![]() பழைய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகக் கட்டடம், புனே | |
![]() | |
நிறுவப்பட்டது | பிப்ரவரி 1964[1] |
---|---|
அமைவிடம் | சட்டக்கல்லூரி சாலை, டெக்கான் ஜிம்கானா, புனே, மகாராஷ்டிரா 411004, இந்தியா |
தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் (National Film Archive of India) பிப்ரவரி 1964 இல் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் ஊடகப் பிரிவாக நிறுவப்பட்டது. இது சர்வதேச திரைப்பட காப்பகங்களின் கூட்டமைப்பின் உறுப்பின நிறுவனமாக உள்ளது..
தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மூன்று முக்கிய நோக்கங்கள்: இந்தியத் திரைப்படப் பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்துக் கொண்டு செல்லுதல், திரைப்படங்களை வகைப்படுத்தி, ஆவணப்படுத்தி, ஆய்வு மேற்கொள்ளல்; திரைப்படப் பண்பாட்டின் பரவலுக்கான இதனை ஒரு மையமாகக் கொண்டு செயல்படல்.
தேசிய திரைப்பட ஆவணக் காப்பக தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் அமைந்துள்ளது. இதற்கு பெங்களூரு, கல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஆகிய மூன்று இடங்களில் பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. பி.கே. நாயர் அவர்களால் உருவாக்கப்பட்ட [2] நடவடிக்கைகள் பண்பாட்டுப் பரவல் தொடர்பாக பன்மடங்கில் அமைந்துள்ளது. அதன் விநியோக நூலகத்தில் நாடு முழுவதையும் சார்ந்த சுமார் 25 செயல் உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் இது ஆறு முக்கியமான மையங்களில் வாரம் ஒரு முறை, பதினைந்து நாள்களுக்கு ஒரு மற்றும் மாதம் ஒரு முறை என்ற வகையில் கூட்டு முயற்சி அடிப்படையில் திரைப்படங்களைத் திரையிடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது. இந்த காப்பகத்தில் 10,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 10,000 க்கும் மேற்பட்ட நூல்கள், 10,000 க்கும் மேற்பட்ட திரைப்பட கதைக்கான கையெழுத்துப் பிரதிகள் 50,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் உள்ளன. இதன் மற்றொரு முக்கியமான திட்டம் திரைப்படம் தொடர்பாக பயிற்றுவித்தல் என்பதாகும். இந்தத் திட்டப்படி நீண்ட மற்றும் குறுகிய கால திரைப்படப் பாராட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகள் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (எஃப்.டி.ஐ.ஐ) மற்றும் பிற கல்வி மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து நடத்தப்படுகிறது. சர்வதேச நிலையில் பெரிய திரைப்படங்களை வெளியிடல் என்பதன் அடிப்படையில் இந்தக் காப்பகம் பல இந்திய செவ்வியல் திரைப்படங்களை வழங்கியுள்ளது.
தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் 1910 கள் தொடங்கி திரைப்படங்கள், வீடியோ கேசட்டுகள், டிவிடிகள், நூல்கள், சுவரொட்டிகள், ஸ்டில்கள், பத்திரிகை நறுக்குகள், ஸ்லைடுகள், ஆடியோ சிடிக்கள் மற்றும் இந்திய சினிமாவின் வட்டுப் பதிவுகள் ஆகியவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கிறது.
ஜனவரி 8, 2003 ஆம் நாளன்று புனேவில் உள்ள இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இயங்கி வருகின்ற பிரபாத் ஸ்டுடியோ வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு பெரும் அழிவை ஏற்படுத்தியது. இதில் 1700 நைட்ரேட் திரைப்பட அடிப்படையில் அமைந்திருந்த பிரதிகள் அழிந்து போயின. [3] 5,097 ரீல்களில் 607 படங்கள் தீயில் அழிந்து போனதாக அப்போதைய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின்மாநில அமைச்சரான, ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் அறிவித்தார். [4] இந்த மிகப் பெரிய இழப்பில் தாதாசாகேப் பால்கேவின் படங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், ராஜா ஹரிச்சந்திரா, (1913), லங்கா தஹான் (1917), கலியா மர்தான் (1919). பிரபாத் பிலிம் கம்பெனி, வாடியா மூவிடோன், பாம்பே டாக்கீஸ் மற்றும் நியூ தியேட்டர்கள் தயாரித்த முக்கியமான படங்களான பக்த பிரஹ்லதா (1932), அமர் ஜோதி (1936), மனோஸ் (1939) ஆஜ் பாதோ (1947) உள்ளிட்ட திரைப்படங்கள் அடங்கும். [5]
மார்ச் 2019 இல் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் மார்ச் 1, 2015 ஆம் நாளுக்கும் செப்டம்பர் 30, 2017 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்திற்கான பதிவுகளை தணிக்கை செய்தபோது 31,000 ரீல்கள் தொலைந்துவிட்டன அல்லது அழிந்துவிட்டன என்று தெரிவித்தார். [6]