நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்ட காடு | |
---|---|
நக்கிள்ஸ் மலைத்தொடரின் ஒரு காட்சி | |
அமைவிடம் | மத்திய மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | மாத்தளை |
ஆள்கூறுகள் | 7°27′N 80°48′E / 7.450°N 80.800°E |
நிருவாக அமைப்பு | வனப் பாதுகாப்புத் திணைக்களம் |
உலகப் பாரம்பரியக் களம் | 2010 (இலங்கையின் மத்திய மலைநாடு என்பதற்குள்)[1] |
நக்கிள்ஸ் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | Natural |
ஒப்பளவு | ix, x |
உசாத்துணை | 1203 |
UNESCO region | Asia-Pacific |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2010 (34th தொடர்) |
நக்கிள்ஸ் மலைத்தொடர் அல்லது தும்பர மலைத்தொடர் (சிங்களம்: දුම්බර කඳුවැටිය) எனப்படுவது இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடராகும். இது தெற்கிலும் கிழக்கிலும் மகாவலிப் பள்ளத்தாக்கினாலும் மேற்கில் மாத்தளைப் பள்ளத்தாக்கினாலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலிருந்து பிரிக்கப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் நக்கிள்ஸ் எனப் பெயரிடப்படக் காரணம் கண்டி மாவட்டத்திலிருந்து இதனைப் பார்க்கும் போது இது வளைந்தும் நெளிந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் ஆங்காங்கே இருப்பதனால் கையை இறுகப் பொத்தியது போன்று தோற்றமளிப்பதாகும். இதற்கு பிரித்தானிய இலங்கையின் நிலவரைபடவியலாளர்களால் இப்பெயர் அளிக்கப்பட்டதாயினும் பண்டைக் காலந் தொட்டே சிங்கள மக்கள் இதனை தும்பர கந்துவெட்டிய (பனிசூழ் மலைத்தொடர்) என்றே அழைக்கின்றனர்.
நக்கிள்ஸ் மலைத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியான தன்மைகளைக் கொண்டிருக்கும். இது லக்கலையிலிருந்து உருகலை வரை மூன்று வெவ்வேறு மலைத்தொடர்களாகக் காட்சியளிப்பதுடன் அவற்றுக்குக் கீழே பல உயரங் குறைந்த மலைத்தொடர்கள் சமாந்தரமாக இருப்பதும் காணக்கூடியதாக உள்ளன. அதேவேளை, இது இலங்கையின் மிக அழகான மலைத்தொடர்களுள் ஒன்றாகும். சில இடங்களில் அடர்ந்த ஈரலிப்பான காடுகளும் அருவிகளும் இருக்கும். வேறு சில இடங்களிற் செறிவு குறைந்த உலர் காடுகள் காணப்படும். இது இலங்கையின் பல்வேறு பகுதிகளினதும், எல்லா வகையான காலநிலைகளையும் ஒருங்கே கொண்டிருப்பதால் இலங்கையின் எப்பாகத்திற்குமுரிய தன்மைகளை இதிற் காணலாம். இதனாலேயே இது பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியமாகின்றது.
இதன் உயர்ந்த பகுதிகளில் ஆங்காங்கே மேகக் காடுகள் காணப்படுகின்றன. அக்காடுகளில் ஏராளமான தாவர இனங்களும் விலங்கினங்களும் காணப்படுகின்றன. அவற்றிற் சில இலங்கைக்கு அகணியமானவையாகும். அதாவது அத்தாவர, விலங்கினங்கள் உலகின் வேறெப் பகுதியிலும் காணப்படாதவையாகும். இம்மலைத்தொடர் இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 0.03% அளவையே கொண்டிருப்பினும் இலங்கையின் மிகக் கூடிய உயிர்ப் பல்வகைமையைக் கொண்ட பகுதியாக இது விளங்குகிறது.