தேசிய காவலர் நினைவகம் | |
---|---|
இந்தியா | |
இறந்தவர்களுக்கு 1947 முதல் இன்றுவரை பயன்படுத்தப்பட்டது | |
திறப்பு | 21 அக்டோபர் 2018 |
வடிவமைப்பு | அத்வைதா கடாநாயக் (மைய சிற்பம்) |
தேசிய காவலர் நினைவகம் (National Police Memorial) என்பதுஇந்தியாவில் 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் மத்திய மற்றும் மாநில காவல் படையில் பணியில் இருக்கும்போது உயிர் நீத்த 34,844 காவலர்களை நினைவுகூறும் வகையில் அமைக்கப்பட்ட நினைவகம் ஆகும். [1] இந்த நினைவகம் புதுதில்லியின் சாணக்யபுரி பகுதியில் 6.12 ஏக்கர்கள் (2.48 எக்டேர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள நினைவுச் சின்னம் ஆகும். இந்த நினைவகத்தில் 30-அடி (9.1-மீட்டர்) உயரமும் 238 டன் எடையும் கொண்ட கனமான கருப்பு நிற கிரானைட் சிற்பம், ஒரு அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. மேலும் இந்த வளாகத்தில், கடமையாற்றிக் கொண்டிருக்கும்போது இன்னுயிரை ஈத்த 34,844 காவலர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஒரு 'வீரச்சுவர்' அமைந்துள்ளது. [2] இங்கு நிலத்தடியில் அமைந்துள்ள அருங்காட்சியகம் இந்தியாவில் இந்த வகையாச் சேர்ந்த முதல் காவலர் அருங்காட்சியகமாகக் கருதப்படுகிறது. இங்கு பொ.யு.மு.310 காலமான, கௌடில்யரின் சட்டம் மற்றும் ஒழுங்கு முறையின் காலம் தொடங்கி 2000 ஆண்டு கால காவல் துறை செயல்பாடுகளை விளக்குகின்ற காட்சிப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட இந்த நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி, காவலர் நினைவு நாளான (காவலர் தியாகிகள் தினம்) 21 அக்டோபர் 2018 ஆம் நாளன்று திறந்து வைத்தார். [2]
இந்தத் தேசிய காவலர் நினைவகம் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் சிவப்பு தாழ்வாரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த காவலர் பணியாளர்களை நினைவுகூர்கிறது. குற்றங்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் ஈடுபடும்போது உயிரை இழந்த ஏராளமான காவலர்களை இந்த நினைவகம் நினைவுகூர்கிறது. [1]
இந்த நினைவுச்சின்னத்திற்கான கருத்தாக்கம் முதன்முதலில் 1984 ஆம் ஆண்டில் உருப்பெற்றது. ஆனால் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் ஒரு தேசிய காவலர் நினைவுச்சின்னம் கொண்ட திட்டம் முதலில் முன்மொழியப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி இதற்கான அடிக்கல்லை நாட்டினார். முந்தைய நினைவுச்சின்னம் 150 அடி (46 மீ) உயர எஃகு அமைப்பினால் ஆனதாகும். ஆனால் அது சுற்றுச்சூழல் விதிகளை மீறியதால் 2008 ஆம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது.
நினைவுச்சின்னத்தின் பழைய வடிவம்:
மைய சிற்பம் 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் 238 டன் எடையில் கிரானைட் கல்லால் உருவாக்கப்பட்டதாகும். அதன் எடை மற்றும் நிறம் "உயர்ந்த தியாகத்தின் ஈர்ப்பு மற்றும் தனித்துவத்தை குறிக்கிறது". கட்டமைப்பின் அடிப்பகுதியில், உள்ள 60 அடி (18 மீட்டர்) உள்ள நதி அமைப்பானது காவல்துறை பணியாளர்கள் தம் கடமைகளைச் செய்வதில் காணப்படுகின்ற தொடர்ச்சியான சேவையைக் குறிக்கிறது. [1] மைய சிற்ப அமைப்பை தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தைச் சேர்ந்த அத்வைத கடநாயக் வடிவமைத்துள்ளார்.
கட்டிடக்கலைஞர் உதய் பட் அவர்களின் ஒட்டுமொத்த வடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக வீரச்சுவர் வடிவமைக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டுமுதல் இன்று வரை கடமையின்போது இறந்த, 2018 ஆம் ஆண்டில் இறந்த 424 பேர் உள்ளிட்ட, 34,844 பணியாளர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. [1]
தேசிய காவலர் அருங்காட்சியகம் இந்தியாவில் இந்த வகையைச் சேர்ந்த முதல் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் நிலத்தடியில் உள்ளது. இது 1,600 சதுர மீட்டருக்கு மேலான பரப்பளில் ஐந்து காட்சியகங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு இந்திய மத்திய மற்றும் மாநில காவலர் படைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, சிறப்பு பாதுகாப்பு குழு, தேசிய பாதுகாப்புக் காவலர், விரைவான பாதுகாப்புப் படை, சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் புலனாய்வுப் பணியகம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவலர் படைகளும் இங்கு பங்குபெறுகின்றன. இதில் பெண்கள் குழுக்கள், போலீஸ் பாண்ட் எனப்படும் குழுக்கள் மற்றும் விலங்குக் குழுக்கள் (ஒட்டகம், நாய் மற்றும் புறா) உள்ளிட்ட பல சிறப்புப் பிரிவுகள் உள்ளன. காவலர் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணியகம், தேசிய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் நிறுவனம் மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு போன்ற காவலர் ஆய்வு அமைப்புகளின் பங்கு பற்றியும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு தியாகத்தை முன்வைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளில் அக்சர்தாம் கோயில் தாக்குதல் (2002), புத்தூர் நடவடிக்கை (2013), வீரப்பன் கொலை (2004), மற்றும் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்ட முதல் பெண் இந்திய காவல் பணி அலுவலர் வந்தனா மாலிக் மரணம் (1989) உள்ளிட்டவை அடங்கும்.