தெபோரா பிருடு (Deborah Byrd) (பிறப்பு: மார்ச்சு 1, 1951, சான் அந்தோனியோ, டெக்சாசு) ஓர் அமெரிக்க அறிவியல் இதழியலாளர் ஆவார். இவர் பன்னாட்டு புவி, வான் வானொலித் தொடரின் செயல் இயக்குநரும் புரவலரும் ஆவார்.
இவர் விண்மீன் நாள் எனும் வானியலுக்கான வானொலிக்காட்சித் தொடரைப் படைத்து 1978 இல் இருந்து வெளியிட்டவர் ஆவார்.[1] 1991 இல் இவர் ஜோயல் பிளாக்குடன் விண்மீன் நாளை விட்டு வெளியேறி, புவி, வான் வானியல் வானொலித்தொடரை படைத்து வெளியிட்டு அதன் புரவலரானார்.[2] இது அறிவியல் பற்றி 90 நொடி நேர வானொலிப் பரப்புரைகளின் தொடராகும்.
இவர் ஒலிபரப்பு, அறிவியல் குமுகங்களில் இருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில் 3505 பிருடு எனும் சிறுகோள் இவர் பெயரைத் தாங்கியிருத்தலும் ஒன்றாகும். இவர் பசிபிக் வானியல் கழகத்தின் கிளம்ப்கே-இராபர்ட்சு விருதை அதன் தொடக்கத்திலேயே பெற்றவர் ஆவார். இவரது புவி, வான் வானொலிக்காட்சித் தொடர் அமெரிக்கத் தேசிய அரிவியல் அறக்கட்டளையின் பொதுப்பணிச் சேவை விருதை "உலகளாவிய மக்கள் பரப்புக்கு ஆராய்ச்சி, அன்றாட அறிவியலைக் கொண்டுசென்றதற்காக" 2003 இல் பெற்றது.[3] இவர் 2011 இல் கலை, அறிவியல் கல்லூரிகளின் மன்றம் கலை, அறிவியல் தொடர்பாடல் விருதைப் பெற்றார். இந்த விருது தனியருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ கலையையும் அறிவியலையும் திறம்பட கல்விவழி விளக்குவதற்காக வழங்கப்படுகிறது.[4]
இவர் வானியல் வார விழாவான டெக்சாசு ஆண்டு விண்மீன் விழாவை தோற்றுவித்தவர் ஆவார்.[5]