இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகத்தில் தெலாகா பத்து கல்வெட்டு | |
செய்பொருள் | எரிமலைப் படிகப்பாறை |
---|---|
அளவு | 118 cm × 148 cm |
எழுத்து | பல்லவ எழுத்துமுறை; பழைய மலாய் மொழி |
உருவாக்கம் | 606 சக ஆண்டு (683) |
கண்டுபிடிப்பு | பலெம்பாங், தெற்கு சுமாத்திரா, இந்தோனேசியா |
தற்போதைய இடம் | இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா |
பதிவு | D.155 |
தெலாகா பத்து கல்வெட்டு (ஆங்கிலம்: Telaga Batu Inscription; இந்தோனேசியம்: Prasasti Telaga Batu) என்பது 1950-களில், இந்தோனேசியா, பலெம்பாங், சபோகிங்கிங் (Sabokingking), 3 இலிர், இலிர் திமூர் II (3 Ilir, Ilir Timur II) எனும் இடத்தில், கண்டுபிடிக்கப்பட்ட 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீவிஜய கல்வெட்டு ஆகும்.
இந்தக் கல்வெட்டு ஜகார்த்தா, இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு உள்ளது; கல்வெட்டு கணக்கெடுப்பு பதிவு எண் D.155.[1]
தெலாகா பத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், தெற்கு சுமத்திராவைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட சித்தயாத்திரை கல்வெட்டுகள் (Siddhayatra inscriptions) கண்டுபிடிக்கப்பட்டன. அனைத்துக் கல்வெட்டுகளும் ஜெயநேசன் மேற்கொண்ட சித்தயாத்திரை எனும் பயணத்தைப் பற்றியவை. சித்த யாத்திரை (Siddha yatra) என்றால் புனிதப் பயணம் என்று பொருள்படும்.[2][3]
சக ஆண்டு 605 (கி.பி. 683)-இல் கண்டுபிடிக்கப்பட்ட கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு, ஜெயநேசனின் சித்தயாத்திரைப் பயணத்தைப் பற்றியும் கூறுகிறது. இன்று இந்தச் சித்தயாத்திரை கல்வெட்டுகள் அனைத்தும் இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.[4][5][6]
தெலாகா பத்து கல்வெட்டு 118 செ.மீ உயரமும் 148 செ.மீ அகலமும் கொண்ட ஓர் எரிமலைப் படிகப் பாறையில் (Andesite stone) செதுக்கப்பட்டுள்ளது. கல்லின் மேற்பகுதி ஏழு நாக தலைகளுடன் உள்ளது.
கீழ் பகுதியில், அரச சடங்குகளின் போது கல்லின் மீது ஊற்றப்படும் தண்ணீருக்கு வழித்தடமாக நீர் சேகரிப்பு ஊற்று உள்ளது. இந்தக் கல்வெட்டு பழைய மலாய் மொழியில்; பல்லவ எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளது.
கல்வெட்டின் உரை உள்ளடக்கம் மிகவும் நீளமானது; மற்றும் பல வரிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல எழுத்துக்கள் அரிக்கப்பட்டு படிக்க சிரமமாக உள்ளன. கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ள விசுவாச சடங்கின் ஒரு பகுதியாக கல்லை அடிக்கடி பயன்படுத்தியதால் கல் அரிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.[7]
கல்லின் மீது தண்ணீரை ஊற்றுவதன் மூலம் சடங்குகள் செய்யப்பட்டன. அவ்வாறு ஊற்றப்படும் நீர் கல்லின் அடிப்பகுதியில் சேகரிக்கப்பட்டு இருக்கலாம். பின்னர் அந்த நீர், மன்னருக்கு விசுவாசமாக உறுதிமொழி எடுத்துக் கொண்ட மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.[8][9]