தையல் இலை (Patravali, Pattal, Vistaraku, Vistar, Khali) என்பது இந்தியாவில் உணவு உண்ண உலர்ந்த இலைகளைக் கொண்டு செய்யப்படும் உண்கலமாகும். இது பெரும்பாலும் குங்கிலிய இலை, மந்தார இலை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. ஆலிலையும் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. 6 முதல் 8 இலைகளை சிறு ஈர்க்குச்சிகளைக் கொண்டு வட்ட வடிவில் தைத்து இது தயாரிக்கப்படுகிறது.[1] இந்த இலைகள் திருவிழாக்கள் மற்றும் கோயில்களில் பாரம்பரியமாக வழங்கப்படும் சாப்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.[2] இது இந்தியாவில் ஒரு குடிசைத் தொழிலாக, பெண்கள் வீட்டிலிருந்தே செய்யக்கூடியவேலையாக உள்ளது.
பண்டைய காலத்தில் இந்து முனிவர்கள் பிறர் உண்ட பாத்திரங்களைப் பயன்படுத்தாமல் உண்ண இது பரவலாக பயன்படுத்தப்பட்டது. மேலும் இது கோயில் பிரசாதம். திருவிழா விருந்துகள், விருந்தினர்கள் உண்ண வழக்கமாக பயன்படுத்தப்பட்டது.
தையலிலையானது பெரும்பாலும் குங்கிலியம், மந்தாரை, புரசு, பலா போன்ற தாவரங்களின் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முதலில் பச்சையாக சேகரிக்கப்பட இலைகள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு நன்கு வெளியில் காயவைக்கப்படுகின்றன. பின்னர் காய்ந்த இலைகளை தண்ணீரில் உறவைக்கின்றனர். ஊரவைத்த இந்த இலைகளை சுத்தப்படுத்தி துணிகளில் சுற்றி அதன்மீது அகலமான கற்களை பாரமாக வைத்து இலைகளை சமன் படுத்துகின்றனர். இதன்பிறகு மூன்றாக பிளந்த ஈர்க்குச்சியை கொண்டு இலைகளை ஓன்று சேர்த்து தைக்கின்றனர். தைத்த இலைகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி இலைகள்மீது மீண்டும் அகன்ற கல்லை வைத்து சமன்படுத்துவர். இத்தனை நிலைகளைக் கடந்து தையல் இலை உருவாகிறது.[3]
இந்த உண்கலமானது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், சார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், கருநாடகம், தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள வறண்ட ஊரகப் பகுதிகளில் பிரபலமாக உள்ளது.[4] காராநாடகத்தில் உள்ள தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அளிக்கப்படும் அன்னதானத்திற்கு இப்போதும் இந்த தையல் இலைகளே பயன்படுத்தப்படுகின்றன.
வாழை போன்றவை மிகுதியாக வளராத வறண்ட நிலப்பகுதிகளில் இந்த இலைகளை சேகரித்து தைத்து வைத்து பல மாதங்கள் இருப்புவைத்து பயன்படுத்தக் கூடியதாக அக்காலத்தில் இருந்தது. வாழை இலை போன்றவைவற்றை ஓரிரு நாட்கள்தான் இருப்பு வைக்க இயலும் என்ற நிலையில், இந்த தையலிளைகளை நீண்டகாலம் சேமித்து வைத்து பயன்படுத்து இயல்வது சிறப்பு.
தற்காலத்தில் இந்த இலைகளுக்கு அடியில் தாள் போன்றவற்றை ஒட்டி தட்டுபோன்ற விளிம்புகள் கொண்டதாக நேர்த்தியான வடிவமைப்பில் இயந்திரங்களால் தயாரிக்கப்படுகிறது. அதன் பாரம்பரிய சுற்றுச்சூழல் இயல்பு மற்றும் உயிர்ச்சிதைவுறு இயல்பு காரணமாக இதன் பாரம்பரிய மரபு மீண்டு வருகின்றது.