தெல்பெக் என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவர் 1412 - 1415இல் ஆட்சி புரிந்தார். 1412இல் ஒயிரட்களால் ஒரு கைப்பாவை ஆட்சியாளராக அமர வைக்கப்பட்டார். எனினும், நடு மற்றும் கிழக்கு மங்கோலிய நிலப்பரப்புகளில் இருந்த பெரும்பாலான மங்கோலிய இனத்தவர்களால் இது அங்கீகரிக்கப்படவில்லை.
திசாகன் செச்செனின் கூற்றுப்படி, தெல்பெக் என்பவர் ஒல்ஜெயி தெமூர் கானின் ஒரு மகன் ஆவார். ஒல்ஜெயி தெமூர் கான் ஒயிரட் தலைவரான பகாமுவுக்குத் தெல்பெக்கைப் புதிய கானாக ஆக்குமாறு அறிவுரை கூறினார். 1412இல் தெல்பெக் புதிய ககானாகப் பதவிக்கு வந்தார்.[1] எனினும், சசரத் உல் அத்ரக் மற்றும் அபீப் அல் சியார் போன்ற பதிவுகளின் படி, தெல்பெக் அரிக் போகேயின் நேரடி வழித்தோன்றல் ஆவார். இந்த இரத்த சம்பந்தமானது மேற்கில் இருந்த மங்கோலிய மக்களிடையே ஓரளவுக்கு ஆதரவைத் திரட்ட தெல்பெக்கிற்கு உதவியது.[2] ஆனால், இவரது அதிகாரமானது மங்கோலிய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான மேற்குப் பகுதியிலேயே இருந்தது. அதே நேரத்தில், கிழக்கு மற்றும் நடுப் பகுதிகள் அருக்தையின் கட்டுப்பாட்டில் இருந்தன. இந்த இரு பிரிவினரும் இரு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து சண்டையிட்டனர். 1414இல் மிங் அரசமரபின் எல்லையில் இருந்த நிலப்பகுதியில் தஞ்சமடையும் நிலைக்கு அருக்தையை ஒயிரட்கள் உள்ளாக்கினர்.
1415இல் பகாமு, தெல்பெக் மற்றும் போலத்தால் தலைமை தாங்கப்பட்ட மேற்கு மங்கோலியர்கள் மிங் இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர். மிங் இராணுவத்தினர் தூல் ஆறு வரை நுழைந்தனர். எனினும், இது ஒரு பிர்ரிய வெற்றியாகும். இரு பக்கங்களிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சமமாக இருந்தது.[3] மிங் பேரரசர் அவரது ஆதரவாளர்களால் திரும்பிச் செல்லுமாறு இணங்க வைக்கப்பட்டார். அதே நேரத்தில், மங்கோலியர்கள் வடக்கு நோக்கிப் பின்வாங்கினர்.
1425 வரை பெரிய கானின் அரியணையை அடய் கானால் கோரப்படாத போதும், மங்கோலிய நிலப் பரப்பின் கிழக்கு மற்றும் நடுப் பகுதிகளை முதலில் ஒன்றிணைக்க அவரால் முடிந்தது. அதே நேரத்தில், தெல்பெக் கானின் முறைமையை அவர் கண்டித்தார். தெல்பெக்கிற்கு எதிராகப் படையெடுப்புகள் மேற்கொண்டார். இறுதியாக அவரைத் தோற்கடிப்பதில் வெற்றி கண்டார். 1415இல் தெல்பெக்கையும், இவரது ஏராளமான ஒயிரட் ஆதரவாளர்களையும் அடய் கான் கொன்றார். தெல்பெக்குப் பிறகு அரிக் போகேயின் நேரடி வழித்தோன்றலான ஒயிரடை கான் பதவிக்கு வந்தார். தங்களது ஆட்சியின் முறைமைத் தன்மையை அதிகரிப்பதற்காக ஒயிரட்களால் ஒயிரடை கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.