![]() | |
![]() | |
நிறுவப்பட்டது | சனவரி 30, 2019 |
---|---|
அமைவிடம் | தண்டி, குசராத்து, இந்தியா |
ஆள்கூற்று | 20°53′29″N 72°47′59″E / 20.89139°N 72.79972°E |
வகை | நினைவுச்சின்னம் |
வலைத்தளம் | dandimemorial.in |
தேசிய உப்பு சத்தியாகிரக நினைவுச்சின்னம் (National Salt Satyagraha Memorial) அல்லது தண்டி நினைவுச்சின்னம் என்பதுஇந்தியாவின் குசராத் மாநிலம் தண்டியில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நினைவுச்சின்னமாகும். இந்த நினைவுச்சின்னம் 1930இல்[1] மகாத்மா காந்தியால் வழிநடத்தப்பட்ட காலனித்துவ இந்தியாவில் அகிம்சை முறையில் மக்கள் ஒத்துழையாமைச் செயலான உப்பு சத்தியாகிரகத்தின் செயல்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை நினைவுகூறும் வகையில் கடற்கரை நகரமான தண்டியில் 15 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.[2] இங்கு உப்பு அணிவகுப்பு 5 ஏப்ரல் 1930 அன்று முடிவடைந்தது. பிரித்தானிய உப்பு ஏகபோகத்தினை கடல் நீரைக் கொதிக்க வைத்து உப்பு உற்பத்தி செய்து மீறப்பட்டது.[1] இந்த நினைவுச்சின்னம் இந்திய ரூபாயில் 89 கோடி செலவில் நிறுவப்பட்டது.[3]
தேசிய உப்பு சத்தியாகிரக நினைவுச்சின்னத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் உயர்நிலை தண்டி நினைவு குழுவால் வடிவமைக்கப்பட்டு இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.[4] இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை இந்த நினைவுச்சின்ன வடிவமைப்பின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டது.[1] இந்த நினைவுச்சின்னம், மகாத்மா காந்தியின் நினைவு நாளான 2019 ஜனவரி 30 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்பட்டது.[5]
இந்த நினைவுச்சின்னம் 40-மீட்டர் (130 அடி) உயரத்தில் ஆங்கில எழுத்தான "A" வடிவ எஃகு சட்டகம் வடிவிலானது ஆகும். இது இரண்டு கைகளைக் குறிக்கிறது. கடலிருந்து வரும் உப்புக் காற்றிலிருந்து இதனைப் பாதுகாக்கும் விதமாக அரிப்பைத் தடுக்கும் பொருளால் ஆனது. நினைவுச்சின்னத்தின் உச்சியில், 2500கிலோ உப்பு படிகத்தைக் குறிக்கும் கண்ணாடி கனசதுரம் ஒன்று உள்ளது. இந்த கனசதுரம் இரவில் ஒருங்கொளி விளக்குகளால் ஒளிரும் தன்மையுடையது. இது நாற்கூம்பு மாயையை உருவாக்குகிறது. கனசதுரத்தின் விதானத்தின் கீழ், 5-மீட்டர் (16 அடி) காந்தியின் உயரமான சிலை முன்னோக்கி அணிவகுத்துச் செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில், இந்த சிலை மும்பையில் அறுபது தனித்தனி துண்டுகளாகச் செய்யப்பட்டு, இணைக்கப்பட்டு தண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்பணி இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றது.[6] இந்த சிலையினை வடிவமைத்தவர் சதாசிவ சாத்தேயால் ஆவார்.[1]
முதன்மை நினைவிடத்தின் இடதுபுறத்தில் 78 தொண்டர்களுடன் காந்தியின் சிலை உள்ளது. இந்த சிலைகள் வெண்கலத்தால் ஆனவை.[1] இச்சிலையினை அழைக்கச் சிற்பிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா, ஆஸ்திரியா, பல்கேரியா, பர்மா, யப்பான், இலங்கை, திபெத், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து 40 சிற்பிகள் இந்த வடிவமைப்பினை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு சிற்பியும் தலா இரண்டு சிற்பங்களை உருவாக்கினர். களிமண் மாதிரி சிற்பங்கள் பணி நிறைவடைந்த பிறகு, அச்சுகளும் வார்ப்புகள் செய்யப்பட்டன. இந்த சிற்பங்களை ஜெய்ப்பூரில் உள்ள சுகிருதி ஒளிப்பட நிலையம் சிலிக்கான்-வெண்கல கலவையினால் செய்தது.[7]
உப்பு சத்தியாகிரகத்தின் கடற்கரை அம்சத்தைக் குறிக்கும் வகையில் ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரி ஊடுருவ முடியாத, நிலத்தடித் துணிகள் அடிப்படையிலான ஏரியாகும். உப்பு ஊடுருவலைத் தடுக்க கீழேயும் மேலேயும் மூடப்பட்டுள்ளது. இந்த ஏரியில் மழைநீர் தேக்கப்பட்டுள்ளது. இந்த நீர் சுத்திகரிக்கப்பட்டுத் தெளிவான நீராக காட்சியளிக்கிறது.[1]
சுதந்திரப் போராட்டத்தில் காந்தியால் வலுப்படுத்தப்பட்ட தன்னிறைவு திட்டத்தினை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, இந்த நினைவகம் ஆற்றல் தேவைகளுக்காகத் தன்னிறைவு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காகச் சூரிய ஆற்றலைத் தயாரிக்கும் வகையில் சூரிய தகடுகளுடன் கூடிய 40 செயற்கை மரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது இந்த நினைவகத்தை நிகர பூஜ்ஜிய-ஆற்றல் திட்டமாக மாற்றுகிறது . பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின்சாரக் கட்டத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரவில், தேவையான ஆற்றல் மின்திட்டத்திலிருந்து பெறப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இந்த அமைப்பில் விலையுயர்ந்த மின்கலங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதனால் பராமரிப்பு செலவும் குறைவாக உள்ளது.[8]
பார்வையாளர்களை உப்புத் தயாரிக்கும் பங்களிப்பில் ஈடுபடுத்தும் வகையில், சூரிய சக்தியில் உப்பு தயாரிக்கும் தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. நினைவுச்சின்னத்தைப் பார்வையிட வருகைதரும் பார்வையாளர்கள், இந்த நினைவுச்சின்னத்தைப் பார்வையிட்டதன் நினைவாக, வீட்டிற்கு ஒரு சிட்டிகை உப்பு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நடவடிக்கை மகாத்மாவின் மூலோபாய புத்திசாலித்தனத்தைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காந்தி உப்பைச் சக்திவாய்ந்த உருவகமாகக் கொண்டு மக்களைச் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.[1]
இந்த நினைவகத்தில் மொத்தம் 22 கதை சுவரோவியங்கள் உள்ளன. மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் இதனைக் கேரளாவின் ஊரக களிமண் மட்பாண்ட சுவரோவிய அடிப்படையில் கருத்துருவாக்கம் செய்தது. கருத்துருவாக்கம் செய்யப்பட்ட பிறகு[1] சுவரோவியங்கள் ஜவஹர்லால் நேரு கட்டிடக்கலை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தால் களிமண்ணில் அச்சு வார்க்கப்பட்டன. பின்னர் சுகிருதி ஒளிப்பட நிலையத்தினால் இவை வெண்கலத்தில் வார்க்கப்பட்டன.
வரிசை எண் | படம் | விளக்கம் |
---|---|---|
1 | ![]() |
1930 மார்ச் 2, உப்புச் சட்டத்தை மீறுவதற்கு முன்மொழியப்பட்ட அணிவகுப்பு பற்றி வைஸ்ராய்க்கு காந்தி கடிதம் எழுதினார். 1930 மார்ச் 7 அன்று சர்தார் வல்லபாய் பட்டேல், ராசு கிராமத்தில் அணிவகுப்புக்குத் தயாராகி பிரச்சாரம் செய்தபோது கைது செய்யப்பட்டார். |
2 | ![]() |
1930 மார்ச் 12, அதிகாலை பிரார்த்தனைக்குப் பிறகு, கஸ்தூர்பா காந்தி தர்ம-யாத்திரை- சத்தியாகிரகத்திற்குச் செல்லும்போது காந்திக்கு திலகமிட்டார். |
3 | ![]() |
ஆற்றைக் கடத்தல். அணிவகுத்துச் செல்வோரைப் பார்க்க மக்கள் கூட்டம் வருகிறது, எதிர் கரையில் இவர்களை வரவேற்கக் கூட்டம் காத்திருக்கிறது. |
4 | ![]() |
வழியில் ஒரு கிராமக் கூட்டத்தில் காந்தி உரையாற்றுகிறார். காந்தி உப்பு வரி முதல் நூற்பு இராட்டையைச் சுழற்றுவது மற்றும் காதி அணிவது, மதுக்கடை முன் மறியல் செய்வது முதல் தீண்டாமையை ஒழிப்பது வரை பல விடயம் குறித்துப் பேசுகிறார். |
5 | ![]() |
அணிவகுப்பவர்களுக்குக் கிராமம் ஒன்றில் இசைக்கருவிகள் ஒலிக்க வரவேற்கின்றனர். காந்தியின் உரையைக் கிராம மக்கள் கேட்கிறார்கள். அவர்கள் பணம் மற்றும் மாட்டு வண்டி ஒன்றை நன்கொடையாக வழங்கினர். |
6 | ![]() |
திங்கள் ஓய்வு நாள். காந்தி ஒரு நாள் மவுன விரதம் அனுசரிக்கிறார். ஆனந்தில் உள்ள ஒரு பள்ளியில் தங்கினர். பெரும்பாலான அணிவகுப்பார்கள் தங்கள் அன்றாட வேலைகளில் கலந்து கொள்ளும்போது, ஒரு சிலர் அகிம்சை போராட்டத்தின் சாராம்சம் பற்றி உள்ளூர் மக்களிடம் பேசுகிறார்கள். |
7 | ![]() |
அணிவகுப்பார்களில் ஒருவரான பண்டிட் கரே, மாலை பிரார்த்தனைக்குத் தலைமை தாங்குகிறார். 105 வயதான ஒரு பெண் தனது ஆசீர்வாதங்களை வழங்குகிறார். விரைவில் விடுதலை பெற வேண்டுகிறார். |
8 | ![]() |
அணிவகுப்பார்கள் படகுகளில் மாகி ஆற்றைக் கடந்து சதுப்புநிலங்கள் வழியாக இரவில் தாமதமாக கரேலியை அடைகிறார்கள். ஜவகர்லால் நேரு பின்னர் வருகிறார்; அகில இந்திய காங்கிரசு குழு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அவரும் காந்தியும் விவாதிக்கின்றனர். |
9 | ![]() |
ஒரு கிராமக் கூட்டத்தில், காந்தி 'தீண்டத்தகாதவர்களுக்காக' தனிமைப்படுத்தப்பட்ட இருக்கை ஏற்பாடுகளைக் கண்டு மிகவும் வேதனைப்படுகிறார். காந்தியின் கட்டளைப்படி, அணிவகுப்பவர்கள் அவர்களிடையே அமர்ந்தனர். |
10 | ![]() |
அணிவகுப்பு தொடரும் போது, ஊர்வலக்காரர்கள் கிராம மக்களால் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். காந்தியைப் பார்க்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சிலர் மரங்களின் மேல் ஏறுகிறார்கள். பலர் அணிவகுப்பில் கலந்து கொள்கிறார்கள். |
11 | ![]() |
- |
12 | ![]() |
பகல் நேர ஓய்வின்போது, ஒரு முடிதிருத்தும் நபர் காந்திக்கு மொட்டையடித்துவிடுகிறார். அதே சமயம் செருப்புத் தைக்கும் தொழிலாளி காந்தியின் காலணிகளைச் சரிசெய்கிறார். முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காந்தியைச் சந்தித்து போராட்டத்தில் முழு மனதுடன் பங்கேற்பதை உறுதி செய்கிறார்கள். |
13 | ![]() |
படகில் நர்மதா ஆற்றைக் கடக்கும்போது, கஸ்தூர்பா காந்தி அவருடன் சேர்ந்தார். அவர்களைத் தவிர அப்பாஸ் தயாப்ஜி, சரோஜினி நாயுடு, பரூச்சின் காங்கிரசு தலைவர்கள் மற்றும் ஒரு அமெரிக்கத் தம்பதியரும் அங்கு இருந்தனர். |
14 | ![]() |
ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாகக் காந்தியின் அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாக மொரார்ஜி தேசாய் மற்றும் பிற அரசு அதிகாரிகள் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்தனர். காந்தியும் கஸ்தூர்பா காந்தியும் காகாசாகேப் காலேல்கரை திராசுலா கிராமத்தில் சந்தித்தனர். |
15 | ![]() |
கபலேதா கிராமத்தின் இந்து மற்றும் முஸ்லீம் கிராமவாசிகள் தங்கள் காளை வண்டிகளுடன் மிதோலா ஆற்றில் வரிசையாக அணிவகுத்தனர், இதனால் அணிவகுப்பவர்கள் ஆற்றை எளிதாகக் கடந்தனர். |
16 | ![]() |
- |
17 | ![]() |
ஒரு வண்டி, பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டுவருகிறது; அணிவகுப்பில் தொழிலாளர்கள் விளக்குகளை எடுத்துச் செல்கின்றனர். அணிவகுப்பவர்கள் தேடுதலை தம்முள் திருப்ப வேண்டும் என்று காந்தி கூறுகிறார். |
18 | ![]() |
அணிவகுத்துச் சென்றவர்கள் சூரத்தில் உள்ள அசுவிணிகுமார் ரயில்வே பாலத்தின் மீது சென்று ஆற்றைக் கடக்கின்றனர். கோலாகலமான வரவேற்பு அளிக்க மக்கள் பாலத்தில் திரண்டனர். அவர்கள் மறுநாள் காலையில் பெரும் ஊர்வலத்தின் ஒரு பகுதியாகத் திரண்டனர். |
19 | ![]() |
காந்தி நவாசாரியில் உள்ள துதியா தலாவோவில் ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஒரு பன்னாட்டுப் படக்குழு இந்த அசாதாரண காட்சியைப் படமாக்குகிறது. மக்கள் கதராடையினை வாங்கினார்கள். |
20 | ![]() |
24 நாட்கள் மற்றும் 240 மைல்கள் கழித்து, அணிவகுப்பு 1930 ஏப்ரல் 5 அன்று தண்டியை அடைகிறது. அணிவகுத்துச் சென்றவர்களை சைஃபி இல்லத்தின் உரிமையாளர்கள் வரவேற்கின்றனர். அகிம்சை உப்பு சத்தியாகிரகத்திற்காகக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தண்டியை விவரிக்கும் காந்தியின் பொது உரையாடல், பிரார்த்தனைக் கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெறுகிறது. |
21 | ![]() |
1930 ஏப்ரல் 6, கடலிலிருந்து காந்தி உப்பை எடுத்து உப்பு சட்டத்தை மீறினார், மற்ற அணிவகுப்பவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். இதன்மூலம் உப்பு சத்தியாகிரகம் தொடங்குகிறது. இந்தியா முழுவதும் விரைவாகப் பரவுகிறது. |
22 | ![]() |
காந்தி 1930 ஏப்ரல் 13 அன்று தண்டியில் நடந்த மகளிர் மாநாட்டில் உரையாற்றினார். 1930 மே 5 அன்று, ஒரு பிரித்தானியக் குற்றவியல் நடுவர் ஆயுதமேந்திய காவல்துறைப் படையுடன் நள்ளிரவில் காந்தியைக் கரடி-மத்வாட்டில் உள்ள புல் குடிசையிலிருந்து கைது செய்கிறார். பின்னர் காந்தி ஏர்வாடா மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். |
கட்டமைப்பில் ஒன்றின் சுவரில் 1930 ஏப்ரல் 5 தேதியிட்ட காந்தியின் மேற்கோள் தண்டியில் எழுதப்பட்டது, காந்தியுடைய கையெழுத்தில் மேலெழுதப்பட்டுள்ளது:
வலிமைக்கு எதிரான இந்த போரில் உலக அனுதாபத்தை நான் விரும்புகிறேன்.
அணிவகுப்பின் போது, 1930 ஏப்ரல் 5 அன்று, காந்தி இரவுப்பொழுதினை சைஃபி இல்லத்தில் கழித்தார்.[9] இது தாவூதி போரா சமூகத்தின் 51வது மதத் தலைவர் சையத்னா தாஹர் சைஃபுதீனுக்கு சொந்தமானது. 1961ஆம் ஆண்டில், தேசிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இந்த இல்லத்தினை தேசத்திற்கு அர்ப்பணிக்குமாறு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் அவர் கேட்டுக் கொண்டார்.[10]
இதன் பின்னர் 1964 முதல், இந்த இல்லம் குசராத்து அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மாவட்ட நிர்வாகம் இதை பராமரிக்க குசராத்து சுற்றுலாத்துறையிடமிருந்து மாதம் ₹50,000 (US$630) பெறுகிறது. 2016ஆம் ஆண்டில், இந்திய தொல்லியல் துறையின் வதோதரா வட்டம், சைஃபி இல்லம் மற்றும் பிரார்த்தனை மந்திர் ஆகியவற்றை ஓரளவு மீட்டெடுத்தது.[11]
{{cite web}}
: |last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: |last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: |last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: |last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)