நண்பகலை அறியும் கருவி அல்லது இரட்டை பிம்பம் பார்க்கும் கருவி (dipleidoscope) என்பது துல்லியமாக நண்பகலை கணிக்க உதவும் ஒரு கருவியாகும். இதன் பெயர் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது. இக்கருவி, சிறிய தொலைநோக்கி மற்றும் முப்பட்டகத்தைக் கொண்டுள்ள அமைப்பாகும். இது சூரியனின் இரட்டை பிம்பங்களை உருவாக்கும். இந்த இரண்டு பிம்பங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் நேரம், துல்லியமான நண்பகலைக் குறிக்கும். இக்கருவி பத்து விநாடிகளுக்குள் உண்மையான நண்பகலை நிர்ணயிக்கும் திறன் கொண்டது.
19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் நண்பகலை அறியும் கருவியை ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி முதலில் கண்டறிந்தார்.
1830ல் லண்டன் நகரைச் சேர்ந்த எட்வர்ட் ஜான் டெண்ட் கால அளவி மற்றும் கடிகார தயாரிப்பாளர். இவர் சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் காலத்தைக் கணிக்கும் கடிகாரத்தை வடிவமைத்தார். (ஆனால் 1690 ஆம் ஆண்டில் ஓலே ரோமரால் உருவாக்கப்பட்ட கால நோக்கி மிகவும் சிக்கலானதாகவும் விலையுயர்ந்ததாகவும் இருந்தது).
1840 களில் நிழலைப் பயன்படுத்திச் செயல்படும் கருவிக்கு பதிலாக எதிரொளிப்பை பயன்படுத்தி செயல்படும் கடிகாரத்தை வடிவமைத்தார். இரண்டு ஆண்டுகள் உழைப்பிற்குப்பின் புதிய கடிகாரத்தை வடிவமைத்து, அதற்கு காப்புரிமையும் பெற்றார் (காப்புரிமை எண் 9793). [1] இந்தக் கருவியை சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். 1851 ல் நடைபெற்ற பெரிய பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.