தூய லெபனான் அன்னை Our Lady of Lebanon | |
---|---|
லெபனான் இராணியும் புரவலரும் | |
ஏற்கும் சபை/சமயங்கள் | இலத்தீன் கத்தோலிக்கம் கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள் மரோனைட்டு திருச்சபை மெல்கைட் கிரேக்கத் திருச்சபை |
முக்கிய திருத்தலங்கள் | தூய லெபனான் அன்னை திருத்தலம், ஹரிசா, லெபனான் |
திருவிழா | மே மாதத்தின் 1-ஆம் ஞாயிறு |
சித்தரிக்கப்படும் வகை | நீட்டிய கரங்களுடன், வெண்கல கிரீடத்துடன் அன்னை மரியாள் |
பாதுகாவல் | லெபனான், லெபனான் மக்கள் |
தூய லெபனான் அன்னை திருத்தலம் (Shrine of Our Lady of Lebanon) அல்லது புனித ஹரிசா அன்னை (Our Lady of Harissa, அரபி: سيدة لبنان, Sayyidat Lubnān) என்பது லெபனானில் உள்ள ஹரிசா கிராமத்தில் உள்ள ஒரு மரியன்னை ஆலயம் மற்றும் புனித யாத்திரை தளமாகும்.[1][2][3]
இந்த ஆலயம் மரோனைட் திருச்சபை முதுவருக்கு சொந்தமானது, அவர்கள் 1904 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து அதன் நிர்வாகத்தை மரோனைட் லெபனான் மிஷனரிகளின் சபைக்கும், இயேசு சபையின் லூசியன் காட்டினுக்கும் ஒப்படைத்தனர்; என்பது கிறிஸ்டியன் டவுட்டல் (செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் லெபனான் வரலாற்றாசிரியர்) கருத்து. இயேசுவின் தாயான மரியாவை கௌரவிக்கும் உலகின் மிக முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆலயம் 15 டன் எடையுள்ள பிரம்மாண்டமான வெண்கல சிலையால் சிறப்பிக்கப்படுகிறது. இது 8.5 மீ உயரமும், ஐந்து மீட்டர் விட்டமும் கொண்டது. கன்னி மரியாள் பெய்ரூட் நகரை நோக்கி கைகளை நீட்டியப்படி இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தூய லெபனான் அன்னை திருத்தலம் உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான விசுவாசமான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை ஈர்க்கிறது. 1954 ஆம் ஆண்டானது 50 வது ஜூபிலியும் கத்தோலிக்க கோட்பாடானா மரியன்னையின் மாசற்ற கருத்தரிப்பு (மரியாவின் அமலாவுற்பவம்) நிறுவப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவாகும். இந்தக் கொண்டாட்டங்களின் போது, திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் தன் பிரதிநிதியான கர்தினால் ஆஞ்செலோ ரொன்காலி (பின்னாளில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் ஆனார்) அவர்களை லெபனானுக்கு அனுப்பினார். திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1997 இல் தூய லெபனான் அன்னை திருத்தலத்திற்கு சென்றார்.
நிர்வாகத்திற்குப் பொறுப்பான மரோனைட் லெபனான் மிஷனரிகளின் சபை, அனைத்து உள்ளூர் தேவாலயங்கள், கிறிஸ்தவ சமூகங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க இயக்கங்களிடையே உறவுகளை வலுப்படுத்துவதில் சிறந்தமுறையில் செயல்படுகிறது.
லெபனான் கிறிஸ்தவர்களும், ட்ரூஸ் மற்றும் இஸ்லாமியர்களும் இயேசுவின் தாய் மரியா மீது தனி பக்தி கொண்டுள்ளனர். திருத்தல கட்டுமானம் நிறைவுற்ற 1908 ஆம் ஆண்டில் அந்தியோக் மரோனைட் முதுபெரும் ஆயர்தந்தை மரியாவை "லெபனோனின் ராணி" என்று அறிவித்தார். ஜுனியா விரிகுடாவை பார்க்கும் இடத்தில் உள்ளதால், இந்த ஆலயம் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது, அங்கு சுற்றுலாப் பயணிகள் ஜுனியா நகரத்திலிருந்து ஹரிசா வரை டெலிபோரிக் என்ற கோண்டோலா லிப்ட்டில் (ரோபோ கார்) செல்கிறார்கள்.
தூய லெபனான் அன்னையின் சிலை என்பது வெண்கலத்தால் செய்யப்பட்டு வெள்ளை வர்ணம் பூசப்பட்ட பிரெஞ்சு தயாரிப்பான, 13 டன் எடைகொண்ட கன்னி மரியாவின் சிலையாகும். இது 1907 ஆம் ஆண்டில் பெய்ரூட்டுக்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ள ஹரிசா கிராமத்தில் கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் ஒரு மலையின் உச்சியில் தூய லெபனான் அன்னையின் நினைவாக அமைக்கப்பட்டது. இந்த நிலத்தை யூசுப் கசென் என்பவர் நன்கொடையாக வழங்கினார். இது கல் அடித்தளத்தின் மேல் கூடியிருந்த ஏழு பிரிவுகளால் ஆனது, இது 64 மீ கீழ் சுற்றளவு, 12 மீ மேல் சுற்றளவு மற்றும் ஒட்டுமொத்த உயரம் 20 மீ ஆகியவற்றைக் கொண்டிருந்தது. சிலையின் உயரம் 8.50 மீ, அதன் விட்டம் 5.50 மீ. இந்த சிலை மற்றும் ஆலயம் 1908 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது, மேலும் இது ஒரு முக்கிய யாத்திரை தலமாக மாறியுள்ளது. இந்த சிலையை பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பிரெஞ்சு பெண் நன்கொடையாக வழங்கினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1997ம் ஆண்டு மே 10ம் தேதி லெபனானுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். புதிய பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார். டிசம்பர் 8, 1998 அன்று, உலக நோயுற்றோர் நாள் 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 நாள் அன்று ஹரிசாவில் உள்ள தூய லெபனான் அன்னை திருத்தலத்தில் கொண்டாடப்படும் என்று வத்திக்கான் அறிவித்தது. லெபனான் மக்களின் வேதனையான துயரங்களைக் உற்றுநோக்கும் லெபனான் அன்னை, உலகில் துன்புறும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் செபித்தார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் லெபனான் மற்றும் காசாவில் அமைதிக்கான அழைப்பை ஜனவரி 28, 2007 அன்று தூய லெபனான் அன்னையின் பாதுகாப்பை வேண்டுதல் ஜெபத்தின் மூலம் தொடங்கினார். "லெபனானில் உள்ள கிறிஸ்தவர்கள், பல்வேறு சமூகங்களுக்கிடையேயான உண்மையான உரையாடலை ஊக்குவிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், மேலும் ஒவ்வொருவரிடமும் தூய லெபனான் அன்னையின் பாதுகாப்பை நான் கோருகிறேன்" என்றார்.
லெபனானுக்கான அப்போஸ்தலிக்க நுன்சியோ (திருத்தந்தையின் தூதர்) மற்றும் நான்கு கத்தோலிக்க கீழைத்திருச்சபைகளின் முதுவர் ஆயர்தந்தைகளின் இருப்பிடம் லெபனான் அன்னையின் ஆலயத்திற்கு அருகில் உள்ளன.
33°58′54″N 35°39′05″E / 33.98167°N 35.65139°E