தோரோதி மேரி கெய்லி Dorothy Mary Cayley | |
---|---|
பிறப்பு | 1874 இலங்கை |
இறப்பு | 1955 |
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
பணி | பூஞ்சையியல் வல்லுநர்ர் |
பணியகம் | இயான் இன்னெசு தோட்டக்கலை நிறுவனம் |
அறியப்படுவது | துலிப் மலரின் நிறச்சிதைவு தீநுண்மி |
தோரோதி மேரி கெய்லி (Dorothy Mary Cayley) இலங்கையைச் சேர்ந்த ஒரு நுண்ணுயிரியலாளர் ஆவார். 1927 ஆம் ஆண்டு இவர் துலிப் மலர்களின் நிறம் சிதைவதற்கு காரணம் ஒரு தீநுண்மி என்று கண்டுபிடித்தார்.
கெய்லி 1874 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தார், அங்கு இவரது தந்தை சர் ரிச்சர்ட் கெய்லி 14 ஆவது தலைமை நீதிபதியாக இருந்தார் . கெய்லி தனது ஏழு வயதில் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து இசுடாம்போர்டு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார் . பல்கலைக்கழக கல்லூரியில் தோட்டக்கலை படிப்பதற்கு முன்பு இலண்டன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். [1] கெய்லி குறிப்பாக தாவர நோய் மற்றும் மண்ணில் ஆர்வம் காட்டினார். தோட்டக்கலை கல்வி வாரியத்தின் இறுதித் தேர்வில் நுழைந்தார், இது வாசிப்பில் முதல் வகுப்பு மரியாதையையும் பதக்கத்தையும் இவருக்குப் பெற்றுக் கொடுத்தது. இராயல் தோட்டக்கலை சங்க தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். வாசிக்கும் காலத்தில் தாவரவியல் துறையைச் சேர்ந்த தோட்டங்களின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். [1]
1910 ஆம் ஆண்டில், இயான் இன்னெசு தோட்டக்கலை நிறுவனத்திற்கு தோரோதி தன்னார்வத்துடன் முன்வந்தார். இப்போது இந்நிறுவனம் இயான் இன்னசு மையம் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் விம்பிள்டனின் மெர்டனில் சேர்ந்தார். அங்கு ஆய்வகங்கள் கட்டப்படுவதற்கு முன்பு அவர் மேனர் இல்லத்தின் அறையில் பணிபுரிந்தார். பேட்சன் 1911 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு சிறிய மாணவர் பட்டத்தை வழங்கினார். [2]
தோரோதி ஒரு திறமையான ஓவியக் கலைஞராகவும் இருந்தார். ஆய்வுக்காகப் பரிசோதிக்கும் பூஞ்சையை வரைந்து விடுமுறை நாட்களில் வண்ணம் தீட்டினார்.[1]
1914 மற்றும் 1918 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தோரோதி இராணுவ குதிரைகள் படுப்பதற்காகவும், விக்கர்சு நிறுவனத்தின் விமான தொழிற்சாலைக்கான கருவிகள் அமைப்பதற்காகவும் சாவர்னேக் காட்டில் உள்ள காட்டுப் புதர்களை வெட்டி போர் முயற்சிக்கு பங்களித்தார். போரின் கடைசி 18 மாதங்களுக்கு உதவி செய்வதற்காக 1916 ஆம் ஆண்டு தனது சிறு மாணவர் பதவியை பணித்துறப்பு செய்தார். இலண்டனில் உள்ள லிசுடர் நோய்த்தடுப்பு மருத்துவ நிறுவனத்திற்கு தசை இறுக்க நோய் பற்றி அறிவுறுத்தி இராயல் இராணுவ மருத்துவ விசாரணைகளுக்கு கெய்லி உதவினார். [1]
சர் ஆல்ஃபிரட் டேனியல் ஆலின் ஆய்வுகள் அடிப்படையில், கெய்லி "துலிப் மலர்களில் நிறச்சிதைவு என்ற நோயை ஆராயத் தொடங்கினார் - துலிப் இதழ்களில் இறகு போன்ற வடிவங்கள் உருவாதலே துலிப் மலர்களில் நிறச்சிதைவு என்ற நோயாகும். [3] இலைக்கிழங்கு வெட்டி ஒட்டும் சோதனைகள் மூலம், துலிப் மலர்களின் நிறச்சிதைவு ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு மாற்றப்படுவதை இவர் கண்டுபிடித்தார். இதற்கு காரணமான தொற்று முகவர் ஒரு தீநுண்மியே என்று இவர் முடிவுக்கு வந்தார். [3] உண்மையான நிறங்களை விரும்பும் துலிப் மலர் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் இலைகிழங்குகளில் தொற்றுநோயை தடுத்து நிறுத்துவதன் மூலம் நிறம் உடைவதை தடுக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சி காட்டியது. (எடுத்துக்காட்டு:அசுவினி). [4] [5] 1928 மற்றும் 1932 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டுரைகளில் கெய்லி தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி விவரித்தார். [6] [5]
கெய்லி மற்ற நுண்ணுயிரிகளிலும் ஆர்வம் காட்டினார். பட்டாணி மற்றும் பழங்களின் நோய்களில் இவர் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். ஆப்பிள் தளிர்களைக் கொல்லும் பூஞ்சையின் வாழ்க்கை வரலாறு உட்பட. பல நுண்ணுயிரிகளில் இவர் ஆய்வுகள் மேற்கொண்டார். பூஞ்சைகளில் பாலியல் இனப்பெருக்கம் பற்றிய புரிதலை மேம்படுத்தினார். காளான் உரம் பற்றியும் ஆய்வு செய்தார். [1]
1919 ஆம் ஆண்டில், கெய்லி இயான் இன்னெசு தோட்டக்கலை நிறுவனத்திற்குத் திரும்பினார், ஆரம்பத்தில் மாணவராகவும் பின்னர் 'பூஞ்சை வல்லுநர்' என்ற பட்டத்துடன் பணியாற்றினார். இவருடைய ஊதியமும் £ 350 அளவுக்கு உயர்ந்தது. 1928 ஆம் ஆண்டுவாக்கில், கெய்லிக்கு துணை இயக்குனரின் பொறுப்பும் வந்தது. [1] 1938 ஆம் ஆண்டு இயான் இன்னசு தோட்டக்கலை நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார். [2]
1919 ஆம் ஆண்டு மரபியல் சங்கத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார் [1] 1939 இல் இவர் பிரித்தானிய பூஞ்சையியல் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். [7]