சிங்கப்பூர் வரலாறு |
---|
சிங்கப்பூர் |
துமாசிக் அல்லது தெமாசிக் (மலாய் மொழி: Temasek; சாவகம்: ꧋ꦡꦸꦩꦯꦶꦑ꧀꧈; ஆங்கிலம்: Temasek; ஜாவி: تماسيق; சீனம்: 單馬錫; பின்யின்: Dānmǎxí) என்பது சிங்கப்பூரின் பழைய பெயராகும். அத்துடன் நவீன சிங்கப்பூரில் ஒரு தொடக்கக் காலக் குடியேற்றத்தின் பெயரையும் குறிப்பிடுகின்றது.
தொடக்கக் கால மலாய் மற்றும் ஜாவானிய இலக்கியங்களில் இந்தப் பெயர் காணப் படுகிறது. மேலும் இந்தப் பெயர் யுவான் (Yuan) மற்றும் மிங் (Ming) சீன ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
துமாசிக் எனும் பெயரின் தோற்றம் பற்றி சரியாகத் தெரியவில்லை. நிச்சயமற்றதாக உள்ளது. ஆனால் துமாசிக் எனும் சொல் "ஏரி" அல்லது "கடல்" என்பதைக் குறிக்கும் தாசிக் (Tasek) எனும் மலாய் வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. மேலும் "கடலால் சூழப்பட்ட இடம்"; அல்லது கடல் நகரம் (Sea Town) என்றும் பொருள் படுகிறது.[1]
1330-ஆம் ஆண்டில், சீனப் பயணி வாங் தயான் (Wang Dayuan) சிங்கப்பூர் தீவுக்கு பயணம் செய்தார். சிங்கப்பூருக்கு தான்மாக்ஸி (Danmaxi) என்று பெயர் சூட்டி இருக்கிறார். அந்தச் சீனப் பயணி டாயோய் ஷிலீ (Daoyi Zhilüe) எனும் வரலாற்று நூல் எழுதி இருக்கிறார். அதில் சிங்கப்பூரின் இரண்டு தனித்துவமான குடியேற்றங்களை விவரித்து இருக்கிறார்.
முதலாவது லாங் யா மென் (Long Ya Men) குடியேற்றம். இரண்டாவது பான் ஜூ (Ban Zu) குடியேற்றம். இந்தக் குடியேற்றங்கள் சிங்கப்பூர் மேரு மலையில் இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பான் ஜூ மக்கள் நேர்மையானவர்கள் என்று வர்ணிக்கப்பட்டனர். அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் தலைமுடியை கட்டையாக வைத்து இருந்தார்கள். தங்கம் கலந்த சந்தன தலைப்பாகையை அணிந்து இருந்தார்கள். அவர்கள் சிவப்பு நிற துணிமணிகளை அணிந்து இருந்ததாகவும் கூறப் படுகிறது.
1365-இல் எழுதப்பட்ட நகரகிரேதகமா (Nagarakretagama) எனும் பழைய ஜாவானியக் காவியக் கவிதையில் துமாசிக் (Tumasik) எனும் பெயர் தோன்றுகிறது. 1330-ஆம் ஆண்டில் துமாசிக் தீவுக்குச் சென்ற சீனப் பயணி வாங் தயுவான் (Wang Dayuan), டெமாசெக் (Temasek) எனும் டான்மாக்ஸி (Danmaxi) என்ற மலாய் குடியேற்றத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்.[2]
மார்கோ போலோவின் பயணப் பதிப்பில், மலையூர் தீவு (Malayur) இராச்சியம் தொடர்பாக சியாமாசி (Chiamassie) எனும் பெயர் தெமாசிக் (Temasek) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[2] 14 ஆம் நூற்றாண்டின் வியட்நாமிய பதிவுகளில் சச் மா டிச் (Sach Ma Tich) என்றும் தெமாசிக் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.[3]
கி.பி 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிங்கபுரம் (Singha Pura) (சமசுகிருதம்: சிங்க நகரம்) என மாறியது. நீல உத்தமன் 1299-இல் இந்தத் தீவுக்குச் சென்ற போது சிங்கம் என்று நினைத்த ஒரு விலங்கைப் பார்த்த பின்னர், சிங்கபுரம் எனும் பெயர் சூட்டப் பட்டதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் தொடக்கக் கால வரலாறு, பெரும்பாலும் கட்டுக்கதைகள் மற்றும் புராணக் கதைகளால் மறைக்கப்பட்டு இருந்தாலும், தொல்பொருள் சான்றுகள் மற்றும் பயணிகளினால் எழுதப்பட்ட குறிப்புகளில் இருந்து சில முடிவுகளை எடுக்க முடியும்.
14-ஆம் நூற்றாண்டில் அங்கு நகரமயமாக்கப்பட்ட ஒரு குடியேற்றம் இருந்ததாகத் தொல்லியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்த நகரம் ஒரு பெரிய மதில் மற்றும் அகழியால் சூழப்பட்டு இருந்தது.[4]
அங்கு பல கட்டடங்கள் கல் மற்றும் செங்கல் அடித்தளங்களால் கட்டப்பட்டு இருந்தன. பழைய மண்பாண்டங்கள், நாணயங்கள், நகைகள் மற்றும் பிற கலைப்பொருட்களின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.[5]
இவற்றில் பல கலைப் பொருட்கள் சீனா, இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இவை இந்த நகரம் ஒரு பிராந்திய வர்த்தக மையமாக இருந்து இருக்கலாம் என்பதற்குச் சான்றாக அமைகின்றன. அந்தக் காலக் கட்டத்தில், பெரிய பட்டுப் பாதையின் (Silk route) ஒரு பகுதியான நீர்வழிப் பாதை துமாசிக் வழியாகச் சென்றது.
1926-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மேரு மலையின் உச்சியில் ஒரு நீர் தேக்கம் கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டினார்கள். அப்போது, சுமார் 3 மீட்டர் ஆழத்தில் அதிசயமான சில தங்க நவரத்தின ஆபரணங்களைக் கட்டுமானத் தொழிலாளர்கள் கண்டு எடுத்தார்கள்.[6]
அனைத்துமே 14-ஆம் நூற்றாண்டின் இந்திய ஜாவானிய பாணியிலான தங்க ஆபரணங்கள். அந்த நகைகள் 700 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு புதையுண்டு போய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தங்க மோதிரங்கள்; காதணிகள்; உடைகள் மீது பயன்படுத்தப்படும் தங்கச் சங்கிலிகள்; சிறிய இரத்தினங்களைக் கொண்ட வளையல்கள்; கால் கொலுசுகள்; சீனா நாட்டுப் பீங்கான் களையங்கள்; மண் பாண்டங்கள் மற்றும் அழகிய கண்ணாடித் துண்டுகள் கண்டுபிடிக்கப் பட்டன.[6]
அவற்றில் ஒரு நகை, இந்துக்களின் தேவதைகளில் ஒன்றான காளி துர்கா தேவியின் தலை வடிவத்தைக் கொண்ட ஆயுதச் சங்கிலி. பொதுவாக அத்தகைய சிற்பக் கலை ஆபரணங்களைச் சுமத்திரா; ஜாவா தீவுகளில் முன்பு தோண்டி எடுத்து இருக்கிறார்கள்.[7]
1984-ஆம் ஆண்டில், ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் கென்னிங் மலையின் (Fort Canning Hill) ரகசியங்களைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கென்னிங் மலையின் உச்சியிலும் அதன் சரிவுப் பகுதிகளிலும் சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம் ஆய்வுகள் செய்தது.
அந்த ஆய்வுகள் சிங்கப்பூர் கென்னிங் மலை உச்சியில் ஓர் அரண்மனை இருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றன. ஓர் அரசப் பரம்பரையினர் வாழ்ந்ததற்கான தடயங்களையும் உறுதி செய்தன. ஐந்து சந்ததிகளைச் சார்ந்த அரசர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகளையும் முன் வைத்தன.[8]
1823-ஆம் ஆண்டில் ஜான் கிராபர்ட் (John Crawfurd) என்பவர் சிங்கப்பூரின் ஆளுநராக இருந்தார். அவர் இந்திய தீவுக் கூட்டத்தின் வரலாறு (History of the Indian Archipelago) எனும் வரலாற்று நூலை எழுதி இருக்கிறார். அதில் கென்னிங் மலையைப் பற்றி சொல்லி இருக்கிறார்.
இடிபாடுகளுக்கு இடையில் ஒரு பழங்கால பழத்தோட்டம். அங்கே மண்பாண்டங்கள் மற்றும் சீன நாணயங்களின் துண்டுகள் கிடைத்தன. அவற்றில் 10-ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சி செய்த சோங் வம்சாவளியினரின் (Song Dynasty) நாணயங்களும் கிடைத்தன என எழுதி இருக்கிறார்.[8]