தூபாராமய (Thuparamaya) இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடம் ஆகும். அசோகப் பேரரசரின் மகனும் பௌத்த துறவியுமான மஹிந்த தேரர் இலங்கையில் தேரவாத புத்த சமயத்தையும், அது சார்ந்த சைத்திய வணக்கத்தையும் அறிமுகப்படுத்தினார். இவருடைய வேண்டுகோளின்படி இலங்கை அரசனான தேவாநாம்பியதிஸ்ஸவால் கட்டப்பட்டதே தூபாராமய என்னும் இந்தத் தாதுகோபுரம். இதனுள் கௌதம புத்தரின் எலும்பு எச்சம் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இலங்கையில் புத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்டப்பட்ட முதல் தாதுகோபுரம் இதுவே எனக் கருதப்படுகின்றது.[1]
தொடக்கத்தில் இது நெற்குவியலின் வடிவில் கட்டப்பட்டது. காலத்துக்குக் காலம் அழிவுக்கு உட்பட்டது. இலங்கை அரசனான இரண்டாம் அக்கபோதி காலத்தில் முற்றாகவே அழிவுக்கு உள்ளான இதை அரசன் திருத்தி அமைத்தான். இன்று காணப்படும் தூபாராமய, கி.பி 1862 ஆம் ஆண்டின் மீளமைப்புக் கட்டுமானம் ஆகும். இவ்வாறு காலத்துக்குக் காலம் நடைபெற்ற மீளமைப்புக் கட்டுமானங்களின் முடிவில், இன்று இருக்கும் தாதுகோபுரத்தின் அடிப் பகுதியின் விட்டம் 18 மீட்டர் (59 அடி) ஆகும். உயரம், 3.45 மீட்டர் (11 அடி 4 அங்குலம்). இது 50.1 மீட்டர் (164 அடி 6 அங்குலம்) விட்டம் கொண்ட வட்ட வடிவமான மேடையொன்றின் மையத்தில் அமைந்துள்ளது. நிலத்திலிருந்து மேடைக்குச் செல்ல நாற்புறமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடையில் தாதுகோபுரத்தைச் சுற்றி இரண்டு வட்ட வடிவ வரிசைகளில் கல் தூண்கள் காணப்படுகின்றன. இத் தூண்கள், பழைய காலத்தில், தாதுகோபுரத்தை மூடிக் கூரையோடு கூடிய கட்டிடம் இருந்ததற்கான சான்று ஆகும். மரத்தாலான இக் கூரை காலப்போக்கில் அழிந்து விட்டதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.