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் 22 ஆவது கிராண்டு மாசுட்டரான[1] இவர் தற்பொழுது கொல்கத்தாவின் காசுபா என்ற பகுதியில் வசிக்கிறார்.
மேற்கு சிங்பும் மாவட்டத்திலுள்ள சக்ரதர் சதுரங்க அகாதெமியில் சென்குப்தாவின் சதுரங்க வாழ்க்கை தொடங்கியது[2]. 2000 ஆம் ஆண்டில் உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியின் சிறுவர் பிரிவில் வெற்றி பெற்றார்.
2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் கொச்சி நகரில் நடைபெற்ற உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் தன்னுடைய முதலாவது கிராண்டு மாசுட்டர் தகுதிநிலையை அடைந்தார். 2005 ஆம் ஆண்டு இந்திய இளையோர் சதுரங்கப் பட்டத்தை வென்றார்[3].
2009 ஆம் ஆண்டில் வலிமையான ஆட்டக்காரர் எதிர்த்து விளையாடி தோய்பெரி கோப்பையை வென்று தன்னுடைய இரண்டாவது கிராண்டு மாசுட்டர் தகுதிநிலையை அடைந்தார். 2010 இல் நடைபெற்ற போட்டி ஒன்றில் திக்ரன் காராமியான் மற்றும் வாதிம் மாலாகாட்கோ ஆகியோருடன் இணைந்து உயர்ந்த தரநிலையைப் பகிர்ந்துகொண்டு கிராண்ட் மாசுட்டர் தகுதியை அடைந்தார்[4]. 2010/11 ஆம் ஆண்டிற்கான ஆர்கயாதிப் தாசுடன் சமநிலை முறிவு ஆட்டத்தில் வெற்றியடைந்து ஏசுட்டிங்சு மாசுட்டர்கள் சதுரங்கப் போட்டியில் முதலிடம் பிடித்தார்[5]. 2011 இல் செக் குடியரசில் நடைபெற்ற சதுரங்கத் திருவிழாவில் மேக்சிம் துரோவ், வியாசெசுலாவ் சாகார்ட்சோ, கிறிசுட்டியன் சிசாபோ, லெவ் கட்மான், டேவிட்டு பெர்சிசெசு, சாமுவேல் சேங்லாண்டு ஆகியோருடன் 2-7 இடங்களைப் பகிர்ந்து கொண்டார். 2012 இல் நடைபெற்ற இந்திய சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் 4 ஆவது இடத்தைப் பிடித்தார். கிளாசுகோவில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியை வென்று அப்போட்டியில் முதலிடம் பிடித்தார். இப்போட்டியில் சமநிலை முறிவு போட்டியில் அரவிந் சிதம்பரத்தை வீழ்த்தி இவ்வெற்றியை அடைந்தார். இருவரும் இப்போட்டியில் 7.5/9 புள்ளிகள் எடுத்தனர்[6]. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏசுட்டிங்சு மாசுட்டர்கள் சதுரங்கப் போட்டியில் 7/9 புள்ளிகள் எடுத்து தனிநபராக முதலிடம் பிடித்தார். இவ்வெற்றி இரண்டாவது முறையாக இவருக்கு கோலோம்பெக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தது[7].
இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் சென்குப்தா பணிபுரிகிறார். மூத்த சகோதரர் பிரதிக் சென்குப்தாவும் ஒரு சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார்.