நசிருதீன் புக்ரா கான் | |
---|---|
வங்காள ஆளுநர் & வங்காள சுல்தான் | |
ஆட்சிக்காலம் | 1281–1287 |
முன்னையவர் | துக்ரால் துகன் கான் |
பின்னையவர் | உருக்னுதீன் கைகௌசு |
குழந்தைகளின் பெயர்கள் | மியூசு உத் தீன் கைதாபாத்து உருக்னுதீன் கைகௌசு |
தந்தை | கியாசுத்தீன் பல்பான் |
நசிருதீன் புக்ரா கான் (Nasiruddin Bughra Khan) வங்காளத்தின் ஆளுநராகவும் (1281 – 1287) பின்னர் சுதந்திர சுல்தானாகவும் (1287 – 1291) இருந்தார். இவர் தில்லி சுல்தான் கியாசுதீன் பால்பனின் மகன். முன்னதாக புக்ரா கான் சமானா (பட்டியாலா) மற்றும் சனம் (சங்ரூர்) ஆகிய பகுதிகளின் ஆளுநராக இருந்தார்.[1]
கௌடாவின் ஆளுநரான துக்ரால் துகன் கானின் கிளர்ச்சியை அடக்க புக்ரா கான் தனது தந்தை கியாசுதீன் பால்பனுக்கு உதவினார். இதனால் புக்ரா வங்காளத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவரது மூத்த சகோதரர் இளவரசர் முகம்மதுவின் மரணத்திற்குப் பிறகு, சுல்தான் கியாசுதீனால் தில்லியின் அரியணையை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் புக்ரா தான் வங்காள ஆளுநர் பதவியிலேயே தொடர முடிவெடுத்து அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.[1] சுல்தான் கியாசுதீன் அதற்குப் பதிலாக இளவரசர் முகம்மதுவின் மகனான உருக்னுதீன் கைகாசை [2] அரியணையில் அமர்த்தினார்.[1]
1287 இல் கியாசுதீனின் மரணத்திற்குப் பிறகு, புக்ரா கான் வங்காளத்தின் சுதந்திரத்தை அறிவித்தார். தில்லியின் பிரதமரக இருந்த நிஜாமுதீன், நசிருதீன் புக்ரா கானின் மகன் கைகாபாத்தை தில்லியின் சுல்தானாக நியமித்தார். ஆனால் கைகாபாத்தின் திறமையின்மையால் தில்லியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. நிஜாமுதீனின் கையில் கைகாபாத் வெறும் பொம்மையாகவே இருந்தார். இதனை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்த புக்ரா கான், தில்லியை நோக்கி பெரும் படையுடன் சென்றார். அதே நேரத்தில், நிஜாமுதீன் கைகாபாத்தை அவரது தந்தையை எதிர்கொள்ள பெரும் படையுடன் முன்னேறும்படி கட்டாயப்படுத்தினார். இரு படைகளும் சரயு ஆற்றங்கரையில் சந்தித்தன. ஆனால் தந்தையும் மகனும் சண்டையை எதிர்கொள்வதற்கு பதிலாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இது, தில்லியில் இருந்து புக்ரா கான் சுதந்திரம் அடைந்ததை கைகாபாத் ஒப்புக்கொண்டதுடன், நஜிமுதீனை அவரது பிரதமர் பதைவியிலிருந்தும் நீக்கியது. புக்ரா கான் கௌடாவுக்குத் திரும்பினார்.
1289 இல் கைகாபாத்தின் மரணம் புக்ரா கானை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, 1291 இல் தனது மற்றொரு மகனான உருகுனுதீன் கைகௌஸுக்காக வங்காளத்தின் அதிகாரத்தை விட்டுக்கொடுத்தார்.[3]