தெலுகு தல்லி எனப்படும் தெலுங்குத் தாய் ( IAST : Teluɡu Talli ) என்பது தெலுங்கர் மற்றும் அவர்களின் பண்பாட்டின் பெண் உருவம் ஆகும்.
தெலுங்கு நிலம் எப்போதும் பசுமையால் (செழிப்பு மற்றும் மகிழ்ச்சி) நிரம்பியது என்பதை சித்தரிக்கும் வகையில் அவளது இடக் கையில் நெற்கதிர் வைத்திருக்கிறாள். வலது கையில் கையில் பூரண கும்பத்தின் மேல் தேங்காயும் மாவிலையும் உள்ளது. இவை மக்களின் வாழ்வில் எல்லா நன்மைகளையும் தருபவள் என்பதைக் குறிக்கிறது. அம்மன் பாரம்பரிய தெலுங்கு பாணியில் ஆடை அணிகளன்களை அணிந்ததுபோல் சித்தரிக்கபட்டுள்ளாள். மொழி என்பது மனித குலத்திற்கு மிகவும் அவசியமான ஆற்றல்களில் ஒன்றாகக் கருதப்படுவதாலும், தெலுங்குத் தாய் அதை வழங்கியிருப்பதாலும், தெலுங்கு நாட்டு வாழ்வில் அவளுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மா தெலுகு தல்லிக்கி (தெலுங்கு: మా తెలుగు తల్లికి) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலாகும். இதை சித்தூர் வி. நாகையா நடித்த தீனா பந்து (1942) என்ற தெலுங்குத் திரைப்படத்திற்காக சங்கரம்பாடி சுந்தராச்சாரி எழுதினார். இந்தப் பாடல் பிரபலமடைந்து, இறுதியில் ஆந்திரப் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக அறிவிக்கப்பட்டது.
மா தெலுங்கு தல்லிக்கி என்பது தெலுங்கு பண்பாட்டின் மகத்துவத்தை சித்தரிக்கும் ஒரு இசைப் பாடலாகும். அதில் தெலுங்கின் சொற்பிறப்பியல் பற்றிய பல்வேறு கூற்றுகளுக்கு, தெலுங்கு மொழியைப் பார்க்கவும். தெலுங்குத் தாய் உருவமானது இப்பகுதியின் செழிப்பு மற்றும் பண்பாட்டின் உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. தெலுங்குத் தாய் குறித்த பாடலில் விளை நிலங்களை நமக்கு அருளியவள்; அவளின் இரக்கம் மக்களைக் காக்கும்; அமராவதியின் அழகிய கட்டிடக்கலை போன்ற பண்பாட்டு மரபுகளின் பல்வேறு அம்சங்களின் உருவகமாக அவள் இருக்கிறாள்; தியாகராசரால் அழியாத பாரம்பரிய இசை; மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்த திக்கானாவின் பாடல் வரிகள்; 13 ஆம் நூற்றாண்டின் காகதீய வம்சத்தின் ராணி ருத்ரமா தேவியின் துணிச்சல்; மல்லம்மாவின் 'கணவர் மீதான பக்தி'; கிருட்டிணதேவராயரின் தலைமை அமைச்சராக இருந்த திம்மருசுவின் கூர்மையான அறிவு ; அல்லது கிருட்டிண தேவராயரின் புகழ். அவள் நம் தாய், என்றென்றும் நம் இதயத்தில் வசிப்பாள். தெலுங்கர்களின் பண்பாட்டு மரபைத் தூண்டும் அதே வேளையில், இராயலசீமை, கடலோர ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மூன்று முக்கியமான பகுதிகளையும் இந்தப் பாடல் உள்ளடக்கியிருப்பதைக் காணலாம்.
ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் ஆத்தான ஸ்தபதியாக கணபதி ஸ்தபதி இருந்த போது அவர் தெலுங்குத் தாய் உருவத்தை வரைந்தார். இந்தத் தாயின் உருவத்தை ஆந்திர அரசின் அதிகாரப்பூர்வ வாழ்த்துப் பாடலான மா தெலுகு தல்லிக்கி பாடலை ஆதாரமாக கொண்டே வரைந்தார்.[1]
தெலுங்குத் தாய் உருவமானது வலது கையில் பூரண கும்பத்தின் மேல் தேங்காயும், மாவிலையும் (பூரண கும்பம் ஆந்திரத்தின் நீர்வளத்தையும், தேங்காய் தென்னை வளத்தையும், மாவிலைகள் மாம்பழத்துக்குப் புகழ் பெற்ற தேசம் என்பதையும் குறிப்பன) உள்ளது போலவும், இடது கையில் நெற்கதிரை (ஆந்திரத்தின் தானிய வளத்தை சித்தரிக்க) ஏந்தி நின்ற வடிவத்தில் கழுத்தில் மல்லிகை மாலை சூடிய வடிவத்தில் கணபதி சித்தரித்தார்.[1]
இதற்கிடையில் ஒருநாள் ஈநாடு செய்தித்தாளின் செய்தியாளர் கணபதி ஸ்தபதியைக் காண வந்தார். தெலுங்கு தாய்க்கு எத்தனை கைகள் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டதற்கு, வந்திருப்பது செய்தியாளர் என்று அறியாத கணபதி இரண்டு கைகள் இருக்க வேண்டும் என்றார். அது பத்திரிக்கையில் விவாதங்களுக்கு வழிவகுத்தது. இந்த சர்ச்சையால் அதுகுறித்து முடிவு செய்ய ஆந்திர அரசினால் ஒரு குழு அமைக்கபட்டது. அக் குழுவிடம் தான் வரைந்த தெலுகு தல்லியின் உருவம் குறித்தும் அது உணர்த்தும் பொருள் குறித்தும் கணபதி ஸ்தபதி கூறிய விளக்கத்தை குழுவினர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் சில காரணங்களினால் அந்த உருவம் ஆந்திர அரசால் அப்போது அதிகாரப்பூர்வமாக ஏற்க்கப்படாமல் இருந்தது.[1]
என். டி. ராமராவ் ஆந்திராவின் முதலமைச்சர் ஆன பிறகு கணபதி ஸ்தபதி வரைந்த தெலுகு தல்லியை அரசு ஒப்புக் கொள்கிறது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மகபூப்நகரில் முதன்முதலாக ஆறு அடி உயரத்தில் தெலுகு தல்லியின் செப்புச் சிலை வைக்கப்பட்டது.[1]
மிக்கி ஜே. மேயர் இசையமைத்த 2010 ஆம் ஆண்டு லீடர் திரைப்படத்தில் தெலுங்குத் தாய் வாழ்த்துப் பாடலின் மறுகலவை பயன்படுத்தப்பட்டது. [2]