தெலங்காணா உணவு வகை (Telangana cuisine) என்பது தெலங்காணா பகுதியின் தனித்துவமான ஒரு உணவு வகையாகும். தக்காண பீடபூமியில் அமைந்துள்ள தெலங்காணா மாநிலம் சிறுதானியம் மற்றும் ரொட்டி (புளிப்பில்லாத ரொட்டி) போன்றவைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. சோளம் மற்றும் கம்பு போன்றவை தெலங்காணாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணவாகும். மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் வடமேற்கு கர்நாடகா ஆகியவற்றின் அருகாமையால், தக்காண பீடபூமியின் உணவு வகைகளின் சில ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை இது பகிர்ந்து கொள்கிறது.[1]
தெலங்காணாவில் பல பாணியிலான சமையல் வகைகள் உள்ளன. கிராமங்களில், மக்கள் மரத்தூள் மற்றும் கொத்து அடுப்புகள் கொண்ட பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
தெலங்காணாவின் சமையலில் ரொட்டிக்கு ஒரு சிறப்பான இடமுண்டு, சோள ரொட்டி, கம்பு ரொட்டி, சொஜ்ஜா ரொட்டி அல்லது சர்வ பின்டி மற்றும் அரிசி ரொட்டி போன்ற ரொட்டி வகைகள் தயாரிக்கப்படுகின்றன. தெலுங்கானாவில் புளி கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு வகை புலுசு மற்றும் கூரா என்றழைக்கப்படுகிறது. நன்கு வறுக்கப்பட்டு வேப்புடு என்றழைக்கப்படும் உணவு வகை உட்பட. கோடி புலுசு மற்றும் மாம்சம் (இறைச்சி) வேப்புடு போன்றவை இறைச்சி வகைகளில் பிரபலமான உணவுகள் ஆகும். குத்தி வங்க்காயா (கத்திரிக்காய்), ஆலுகெட்டா (உருளைக்கிழங்கு), கூரா & வறுவல் போன்ற காய்கறி உணவுகள் பல உள்ளன.[2] தெலங்காணா பாலக்கூரா என்பது பசளிக் கீரை, வேகவைத்த பருப்பு கொண்டு சிறப்பு ஈர்ப்பாக வேர்க்கடலை சேர்க்கப்பட்டு சமைப்பது வழக்கமாகும். அரிசி மற்றும் ரொட்டியுடன் இதனை உட்கொள்வார்கள், இதில் கரீம்நகர் மாவட்டத்தில் , முந்திரி பருப்புகள் சேர்க்கப்படுகின்றன.
தெலங்காணாவில் கூரா என்பது போட்டி (ஆட்டிறைச்சியில் பெறப்பட்டவை) மற்றும் புளிச்சை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் கோங்குரா ஆகியவை அடங்கும். பொட்லகாய் புலுசு என்கிற புடலங்காய் குழம்பு தினசரி உணவுகளில் ஒன்றாகும். சக்கிளம் என்கிற முறுக்கு, தசரா மற்றும் சங்கராந்தி போன்ற திருவிழாக்களில் அரிசி மாவு கொண்டு செய்யப்படும் மிகவும் சுவையான மற்றும் பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டி வகைகளில் ஒன்றாகவும் உள்ளது.[3]
தெலங்காணா பகுதிகளில் புளி, சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயம் போன்ற பொருட்கள் பெரும்பாலான தெலங்காணா சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. புளிச்சைக் கீரை என்பது கறி மற்றும் ஊறுகாய்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் முக்கிய உணவு வகையாகும்.[4]