நசீர் உசைன் (Nasir Hossain (பிறப்பு: நவமபர் 30, 1991) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.[1] இவர் வங்காளதேச அணி சார்பாக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டில் அறிமுகமானார். செப்டமபர், 2011 இல் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பரிஷால் மாகாணத் துடுப்பாட்ட அனி, சிட்டகொங் மாகாணத் துடுப்பாட்ட அணி, ராஜ்ஹாசி மாகாண அணி, மற்றும் ராங்பூர் மாகாணத் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகள் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் வங்காளதேசத்தில் உள்ள போக்ராவில் வளர்ந்தார்.
நவம்பர், 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய போட்டிகள் தொடரில் 13 பேர் கொண்ட வங்காளதேச அணியில் இடம்பிடித்தார்.[2] ஆப்கானித்தானில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றது.[3]
2012 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட வாரியம் ஆறு அணிகள் கொண்ட வங்காளதேச பிரீமியர் லீக் இருபது20 தொடரை நடத்தத் திட்டமிட்டது. அதற்காக நடந்த வீரர்கள் ஏலத்தில் குல்னா ராயல் பெங்கால் அணி இவரை 200,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[4][5]
ஆகஸ்டு 14, 2011 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அனிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 58 ஓட்டங்களில் 6 இலக்குகளை இழந்தது.[6] அந்த நிலையில் 19 வயதான நசீர் உசைன் 92 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்து அனியின் மொத்த ஓட்டங்களை 188 ஆக உயரச் செய்தார். ஆனால் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி ஏழு இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் இவர் வீசிய பந்தில் கீகன் மேத் காயமானார்.[7]
சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரினை 3-2 என இழந்தது. பின் அக்டோபர் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து ஒரு பன்னாட்டு இருபது20 , மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியது.இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 54 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.[8] கீரன் பவல் இலக்கினை தனது முதல் இலக்காக வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 3 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகளை 61 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்ய உதவினார்.[9] இந்தத் தொடரினையும் 2-1 என வங்காளதேச அணி இழந்தது.
நவம்பர் மாதத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியது. அதன் இரண்டாவது போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். அந்தப் போட்டியில் 134 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். இருந்தபோதிலும் அந்தப் போட்டியில் வங்காளதேச அணி தோல்வி அடைந்தது.[10] மார்ச் 11, 2013 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.அந்தப் போட்டியில் 151 பந்துகளில் 100 ஓட்டங்களை எடுத்தார். அதில் 9 நான்குகளும் அடங்கும். பின் அதே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் 59 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை எடுத்தார். மூன்றாவது போட்டியில் 27 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்தார்.[11]