துவாரகநாத் கங்குலி | |
---|---|
![]() | |
பிறப்பு | 20 ஏப்ரல் 1844, மகுர்காந்தா கிராமம்,பிக்ரம்பூர், [டாக்கா]], வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 27 ஜூன் 1898, கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (வயது 54) |
பணி | கல்வியாளர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி |
வாழ்க்கைத் துணை | பாபுசுந்தரி தேவி, கடம்பினி கங்கூலி |
துவாரகநாத் கங்கோபாத்யாய் (Dwarkanath Gangopadhyay) (துவாரகநாத் கங்குலி என்றும் அழைக்கப்படுகிறார்) (1844 ஏப்ரல் 20 - 27 ஜூன் 1898 ) பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் ஒரு பிரம்ம சீர்திருத்தவாதியாக இருந்தார். சமுதாயத்தின் அறிவொளிக்கும், பெண்களின் விடுதலைக்கும் இவர் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் தனது முழு வாழ்க்கையையும் பெண்கள் விடுதலைக்காக அர்ப்பணித்தார். அரசியல், சமூக சேவைகள் போன்ற வாழ்க்கையின் ஒவ்வொரு நடைப்பயணத்திலும் பங்கேற்க அவர்களை ஊக்குவித்தார். மேலும் அவர்களுடைய சொந்த அமைப்புகளை உருவாக்க அவர்களுக்கு உதவினார்.[1] இவர் முதல் பயிற்சி பெற்ற இந்தியப் பெண் மருத்துவர் கடம்பினி கங்குலியின் கணவர் ஆவார்.
தனது முதல் மனைவி பாபுசுந்தரி தேவி இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1883இல், பிரித்தானிய இந்தியாவில் முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவரான கடம்பினி கங்குலி என்பவரை மணந்தார். கடம்பினி பின்னர் முதல் பயிற்சி பெற்ற இந்தியப் பெண் மருத்துவர் ஆனார்.[2] [3]
இவரது இரண்டு திருமணங்களிலிருந்தும் இவருக்கு பத்து குழந்தைகள் இருந்தன. இவரது முதல் மனைவியின் மூத்த மகள் பித்முகி, பெங்காலி எழுத்தாளரும், ஓவியருமான உபேந்திரகிஷோர் ராய் சௌத்ரி என்பவரை மணந்தார்.[4] இவரது இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த ஜோதிர்மயீ கங்கோபத்யாய், புகழ்பெற்ற கல்வியாளராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும் இருந்தார். பெங்காலி கவிஞரும், கதை எழுத்தாளரும் இவரது மருமகனுமான சுகுமார் ராயின் சமகாலத்தவரான இவரது மகன் பிரபாத் சந்திர கங்குலி பத்திரிகைத் துறையில் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார். மேலும், சுகுமாரின் 'திங்கள் சங்கத்தில்' உறுப்பினராக இருந்தார்.[4]
மே 1869 இல், டாக்காவின் பரித்பூரில் உள்ள லான்சிங் என்ற கிராமத்திலிருந்து கங்குலி 'அபாலபந்தாப்' ('அபாலாவின் பந்தாப்'அதாவது 'பலவீனமான பாலினத்தின் நண்பர்') என்ற வார இதழைத் தொடங்கினார். இந்த பத்திரிகையை அமெரிக்க வரலாற்றாசிரியர் டேவிட் கோப், பெண்களின் விடுதலைக்காக மட்டுமே அர்ப்பணித்த உலகின் முதல் பத்திரிகை என்று குறிப்பிட்டுள்ளார்.[5] இது சமூகத்தில் பெண்கள் உரிமைகளின் செய்தித் தொடர்பாளராக இவருக்கு அங்கீகாரம் அளித்தது.[6] பெண்களின் சுரண்டல் மற்றும் தீவிர துன்பங்கள் தொடர்பான வழக்குகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு மனிதாபிமான பத்திரிகையாளரின் பங்கை கங்குலி வகித்தார்.[7]
பலதார மணம், மதவெறி, பர்தா , குழந்தைத் திருமணத்திற்கு எதிராக இவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இவர் பெண்கள் உடையில் மாற்றங்களை அறிமுகப்படுத்த முயன்றார். மேலும், பெண்களுக்கான இசைப் பள்ளியையும் நிறுவினார்.
இவை அனைத்தும் இந்தியாவின் பிரம்ம சமாஜத்தில் பிளவு ஏற்படுவதற்கு வழிவகுத்தது, இது இறுதியில் 1878 இல் சதாரன் பிரம்ம சமாஜம் என உருவாவதற்கு வழிவகுத்தது. கங்குலி சதாரன் பிரம்ம சமாஜத்தின் செயலாளராக பல முறை பணியாற்றினார்.[8]
1876 ஆம் ஆண்டில் சுரேந்திரநாத் பானர்ஜி, ஆனந்தமோகன் போசு ஆகியோரால் பிரித்தானிய இந்தியாவில் முதல் தேசியவாத அமைப்பான இந்தியச் சங்கம் நிறுவப்பட்டது.[9] இந்த சங்கத்தின் நோக்கங்கள் "மக்களின் அரசியல், அறிவுசார் மற்றும் பொருள் முன்னேற்றத்தை ஒவ்வொரு நியாயமான வழிகளிலும் ஊக்குவித்தல்" ஆகியன. கங்குலி இந்த அமைப்பின் செயல்பாட்டுடன் தீவிரமாக தொடர்பிலிருந்தர். மேலும், அமைப்பின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.[10]
1885 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட பின்னர், இந்திய சங்கம் அதன் முக்கியத்துவத்தை இழந்தது. இந்த நேரத்தில், துவாரகநாத் தேசிய அளவிலான அரசியலில் பெண்கள் பங்கேற்பதை இயக்கும் ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். எனவே காங்கிரஸ் அமர்வுகளில் பெண்கள் பிரதிநிதிகளை அனுமதித்தது. 1889 ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த காங்கிரசின் ஐந்தாவது அமர்வில் 10 புகழ்பெற்ற பெண்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் கடம்பினி கங்குலி (கங்குலியின் மனைவி), சொர்ணகுமாரி தேவி (ஜானகிநாத் கோஷலின் மனைவியும், தேவேந்திரநாத் தாகூரின் மகளும் இரவீந்திரநாத் தாகூரின் சகோதரியுமாவார்) ஆகியோர் அடங்குவர்.[2]