நசிரா அக்தர் (Nasira Akhter) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலம் குல்காம் நகரத்தைச் சேர்ந்த ஒரு கண்டுபிடிப்பாளர் ஆவார். 1972 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார்.[1][2] பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய இவர் மூலிகைகளைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்.[1] காசுமீர் பல்கலைக் கழக அறிவியல் கருவி மையத்தில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலித்தீன் மக்கும் தன்மையை உருவாக்குவதற்கான வழிமுறையை உருவாக்கினார்.[3] 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்படாத ஒரு மூலிகையைப் பயன்படுத்தி இதற்கான ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். [4] நசிரா அக்தரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு பன்னாட்டு மகளிர் தினத்தன்று குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்திடம் இருந்து நாரி சக்தி புரசுகார் எனப்படும் பெண் சக்தி விருதைப் பெற்றார்.[3] குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நசிரா அக்தருடன் சமூக தொழில்முனைவாளர் அனிதா குப்தா, இயற்கை விவசாயியும் பழங்குடியின செயற்பாட்டாளருமான உஷா பென் தினேசுபாய் வாசவா, இன்டெல் -இண்டியா நிறுவன தலைமை நிர்வாகி நிவ்ருதி ராய், மாற்றுத்திறளாளி கதக் நடனக் கலைஞர் சைலி நந்தகிசோர், கணிதவியல் அறிஞர் நீனா குப்தா உள்ளிட்டோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.[5]