துசார் காந்தி (Tushar Arun Gandhi சனவரி 7, 1960) என்பவர் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பெயரனும், காந்தி அடிகளின் மகன் மணிலால் காந்தியின் பெயரனும், அருண் காந்தியின் மகனும் ஆவார். 2005 ஆம் ஆண்டில் தண்டி யாத்திரை என்ற மகாத்மா காந்தி நிகழ்த்திய அறப்போராட்டம் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மீண்டும் அந்நிகழ்வை நடத்திக்காட்டினார்.[1]
சிச்ரி- ஐஎஸ்பி என்ற நிறுவனத்துக்கு நல்லெண்ணத் தூதராக இருந்தார். மகாத்மா காந்தி அறக்கட்டளையை நிருவாகம் செய்து வருகிறார். ஆத்திரேலியா இந்தியா கிராம முன்னேற்ற அறக்கட்டளை தலைவராக உள்ளார். ஐக்கிய நாடு அவையின் உறுப்பாகச் செயல்படும் இம்சாம் என்னும் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார். இவ்வமைப்பு குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யப் பாடுபடும் அமைப்பு ஆகும்.
ஒரு வணிக நிறுவனத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வணிக விளம்பரம் செய்ய துசார் முயன்றபோது அதற்கு எதிர்ப்பு வலுத்த காரணத்தினால் அம்முயற்சியைக் கைவிட்டார்.
'காந்தியைக் கொல்வோம்' என்ற ஓர் ஆங்கில நூலில் காந்தி சுடப்பட்டு கொல்லப்பட்ட சூழ்நிலைகளையும் காரணங்களையும் விரிவாக எழுதியுள்ளார்.[2]